விவசாய முதல்-அமைச்சர் ஓமந்தூரார்!

விவசாய முதல்-அமைச்சர்  ஓமந்தூரார்!

ஓமந்தூர் பி.ராமசாமி, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகில் உள்ள ஓமந்தூர் என்ற சிறிய கிராமத்தில் 1-2-1895 அன்று முத்துராம ரெட்டியார், அரங்கநாயகி தம்பதிக்கு மகனாக பிறந்தார்.  உயர்   நிலைக் கல்வி பயின்றபோது தந்தையார் மறைந்துவிட்டதால், விவசாயத்தை கவனித்து வந்தார். 1910-ம் ஆண்டு சிங்காரத்தம்மாள் என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். 1912-ம் ஆண்டு அவரது அரசியல் மற்றும் சுதந்திர போராட்ட வாழ்க்கை தொடங்கியது. தென்ஆற்காடு மாவட்ட காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மது ஒழிப்புக்காக கள்ளுக்கடை, சாராயக் கடைகள் முன்பு நடந்த போராட்டங்களை தலைமை தாங்கி நடத்தினார். உப்பு சத்தியாக்கிரக போராட்டம், அன்னிய துணி புறக்கணிப்பு போராட்டம் போன்ற போராட்டங்களில் பங்கேற்று கைதாகி சிறை சென்றார்.

1947-ம் ஆண்டு மார்ச் மாதம் 23-ந்தேதி தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்றார். மக்களின் நன்மைக்காக தான் நாம் பதவியில் இருக்கிறோம். பெரிய மனிதர்களுக்கும், நமக்கு வேண்டியவர்களுக்கும் சலுகை காட்டுவதற்காக அல்ல என்ற கருத்தை அமைச்சர்களுக்கும், எம்.எல்.ஏ.க்களுக்கும் வலியுறுத்தினார்.

ஓ.பி.ராமசாமிக்கு முன்பு பிரகாசம் ஆட்சியில் சென்னை மாநிலத்தில் எட்டு மாவட்டங்களில் மட்டுமே மதுவிலக்கு இருந்தது. ஓமந்தூர் ராமசாமி முதல்-அமைச்சரானதும், மீதம் இருந்த 17 மாவட்டங்களிலும் மதுவிலக்கு சட்டத்தை அமல்படுத்தினார். விவசாயிகளின் பிரச்சினையை நன்கறிந்த ஓமந்தூரார், எவன் நமக்கு உற்பத்தி செய்கிறானோ அவனுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கிறது என்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார். விவசாயிகளை இயற்கை பேரிடர் மற்றும் அழிவுகளில் இருந்து காத்திட பயிர் மற்றும் கால்நடை காப்பீடு திட்டத்தை தீட்டினார். கிணறு வெட்ட மானியம், ஊற்று நீர் பாசனம், நெல்லுக்கு தரவாரியாக விலை நிர்ணயம் போன்ற திட்டங்களை கொண்டு வந்தார். ஆற்று பாசனம் இல்லாத பகுதிகளில் புன்செய் பயிர் உற்பத்தியை பெருக்க ஊக்குவித்தார். இதனால் விவசாய முதல்-அமைச்சர் என்றே அழைக்கப்பட்டார்.

சென்னை கோட்டையில் 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந்தேதி முதல் சுதந்திர தின கொடியை ஏற்றியவர் அவர்தான். அவர் முதல்-அமைச்சராக பதவியில் இருந்தபோது உடல்நலக்குறைவு ஏற்பட, அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக அரசு பொது மருத்துவமனை டாக்டர் ரத்தினவேலு சுப்பிரமணியம் அழைக்கப்பட்டார். மருத்துவர் உடலை பரிசோதிக்க ஆரம்பித்தபோது, தடுத்தார் ஓமந்தூரார். இந்த ஒப்பந்தத்தில் முதலில் கையெழுத்து போடுங்கள் என மருத்துவரிடம் கூறினார். அவர் ஒப்பந்தத்தை படித்து பார்த்தார். அதில், எனக்கு மருத்துவ சிகிச்சை அளித்த பின்னர் நீங்களோ, உங்கள் உறவினர்களோ யாரும் என்னிடம் சிபாரிசுக்கு வரக்கூடாது என்ற நிபந்தனை இடம்பெற்றிருந்தது. மருத்துவர் சம்மதம் தெரிவித்த பின்னரே, சிகிச்சை பெற ஒப்புக்கொண்டார் ஓமந்தூரார்.

