டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானு வாழ்க்கைக் கதை!.
ஒலிம்பிக்கில் மகளிர் 49 கிலோ பளு தூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப்பதகக்கம் வென்றுள்ளார். காலை 10.30 மணிக்கு மகளிர் 49 கிலோ பிரிவுக்கான போட்டிகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மீராபாய் சானு 84 மற்றும் 87 கிலோ எடையை முதலில் தூக்கினார். தொடர்ந்து 89 கிலோ எடையை தூக்க அவர் முயற்சித்தபோது, அவரால் முடியவில்லை. சினாவின் ஹே சி ஹூய் முதல் இடம் பிடித்து தங்கபதக்கத்தை வென்றார். இதைத் தொடர்ந்து மீராபாய் சானு 115 கிலோ எடையை தூக்கி இரண்டாவது இடத்தை பிடித்தார்.
இந்த வெள்ளிப் பதக்கத்தால் இந்தியாவுக்கு பெருமைத் தேடி தந்துள்ள மீராபாய் சானு வாழ்க்கை வறுமையும், போராட்டமும் மட்டுமே நிரம்பியது: நம்மை வழி நடத்தும் காலம் பல நெருக்கடிகளைக் கடந்தே பயணித்துள்ளது. நெருக்கடிகளின் தன்மை வேறுபடலாம். ஆனால், நெருக்கடிகள் இல்லாமல் இருந்ததில்லை. மனித சமூகம் அத்தகைய பல நெருக்கடிகளைக் கடந்தே வளர்ந்து வந்துள்ளது. இப்போதைய தேவை இன்றைய சிரமத்தை எதிர்கொள்வதற்கான ஆற்றலை வளர்த்துக்கொள்வதுதான். எல்லா உயிரினங்களுக்கும் இயல்பிலேயே இருக்கும் இயற்கையான உந்துதல் சக்தியே மன உறுதியை மேலும் வளர்த்துக்கொள்வதற்கான அடிப்படை. ஆனால் மீராபாய் சானுக்கு வந்த நெருக்கடிகளும் அதை எதிர் கொண்டு இப்போது சாதித்திருப்பதும் ஒவ்வொருவருக்குமான வாழ்க்கை பாடம் என்றால் அது மிகையல்ல
கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் மீராபாய் சானுவுக்கு 2 சகோதரர்கள் 3 சகோதரிகள். சொந்த ஊர் மணிப்பூர் மாநிலத்தில் உள்ளது. சிறுவயதில் பல மணி நேரம் சைக்கிள் ஓட்டி தசைகளை வலிமையாக்கிக் கொண்டார் மீரா. சமையலுக்காக காட்டுப்பகுதிகளிலிருந்து விறகுகளை வெட்டி கொண்டு வரும்போது, தன்னுடைய மூத்த சகோதரர்களை விட அதிக விறகுகளை சுமந்து பெற்றோரை ஆச்சர்யப்படுத்தினாராம். பெரிய குடும்பம், வீட்டில் வறுமை. ஆரம்பத்தில் பளு தூக்குபவராக வேண்டும் என்ற எண்ணம் மீராவுக்கு கிடையாது. வில் வித்தையை பயிற்சி பெற ஆசைப்பட்டு, சரியான பயிற்சியாளர் கிடைக்கவில்லை. எனவே பளு தூக்குவதற்கு மாறினேன். பழைய சாம்பியன்கள் குஞ்சராணி தேவி போன்றவர்கள் தான் எனக்கு ஊக்கம் என்று அடிக்கடி சொல்லி இருக்கிறார் மீரா. அவளுக்கு அப்போது ஒன்பது வயதிருக்கும். நான்காம் வகுப்பு படித்து கொண்டிருந்தாள். விடுமுறை நாளான அந்த சனிக்கிழமை அன்று டிவியில் ஸ்போர்ட்ஸ் சேனலை பார்த்து கொண்டிருந்தாள். அதில் குஞ்சரணி தேவி பளு தூக்குதலில் 2004 ஒலிம்பிக்கில் அசத்திக் கொண்டிருந்தார். அதை பார்த்து தான் என் மகளுக்கு பளு தூக்குதலில் ஆர்வம் வந்தது” என்கிறார் மீராபாய் சானுவின் தாயார். “அந்த போட்டி முடிந்தவுடன் இந்தியாவிற்கு நான் பளு தூக்குதலில் பதக்கம் வென்று தருவேன் என்ற ஆர்வத்தோடு வீட்டு வாசலில் கிடந்த நீளமான மூங்கில் கோளை தலைக்கு மேல் தூக்கி விளையாடினாள் என்கிறார் அவர்.
