பேடிஎம் ‘ரூபே டெபிட் கார்டு’ வசதி அறிமுகம்!

பேடிஎம் ‘ரூபே டெபிட் கார்டு’ வசதி அறிமுகம்!

போன 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி பணமதிப்பு நீக்கத்தை அறிவித்தார். இந்தியா முழுவதும் ரொக்கப் பரிவர்த்தனை செய்ய முடியாமல் தவித்தனர். அரசும் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் நோக்கத்தை மாற்றியது. அனைவரையும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்குள் கொண்டு வருவதும் முறைசார்ந்த பொருளாதார நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்துவதே பிரதான நோக்கம் என்று அறிவித்தது. இந்த சூழ்நிலையை நிதித் துறை தொழில் நிறுவனங்களான பேடிஎம், மொபிக்விக் போன்றவை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டன. குறிப்பாக பேடிஎம் நிறுவனம் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டது. பணமதிப்பு நீக்கம் அறிவித்த அடுத்த நாளே பிரதமர் மோடியை வாழ்த்தி அனைத்து நாளிதழ்களிலும் விளம்பரத்தை கொடுத்தது. ரொக்க பரிவர்த்தனை குறைந்ததால் அடுத்த 15 நாட்களில் பேடிஎம் நிறுவனத்தின் பரிவர்த்தனை எண்ணிக்கை 70 லட்சமாக உயர்ந்தது. பணமதிப்பு நீக்கத்துக்கு முன்னரே 15 கோடி வாடிக்கையாளர்களை கொண்டிருந்த பேடிஎம் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதன் பிறகு இன்னும் அதிகரித்தது. அப்போதிலிருந்து நிதி தொழில்நுட்பத்துறையில் பேடிஎம் நிறுவனம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு இந்தியர்கள் டிஜிட்டலுக்கு மாறும் போக்கை சரியாக கணித்து அதற்கேற்றார்போல் உத்திகளை பேடிஎம் வகுத்து வருகிறது. கடந்த நவம்பர் மாத இறுதியில் பேடிஎம் பேமென்ட் வங்கியை தொடங்கியது. இந்தியாவில் மிகப் பெரிய தொழில்  நுட்பங்ளுடன் கூடிய தொழில்நுட்ப வங்கியாக உருவாக வேண்டும் எனும் நோக்கத்தோடு இந்த பேமென்ட் வங்கியை பேடிஎம் நிறுவனம் தொடங்கியிருக்கிறது.

மேலும் இந்த பேமென்ட் வங்கியை தொடர்ந்து இந்தியா முழுவதும் 1 லட்சம் ஏடிஎம் மையங்களை அமைப்பதற்கு இந்நிறுவனம் இலக்கு வைத்துள்ளது. ஏற்கெனவே இ-காமர்ஸ் துறையில் சுமார் 16,340 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்திருந்த பேடிஎம் நிறுவனம் 1 லட்சம் ஏடிஎம் மையங்களை அமைப்பதற்காக அடுத்த மூன்று ஆண்டுகளில் சுமார் 3,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டிருக்கிறது. அது மட்டுமின்றி இந்த பேடிஎம் நிறுவனம் தங்களது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் டெபிட் கார்டு வசதியை அறிமுகம் செய்துள்ளது.

இத்திட்டம் குறித்து பேடிஎம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரி யுமான ரேணு செட்டி, “பேடிஎம் வாடிக்கையாளர் பயன்பெறும் வகையில் தற்போது பேடிஎம் ‘ரூபே டெபிட் கார்டு’ வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் நாடெங்கிலும் உள்ள பேடிஎம் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் பணப்பரிவர்த்தனைகள் செய்துகொள்ளலாம். வாடிக்கையாளர்கள் தங்கள் அன்றாடப் பொருள்கள் வாங்கும் கடைகளில் மற்ற வங்கிகளின் டெபிட் கார்டுகளை ஸ்வைப் செய்வது போலவே, பேடிஎம் டெபிட் கார்டுகளையும் ஸ்வைப் செய்து கொள்ளலாம். இந்தச் சேவையை ரூ.120 செலுத்தி பேடிஎம் செயலியில் முன்பதிவு செய்தால், டெபிட் கார்டுகள் வாடிக்கையாளர்களின் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜீரோ பேலன்ஸ் கணக்குகளுடன் பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கிச் சேவை தொடங்கப்பட்டது. தற்போது இந்தியாவில் பேடிஎம் வங்கியைப் போல ஏர்டெல் பேமென்ட் வங்கி, இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி, பினோ பேமென்ட் வங்கி ஆகிய வங்கிகள் இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!