தமிழ்நாட்டில் தமிழை ஆட்சிமொழியாக கொண்டு வருவதற்கு முதல் நடவடிக்கையை மேற்கொண்டவர் அவர்தான். தமிழ் வளர்ச்சிக் கழகம் அமைத்தார். தமிழ் கலைக்களஞ்சியும் பத்துத் தொகுதிகள் அவரது ஆட்சிக் காலத்தில் தான் வெளிவந்தன. பள்ளிகளில் திருக்குறளைக் கட்டாய பாடமாக்கினார். தமிழ் கவிதைகளையும், கவிஞர்களையும் பெருமை செய்யும் வண்ணம் சட்டமன்றத்தில் அரசவைக் கவிஞர் என்ற பதவியை ஏற்படுத்தி நாமக்கல் ராமலிங்கம் பிள்ளையை முதல் அரசவை கவிஞராக நியமித்தார்.

ஓமந்தூர் ராமசாமிக்கு சுந்தரம் என்ற மகன் இருந்தார். ஒரு பெண் குழந்தையும் பிறந்த சில மாதங்களில் இறந்துவிட்டது. அவரது மகன் சுந்தரம் பெங்களூருக்கு அருகில் உள்ள ஒரு குருகுலத்தில் படித்து கொண்டு இருந்தார். அப்போது, சுற்றுலா சென்ற இடத்தில் காய்ச்சல் வந்து இறந்துபோனார். அவரது மறைவுக்கு கூட கலந்துகொள்ள முடியாத நிலையில், அஸ்தியை மட்டும் ஊருக்கு கொண்டு வந்தார் ஓமந்தூரார். மகனின் மறைவு அவருக்கு சோகத்தை ஏற்படுத்தியது. மனைவி சிங்காரத்தம்மாளும் இறந்துவிட்டார்.

நேர்மையும், தூய்மையும் நிறைந்த அவரது ஆட்சியின் செயல்பாடுகள், காங்கிரஸ் கட்சியினருக்கு தனிப்பட்ட பலனை அளிக்கவில்லை. கட்சியை பலப்படுத்துவதற்கும், கட்சிக்காரர்கள் செல்வாக்கு பெறுவதற்கும் வாய்ப்பில்லை எனக் கருதி காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அவரை முதல்-அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிவிட முடிவு செய்தனர். அதை அறிந்த ஓ.பி.ராமசாமி, 1949-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ந்தேதி முதல்-அமைச்சர் பதவியில் இருந்து தாமாகவே விலகினார். அவர் பதவியில் இருந்து விலகியதும், வடலூரில் வந்து தங்கினார். அங்கு குருகுலம் அமைத்து வள்ளலார் குருகுல உயர்நிலைப்பள்ளி, அப்பர் அனாதை ஏழை மாணவர்கள் இல்லம், ராமலிங்கர் தொண்டர் இல்லம், அப்பர் சான்றோர் இல்லம் ஆகிய நிறுவனங்களை ஏற்படுத்தினார்.

ஓ.பி.ராமசாமி 25-8-1970 அன்று மறைந்தார். அவரை கவுரவிக்கும் வகையில் தமிழக அரசு ஓமந்தூரில் அவருக்கு மணிமண்டபம் அமைத்துள்ளது. மத்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது. பணம், பதவி, அதிகாரம் என எதையும் எதிர்பாராமல் மக்கள் நலனுக்காக செயல்பட்டு தமிழக வரலாற்றில் சகாப்தம் படைத்தார், ஓ.பி.ராமசாமி. அவருடைய பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 1).

– வி.செல்வராஜ்

error: Content is protected !!