உத்தமர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்!

உத்தமர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்!

மந்தூராரை, ‘புனிதமான ஆத்மா’ என்றார் ராஜாஜி. ‘பட்டை தீட்டப்படாத வைரக்கல்’ என்று பாராட்டினார் நேரு. ‘அவர் ஓமந்தூர் ராமசாமி அல்ல. காந்தி ராமசாமி’ என்றார் அண்ணா. சுதந்திர இந்தியாவில், தமிழகத்தின் முதல் முதலமைச்சராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ‘எல்லாவற்றுக்கும் முதல்வர்’ என்று உதாரணம் காட்டத்தக்க மனிதராக இருந்தார். ஆம்.. ஒரு முதலமைச்சர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். ‘சத்தியமேவ ஜெயதே’ என்ற இந்திய அரசின் இலச்சினையில் இருந்த சொற்களை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரத்தில் பொருத்தி, அதைத் தமிழக அரசின் சின்னம் ஆக்கினார். அவரது ஆட்சியில்தான் இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் முறைப்படுத்தப்பட்டது. அரசு ஊழியர்கள்மீது புகார் வந்தால் நடவடிக்கை எடுக்க ஒழுங்கு நடவடிக்கைப் பிரிவை ஏற்படுத்தி யவரும் அவர்தான். ஹைதராபாத் மாகாணத்தை இந்தியாவுடன் இணைக்கப் போராடி வெற்றி பெற்றார்.

அவர் வள்ளலார் பக்தர். ஆனால், தாடி இல்லாத ராமசாமி என்றார்கள். பெரியார், கறுப்புசட்டை போட்ட ராமசாமி. இவர் வெள்ளை சட்டை போட்ட ராமசாமி என வர்ணித்தார்கள். காரணம், சமூக நீதியை நிலைநாட்டினார். கோவில் நுழைவு அதிகாரச் சட்டம் மூலம் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் இந்துக் கோவில்களில் நுழைவதற்கான உரிமையை சட்டப்பூர்வமாக்கினார். அறநிலைய பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றினார்.அவரை கம்யூனிஸ்ட் என்றார்கள். காரணம், ஜமீன்தாரி-இனாம்தாரி முறைகளை ஒழிக்க நடவடிக்கை எடுத்தார். விவசாயிகள் நலனுக்குத் துணை நின்றார். அவர் காந்தியவாதிதான் என்பதன் அடையாளமாக, மதுவிலக்கை முழுமையாகக் கொண்டு வந்தார். ஊழல் ஒழிப்பை முதன்மையாக்கினார். அவர்தான், இந்தியா சுதந்திரமடைந்தபோது தமிழகத்தின் (சென்னை மாகாணத்தின்) முதல்வராக இருந்த (ஓ.பி.ஆர்) ஓமந்தூர் பி.ராமசாமியார் (திண்டிவனம் அருகேயுள்ள சொந்த ஊரான ஓமந்தூரில் அவர் நினைவாக மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது).

சென்னை ஐகோர்ட் நீதிபதி பதவி காலியானபோது, அந்த இடத்திற்கு தலைமை நீதிபதி பரிந்துரைத்த வழக்கறிஞர் என்.சோமசுந்தரத்துக்கு முதல்வர் ஓமந்தூரார் ஏற்பளித்தார். ஆனால் பிரதமர் நேருவின் அமைச்சரவையில் இருந்த கோபாலசாமி அய்யங்கார் தனது மருமகனான வழக்கறிஞர் திருவேங்கடாச்சாரியை நீதிபதியாக்க நினைத்தார். ராஜாஜி ஆதரித்தார். பிரதமர் வரை பஞ்சாயத்து போனது. ஓமந்தூராரிடம், “பிராமணரல்லாதார் அரசாங்கத்தை நடத்தப் பார்க்கிறீர்கள்” என்று நேரு குற்றம்சாட்டியபோது, ”நீங்கள் சொன்னதை வாபஸ் வாங்குங்கள். இல்லையென்றால் என் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளுங்கள்” என நேருக்கு நேராக நேருவிடம் சொன்ன துணிச்சல்காரர் ஓ.பி.ஆர்.