தன் கிராமத்தில் செயல்பட்டு வந்த இளைஞர் மன்றத்திற்கு சென்று உடற் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் மீராபாய். கூடுதல் பயிற்சிக்காக தங்கள் கிராமத்திற்கு பக்கத்தில் இருந்த பளு தூக்கும் பயிற்சி மையத்திற்கு சைக்கிளில் பயணம் செய்து பளு தூக்கும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் மீராபாய். ஆனால் இவருக்கு பளு தூக்குவதில் நல்லதொரு பயிற்சியாளர் (கோச்) கிடைத்தார். பெயர் விஜய். அப்போது இருந்தே அவரது இலக்கு 2020ல் டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக்ஸ்தான். அதற்காக அவர் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
ஒலிம்பிக் கனவில் இருந்த மீராவின் தியாகம் அளப்பரியது. தியாகம் என்றால் சட்டென்று புரியாது. அவர் பயிற்சி செய்த உக்கிரத்தை சற்றே பார்த்தோமானால் புரியும். காலை 5.30 மணிக்கு பளு தூக்கும் பயிற்சிக்குப் போனால் இரவு 7.30க்குத்தான் திரும்புவார். அதன் பிறகு இரவு பள்ளியில் படிப்பார். வகுப்பிலோ தூக்கம் அவரை மயக்கிவிடும். பள்ளி நிர்வாகம் முதலில் இதை ஆட்சேபித்தார்கள். ஆனால் பெற்றோர் அசாதாரணமாக ஊக்குவிப்பில் மீராவுக்கு பின்பலமாக இருந்தார்கள்.
அதே சமயம் தன் தொடக்க கால நாட்களைப் பற்றி மீராபாய் சானு பேட்டி ஒன்றில் கூறியபோது, “நான் தினசரி சாப்பிட வேண்டிய உணவுகளின் டயட் பட்டியலைக் கொடுத்தார்கள். தினசரி அரை லிட்டர் பால், குறிப்பிட்ட அளவு கறி சாப்பிட வேண்டும் என்றெல்லாம் அதில் குறிப்பிட்டிருந்தது. ஆனால் அதில் குறிப்பிட்டிருந்தபடி வாரம் ஒருமுறை எனக்கு தரமான உணவு தரவே என் குடும்பத்தினர் தங்கள் தேவைகளைக் குறைத்து தியாகம் செய்யவேண்டி இருந்தது” என்று சொன்னார்.
மீராவின் அப்பா கீர்த்தி சிங் மெய்தேய் பொதுப்பணித் துறையில் எழுத்தர். தன் சம்பளத்தில் 6 குழந்தைகள் வளர்ந்து ஆளாக்க வேண்டிய நிலையில் பள்ளிப் படிப்புக்கு பதில் பளு தூக்குவதில் மகள் மீரா அசாத்திய ஆர்வம் காட்டுவதை சராசரி பெற்றோர் போல கண்டிக்காமல் பள்ளி நிர்வாகத்துடன் பேசி மீராவின் வாழ்க்கையில் பளு தூக்குவதை மையமான விஷயமாக்கினார்கள். நல்ல அப்பா அம்மா என்கிறார் மீரா.
இப்போது ஒலிம்பிக்கில் வெள்ளி வாங்கிய குஷியில் பூரித்துப் போயிருக்கும் மீரா, கடந்த ரியோ ஒலிம்பிக்ஸில் வெறுங்கையோடு நாடு திரும்பியபோது, எப்படிப்பட்ட விரக்தியில் நொந்து போயிருப்பார்! அங்கிருந்து தொடங்கி தன்னைத் தேற்றிக்கொண்டு 14 மணி நேர அன்றாட பயிற்சி செய்தார். வாரக் கணக்கில் வீட்டுக்கே திரும்புவதில்லை. சொந்த சகோதரிக்கு திருமணம் நடந்தபோது கூட மீரா பயிற்சியில்தான் மூழ்கியிருந்தார். மனதில் அப்படி ஒரு வேகம். வெற்றியின் மீது அப்படியொரு மோகம்
ஆனால் திடீரென அவருக்கு முதுகு வலி ஏற்பட்டது. காரணம் என்னவென்றே தெரியாத சூழலில் அதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்தார். அதிக எடையை தூக்கக் கூடாது என்று டாக்டர்கள் ஆலோசனை கூறியிருந்தனர். இருந்தாலும். விடாமல் மீரா செய்த பயிற்சியையும் அவர் இப்போது வெள்ளிப் பதக்கங்கள் உள்ளிட்ட எல்லாவற்றையும் விட அவர் செய்த அன்றாட தியாகங்கள் இளைய சமுதாயத்துகு என்றென்றும் ஊக்கம் தரும் என்று நம்பலாம்
நிலவளம் ரெங்கராஜன்.