June 4, 2023

பத்ம விருதுகள் 2020 – அறிவிப்பு!

இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்ட 12 பேருக்கு டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி கௌரவிக்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க இருக்கின்றனர்.

ஆண்டுதோறும் குடியரசு தினத்தையொட்டி பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப் பட்டுள்ளது. சமூக சேவை, ஆன்மிகம், கலை, மருத்துவம், இலக்கியம், பொறியியல், கல்வி, விளையாட்டு, அறிவியல் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த விருதுகள் அளிக்கப்படுகின்றன.

இதில் 7 பேருக்கு பத்ம விபூஷன் விருதுகளும், 16 பேருக்கு பத்ம பூஷன் விருதுகளும், 118 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகளும் வழங்கப்பட உள்ளன. விருது பெறுபவர்களில் 34 பேர் பெண்கள், 18 பேர் வெளிநாட்டவர், வெளிநாடு வாழ் இந்தியர் மற்றும் மறைந்த 12 பேருக்கு விருது அறிவிக்கப் பட்டுள்ளது

மறைந்த முன்னாள் நிதியமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அருண் ஜேட்லி, முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ஜார்ஸ் பெர்னான்டஸ் , உடுப்பி பெஜாவர் மடாதிபதி ஆகியோருக்கு பத்ம விபூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மறைந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமுக்கு பத்ம விபூஷன் விருதும், பாட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவுக்கு பத்மபூஷன் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா, தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் வேணு ஸ்ரீநிவாசன், நாகாலாந்து முன்னாள் முதல்வர் எஸ்.சி.ஜமீர், ஜம்மு காஷ்மீர் அரசியல் தலைவர் முசாபர் ஹூசைன் பெய்க் ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தைச் சேர்ந்த அமர் சேவா சங்கத்தின் நிறுவனர் மாற்றுத்திறனாளி சமூக சேவகர் எஸ்.ராமகிருஷ்ணன், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சமூக சேவகர் ஜெகதீஷ் லால் அவுஜா, உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சமூக சேவகர் முகமது ஷரீஃப், கேரளாவை சேர்ந்த பொம்மலாட்ட கலைஞர் மூழிக்காள் பங்கஜாக்சி, ஏழை குழந்தைகளுக்கு கல்வி உதவி அளித்த கர்நாடக பழ வியாபாரி ஹரேகலா ஹஜப்பா ஆகியோர் என 21 பேர் பத்ம விருது பட்டியலில் இடம் பெற்று உள்ளனர்.

இந்த ஆண்டு பத்ம விருதுக்கு 50,000 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.