உதகை ஹிந்துஸ்தான் போட்டோ ஃபிலிம்ஸ் ஃபேக்டரி மூடியாச்சு!

உதகை ஹிந்துஸ்தான் போட்டோ ஃபிலிம்ஸ் ஃபேக்டரி மூடியாச்சு!

கடந்த 50 ஆண்டுகளாக நீலகிரி மாவட்டத்தில் இயங்கி வந்த ஒரே பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனம் கடந்த 1967ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் தொடங்கப்பட்டது. ஆம். தமிழ்நாட்டில் தொழிற்சாலையில் பின்தங்கிய மாவட்டம் நீலகிரி மாவட்டம். ஊட்டியின் தட்பவெப்ப நிலையைக் கணக்கில் கொண்டு ஹிந்துஸ் தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை ஒன்று தொடங்கப்பட்டது. பின் 1986இல் ஒரு புதிய பகுதியும் தொடங்கப்பட்டு அமெரிக்க நிறுவனத்தின் கூட்டோடு பாலிஸ்டர் கலந்த எக்ஸ்ரே ஃபிலிம் தயாரிக்கப்பட்டது.

ஊட்டியில் செயல்பட்டு வந்த இந்துஸ்தான் போட்டோ தொழிற்சாலை வியாபாரச் சந்தையில் 80 விழுக்காட்டைப் பிடித்து நல்ல அளவு இலாப நோக்கில் நடைபோட்டு வந்தது. இந்திய அரசின் தாராளமயக் கொள்கையால் லைசென்ஸ் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதாலும், இறக்கு மதிக்கு வரிகள் தளர்த்தப்பட்டதாலும் சிறு நிறுவனங்கள் கூட வெளிநாடுகளிலிருந்து பிலிம்களை இறக்குமதி செய்யப்பட்ட காரணத்தாலும் உதகைத் தொழிற்சாலை யின் இலாபகர நிலை பெரும் பாதிப்புக்கு ஆளானது.

80 விழுக்காட்டிலிருந்து 20 விழுக்காடாக சந்தை வியாபாரம் வீழ்ச்சி அடைந்துவிட்டது. இதன் காரணமாக உற்பத்தியின் அளவும் குறைக்கும் நிலை ஏற்பட்டு விட்டது. 4100 பணியாளர்கள் 1992இல் இருந்தனர். கடந்த 2013ஆம் ஆண்டு முதல் உற்பத்தியும் நின்றுபோன நிலையில், அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டது. அவர்களில் 165 பேர் மட்டும் விருப்ப ஓய்வு வாங்க மறுத்தும் நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க கோரியும் தொழிற்சாலைக்கு சென்று வந்தனர். பின்னர் உச்ச நீதிமன்றம் மூலம் அவர்களுக்கும் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது

மருத்துவம், அச்சுத்தொழில், கல்வி, ஒலிபரப்பு பாதுகாப்புத் துறைகளுக்கு தேவையான படச்சுருள்களை ஒருங்கிணைந்து தயாரிக்கும் நிறுவனம்இந்தியா விலேயே இது ஒன்றுதான்! இத்தகைய தொழிற்சாலைகள் உலகில் மொத்தம் ஆறுதான். இத்தகைய நிறுவனம் மிகப் பெரிய அளவில் போற்றி வளர்க்கப்படுவதற்குப் பதிலாக, இதனை இழுத்து மூடுவதிலேயே மத்திய அரசு கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு சாதித்தும் விட்டது.

தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அரசு நிறுவனங்களுக்குத் தேவைப்படும் பிலிம்கள், இந்நிறுவனத்திலிருந்தே வாங்கப்பட வேண்டும் என்ற ஆணை நடைமுறையில் இருந்து வந்தது . இங்கிருந்து ஃபிலிம் அனுப்பப்பட்ட வரை, அரசு மருத்துவமனைகளில் எக்ஸ்-ரே இலவசமாக எடுக்கப்பட்டது. இங்கே உற்பத்தியை நிறுத்திய பிறகுதான் அரசு மருத்துவமனைகளில் எக்ஸ்-ரே எடுக்க கட்டணம் வசூலிக்கப்பட்டது.

மற்ற தயாரிப்புகளை நிறுத்தியிருந்தாலும் எக்ஸ்-ரே உற்பத்தியை நிறுத்தாமல் தொடர்ந்திருந்தால் இன்றைக்கு இந்தத் தொழிற்சாலையை மூடக்கூடிய நிலை வந்திருக்காது. ஆனால், நிர்வாக குளறுபடிகள் காரணமாக அது நடக்காமல் போய்விட்டது. எக்ஸ்-ரே மட்டுமின்றி, பூமிக்கடியில் செல்லும் காஸ் குழாய்களில் கசிவை கண்டறிய உதவும் ஃபிலிம்களும் இங்கு தயார்செய்யப்பட்டன. ராணுவத்திலும் இந்த ஃபிலிம் பயன்படுத்தப்பட்டு வந்தது. இங்கே உற்பத்தியை நிறுத்திவிட்டதால் தற்போது ராணுவத்துக்கே வெளிநாடுகளிலிருந்து ஃபிலிம் இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் தொழிற்சாலை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு செவ்வாய்கிழமை மாலை நிரந்தரமாக மூடப்பட்டது. தெற்காசியாவில் அமைக்கப்பட்ட ஒரே ஃபிலிம் தொழிற்சாலையான ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனம் மூடப்பட்டது நீலகிரி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் பல ஏக்கர் பரப்பளவில் பல அடுக்குமாடி கட்டிடங்கள் இருந்தும் எந்த பயனும் இல்லாமல் இதன் கட்டிடங்கள் பாழடைந்து போவதற்குள் நெடு நாள் கோரிக்கையான மருத்துவக்கல்லூரி இந்த இடத்தில் வர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நீலகிரி மக்களின் கோரிக்கையாக உள்ளது

Related Posts