பூமியின் வளிமண்டலத்தைச் சூடாக்கி வரும் பாரம்பரியப் புதைபடிவ எரிபொருட்களுக்கு (Fossil Fuels) மாற்றாக, சுற்றுச்சூழலைத் தூய்மையாக வைக்கும் ‘உயிரி எரிபொருட்கள்’ (Biofuels) குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி ‘உலக உயிரி எரிபொருள் தினம்’ (World Biofuel Day) உலகெங்கும் கடைப்பிடிக்கப்படுகிறது. நிலக்கரி, பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டால் உருவாகும் கடுமையான காற்று மாசுபாடு, காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதல் போன்ற அச்சுறுத்தல்களுக்கு மிகச் சிறந்த தீர்வாக இந்த மாற்று ஆற்றல் ஆதாரங்கள் பார்க்கப்படுகின்றன.
வரலாற்றுச் சான்று: 1893-ல் விதைக்கப்பட்ட விதை
உலக உயிரி எரிபொருள் தினம் ஆகஸ்ட் 10-ல் கொண்டாட்டப்படுவதற்குக் பின்னால் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவியல் வெற்றி ஒளிந்துள்ளது.
1893-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 அன்று, ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற மெக்கானிக்கல் பொறியாளர் சர் ருடால்ஃப் டீசல் (Sir Rudolf Diesel), நிலக்கடலை எண்ணெய்யைக் (Peanut Oil) கொண்டு முதன்முதலில் ஒரு இயந்திரத்தை (Engine) வெற்றிகரமாக இயக்கிக் காட்டினார்.
அன்றே அவர், “எதிர்காலத்தில் தாவர எண்ணெய்கள், பெட்ரோலியம் மற்றும் நிலக்கரிப் பொருட்களுக்கு நிகரான முக்கியத்துவத்தைப் பெறும்” என்று கணித்துக் கூறினார். அவரது இந்த வரலாற்றுச் சாதனையைக் கௌரவிக்கும் வகையிலேயே ஆகஸ்ட் 10-ஆம் தேதி இத்தினமாக அறிவிக்கப்பட்டது.

உயிரி எரிபொருள் என்றால் என்ன? அவற்றின் தலைமுறைகள் (Generations)
தாவரங்கள், விவசாயக் கழிவுகள், விலங்குப் பொருட்கள் மற்றும் நுண்பாசிகளிலிருந்து (Algae) தயாரிக்கப்படும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரங்களே உயிரி எரிபொருட்கள் ஆகும். இவை முக்கியமாக ‘பயோடீசல்’ (Biodiesel) மற்றும் ‘பயோஎத்தனால்’ (Bioethanol) என இரு பிரிவுகளாகக் கையாளப்படுகின்றன.
தொழில்நுட்ப வளர்ச்சியின் அடிப்படையில் உயிரி எரிபொருட்கள் நான்கு தலைமுறைகளாகப் பிரிக்கப்படுகின்றன:
-
முதல் தலைமுறை (First Generation): சர்க்கரை, சோளம், கரும்பு மற்றும் உணவு சார்ந்த தாவர எண்ணெய்களிலிருந்து தயாரிக்கப்படுபவை.
-
இரண்டாம் தலைமுறை (Second Generation): உணவுப் பயிர் அல்லாத விவசாயக் கழிவுகள், மரத்தூள் மற்றும் பயிர் எஞ்சிய பொருட்களிலிருந்து (Cellulosic biomass) உருவாக்கப்படுபவை.
-
மூன்றாம் தலைமுறை (Third Generation): அதிவேகமாக வளரக்கூடிய நுண்பாசிகள் (Algae) மூலம் தயாரிக்கப்படுபவை.
-
நான்காம் தலைமுறை (Fourth Generation): மரபணு மாற்றம் செய்யப்பட்ட நுண்உயிரிகள் மற்றும் கார்பனை உறிஞ்சி ஆற்றலாக மாற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்கள்.
சுற்றுச்சூழலுக்கும் பொருளாதாரத்திற்கும் தரும் இணையற்ற நன்மைகள்
-
கார்பன் உமிழ்வு குறைவு: பெட்ரோல், டீசலை விட உயிரி எரிபொருட்கள் மிகக் குறைந்த அளவே நச்சு வாயுக்களை வெளியிடுகின்றன. இவை கார்பன் நடுநிலைமையை (Carbon Neutrality) அடைய உதவுகின்றன.
-
கழிவு மேலாண்மை: பயன்படுத்திய சமையல் எண்ணெய், விவசாயக் கழிவுகள் மற்றும் நகரக் குப்பைகளை எரிபொருளாக மாற்றுவதால் கழிவு மேலாண்மை மிக எளிதாகிறது.
-
பொருளாதாரப் பாதுகாப்பு: இந்தியா போன்ற கச்சா எண்ணெய் இறக்குமதியை பெருமளவில் நம்பியிருக்கும் நாடுகளுக்கு, உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் எத்தனால் மற்றும் பயோடீசல் மூலம் கோடிக்கணக்கான அந்நியச் செலவாணி சேமிக்கப்படுகிறது.
-
விவசாயிகளின் வருமானம் அதிகரிப்பு: விவசாயக் கழிவுகளுக்கு நல்ல விலை கிடைப்பதால், கிராமப்புறப் பொருளாதாரமும் விவசாயிகளின் வாழ்வாதாரமும் உயர்கிறது.
உயிரி எரிபொருள் பற்றிய சில அரிய தகவல்கள்
-
பயன்படுத்திய சமையல் எண்ணெய் புரட்சி: உணவகங்களில் மீண்டும் மீண்டும் சூடாக்கப்பட்டு வீணாகும் சமையல் எண்ணெய்யைச் சேகரித்து, ‘RUCO’ (Repurposed Used Cooking Oil) திட்டத்தின் கீழ் பயோடீசலாக மாற்றும் முயற்சிகள் இந்தியாவில் தீவிரமாக நடைபெறுகின்றன.
-
விமானப் போக்குவரத்து மாற்றம்: வழக்கமான ஏவியேஷன் எரிபொருளுடன் (ATF) உயிரி எரிபொருளைக் கலந்து இயங்கும் ‘சுற்றுச்சூழல் நட்பு விமானங்கள்’ (Sustainable Aviation Fuel – SAF) தற்போது வணிக ரீதியாகப் பறக்கத் தொடங்கியுள்ளன.
-
ஜட்ரோபா மற்றும் பொன்னெண்ணெய்: இந்தியாவில் ‘ஜட்ரோபா’ (Jatropha – காட்டாமணக்கு) மற்றும் புங்கை மரங்களின் விதைகளிலிருந்து அதிகளவில் பயோடீசல் தயாரிக்கப்படுகிறது.
எதிர்காலத் தலைமுறைக்கு தூய்மையான காற்றையும், வளமான பூமியையும் விட்டுச்செல்ல புதைபடிவ எரிபொருட்களிலிருந்து விடுபட்டு, பசுமை ஆற்றல் பாதையில் நாம் விரைந்து பயணிப்பதே இத்தினத்தின் முதன்மைச் செய்தியாகும்.
ரமாபிரபா

