32°C

’போட்டோகிராபர்’ -விமர்சனம்!

admin Published: August 7, 2026 3 நிமிட வாசிப்பு Running News
எழுத்து:
யற்கை எழில் கொஞ்சும் அடர்ந்த வனப்பகுதியை மையமாகக் கொண்டு ஒரு சாகசப் பயணத்தையும், தனிமனிதனின் உயிர் பிழைப்புக்கான போராட்டத்தையும் காட்சிப்படுத்த முயன்றிருக்கிறது ‘போட்டோகிராபர்’ திரைப்படம். ஒரு ஒளிப்படக் கலைஞனின் பயணத்தைக் கருவாக வைத்து, அதற்குள் மர்மம், அமானுஷ்யம் மற்றும் உளவியல் சார்ந்த விஷயங்களைக் கலந்து தந்திருக்கிறார் கதை நாயகனும் இயக்குநருமான அஷ்ரப். இருப்பினும், திரைக்கதையில் காணப்படும் மெத்தனமான நகர்வும், காட்சிகளில் உள்ள தெளிவின்மையும் முழுமையான சினிமா அனுபவத்தைத் தருவதில் பெரிய தடையை ஏற்படுத்தியுள்ளன.
படக் கதை
புகைப்படக் கலைஞரான நாயகன், இதுவரை உலகிற்குத் தெரியாத, காட்டின் மிக ஆழமான பகுதியில் இருக்கும் ஒரு அபூர்வ மரத்தைப் படம்பிடிக்கும் நோக்கில் மேற்குத் தொடர்ச்சி மலைக்குச் செல்கிறார். ஆனால் எதிர்பாராதவிதமாக வழிதவறி, இதுவரை சென்றவர்கள் யாரும் திரும்பியிராத பேரபாயம் நிறைந்த வனப்பகுதிக்குள் மாட்டிக் கொள்கிறார். அங்கே தனியாளாகச் சிக்கித் தவிக்கும் அவர், தப்பும் வழி தெரியாமல் தவிப்பதோடு, ஒவ்வொரு அடியிலும் பல்வேறு மர்மமான மற்றும் உளவியல் ரீதியான அச்சுறுத்தல்களைச் சந்திக்கிறார். இறுதியில் அவர் தேடிச் சென்ற மரத்தைக் கண்டடைந்தாரா, அந்த அமானுஷ்யக் காட்டிலிருந்து உயிருடன் திரும்பினாரா என்பதை விவரிக்கிறது கதை.
https://www.youtube.com/watch?v=0c78E4Fr-OI
நடிப்பு
இயக்கத்தோடு நாயகனாகவும் களமிறங்கியுள்ள அஷ்ரப், வீரா என்ற முதன்மைப் பாத்திரத்தில் படம் முழுவதையும் தாங்கிப் பிடிக்க முயன்றுள்ளார். ஆரம்பக் காட்சிகளில் இவரது பங்களிப்பு சற்று மேலோட்டமாகத் தெரிந்தாலும், காட்டின் நடுவே தனியாகச் மாட்டித் தவிக்கும் காட்சிகளில் பயம், பதற்றம் மற்றும் ஏக்கம் போன்ற உணர்ச்சிகளைத் தனது முகபாவனைகள் மூலமாக வெளிப்படுத்தி, திரைக்கதைக்கு ஓரளவிற்கு வலு சேர்த்துள்ளார்.
நாயகியாக வரும் அனனி சுவாமிநாதன் சில காட்சிகளிலேயே வந்தாலும் தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் செவ்வனே செய்துள்ளார். நண்பர்களாக வரும் கருணாகரன் தனது எதார்த்தமான நடிப்பால் நிம்மதி தருகிறார்; ‘உரியடி’ சிவாவும் தன் பங்கிற்கு நேர்த்தியாக நடித்திருக்கிறார்.
தந்தையாக வரும் ‘ஆடுகளம்’ நரேன் தனது முதிர்ச்சியான நடிப்பால் காட்சிகளுக்குக் கனம் சேர்க்கிறார். தாயாக நடித்திருக்கும் தேவி மகேஷ், அளவான நடிப்பின் மூலம் பாச உணர்வுகளை அழகாகக் கடத்தியுள்ளார்.
தொழில்நுட்பக் கலைஞர்கள்
ஒளிப்பதிவாளர் ரயீஷ் அஹ்மத் காட்டின் பிரம்மாண்டத்தைப் படம்பிடிக்க முயன்றிருந்தாலும், பெரும்பாலான காட்சிகள் பகல் நேரத்திலும் அடர்த்தியற்றப் பகுதிகளிலும் படமாக்கப்பட்டிருப்பதால் த்ரில்லர் படத்திற்குரிய அச்ச உணர்வு நமக்கு ஏற்படவில்லை. அதோடு, படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள விஎஃப்எக்ஸ் (VFX) காட்சிகள் மிகச் சாதாரணமான தரத்தில் இருப்பது பலவீனம்.
ராஜ்குமார் சந்திரசேகரனின் பின்னணி இசையும், வித்தியாசமான ஒலி வடிவமைப்பும் (Sound Design) படத்திற்குப் பெரும் தூணாக நிற்கின்றன. குறிப்பாக நாயகன் மட்டுமே உலவும் இரண்டாம் பாதியில், காட்சிகளின் தீவிரத்தைப் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பது இவரது இசைதான்.
படத்தொகுப்பாளர் ஆர்.சி.பிரணவ் இரண்டாம் பாதியை விறுவிறுப்பாக நகர்த்த உதவியிருந்தாலும், முதல் பாதியில் தேவையில்லாமல் நேரத்தைக் கடத்தும் காட்சிகளைக் கத்தரித்திருக்கலாம்.
அம்மா – மகன் செண்டிமெண்ட், இயற்கை மீதான ஈர்ப்பு என இரண்டாம் பாதியில் சில சுவாரஸ்யமான முடிச்சுகள் இருந்தாலும், முதல் பாதியின் சுவாரஸ்யமற்ற நகர்வும், பொறுமையைச் சோதிக்கும் காட்சிகளும் படத்தின் தரத்தைக் குறைத்து விடுகின்றன. ஒரு நல்ல களத்தைக் கையில் எடுத்த இயக்குநர், திரைக்கதையை இன்னும் சுவாரஸ்யமாக அமைத்திருக்கலாம்.
மார்க்: 2/5