வகுப்புவாதியாக (சாதி கண்ணோட்டத்தில்) செயல்படுகிறார் என்று இந்து பத்திரிகை, ஓமந்தூராரைப் பற்றி எழுதியது. உடனே அதன் ஆசிரியரை அழைத்து, உங்கள் அலுவலகத்தில் பிராமணர்கள் எத்தனை பேர் வேலை பார்க்கிறார்கள்? அதில் அய்யங்கார்கள் எத்தனை பேர்? எனக் கேட்டதுடன், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பிற சமூகத்தவர்களுக்கும் வாய்ப்பு கொடுத்திருக்கிறீர்களா? நீங்கள் வகுப்புவாதியா-நான் வகுப்புவாதியா? என ஒரே போடாகப் போட்டார். அதனால்தான் அறிஞர் அண்ணா தனத திராவிட நாடு இதழில், ‘காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும்’ என எழுதினார்.இத்தனைக்கும் ஓமந்தூராரின் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்த அவினாசிலிங்கம், இந்தித் திணிப்பில் காட்டிய வேகத்தை எதிர்த்து திராவிடர் இயக்கத்தினர் போராட்டம் நடத்தி சிறை சென்ற காலம் அது. எனினும், சமூக நீதியின் அடிப்படையில் ஓமந்தூரார் அரசை ஆதரித்தனர்.

எளிமையின் அடையாளமான ஓமந்தூரார், அரசாங்கம் கொடுத்த பெரிய பங்களாவைத் தவிர்த்தவர். (அப்படிப்பட்டவரின் பெயரில்தான் அரசின் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்ட வளாகம், ஓமந்தூரார் அரசினர் தோட்டம் என்றழைக்கப்படுகிறது)

உடல் நலக் குறைவால் ஒருமுறை அரசுப் பொதுமருத்துவஸொமனையில் ஓமந்தூரார் அனுமதிக்கப்பட்டபோது, “எல்லா மக்களுக்கும் செய்கிற வைத்தியமே எனக்கும் போதும். எனக்கு சிகிச்சை அளித்ததைப் பயன்படுத்தி எந்த டாக்டரும் சிபாரிசுக்கு வரக்கூடாது” என்றார்.

23.3-1947 முதல் 6-4-1949 வரை இரண்டாண்டுகள் மட்டுமே முதல்வராக இருந்தது ஓ.பி.ஆர் ஆட்சியில் இருந்தபோது கட்சிக்காரர்களுக்கோ, தன் குடும்பத்தினருக்கோ எந்தவிதச் சிறு சலுகையையோ, வேலை வாய்ப்பையோ அவர் வழங்கியதில்லை.

ஓமந்தூராருக்கு முன்னர் சென்னை மாகாணத்தை ஆட்சி செய்த ஒன்பது முதலமைச்சர்களும் அரச வம்சத்தையும், ஜமீன்தார் குடும்பத்தையும் சேர்ந்தவர்கள். அவர்களில் பலர் உயர் கல்வி பயின்றவர்கள். ஓமந்தூரார் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். 8-ம் வகுப்பு வரையே படித்தவர்.அவர் பதவி ஏற்றதும் செய்த முதல் வேலை பாராட்டுக் கூட்டங்கள், வெற்றி விழாக்கள் ஆகிய அரசியல் ஆரவாரங்களுக்குத் தடைபோட்டதுதான். ஆம், அதுவரை எந்த இந்திய மாகாண முதல்வர்களும் செய்யாத நடவடிக்கைகள் இவை.

முதலமைச்சரைச் சந்திப்பதற்கென வழங்கப்படும் அனுமதிச் சீட்டில், `என்ன காரணத்துக்காகச் சந்திக்க வேண்டும்?’ என ஒரு கேள்வியை இணைக்கும்படி முதன்முதலில் உத்தரவிட்டவர் ஓமந்தூரார்தான். நியாயமான காரணத்துக்காக வருவோரை மட்டுமே சந்திப்பது என்பதை, தான் முதலமைச்சராகப் பதவி ஏற்ற நாள் முதலே வழக்கமாக்கிக்கொண்டார் அவர். தனிப்பட்ட சலுகைகள், பரிந்துரைகளுக்காக வருவோரை ஓமந்தூரார் சந்திக்க அனுமதிக்கவே மாட்டார்.அப்பேர்பட்ட ஓமந்தூரார் தான் முதல்வர் பதவியேற்றிருந்த காலத்தில் ஆலயப் பிரவேசத்தை எல்லாக் கோயில்களிலும் முறைப்படுத்த ஒரு தனிச் சட்டத்தையும் தோற்றுவித்ததை வரலாறு என்றைக்கும் நினைவில் வைத்திருக்கும்.

அப்போதைய சென்னை மாகாணத்தில் இருந்த திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க, 1947-ம் ஆண்டுவரை ஆதிதிராவிடர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆலயப் பிரவேசச் சட்டத்தின் மூலம் அவர்கள் ஏழுமலையானை தரிசிக்கவைத்ததோடு அவர் நிற்கவில்லை. திண்டிவனம் ஆதிதிராவிடர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான குலசேகரதாஸ் என்பவரை, திருமலை-திருப்பதி கோயிலின் அறங்காவலராக நியமித்தார். ஆலயப் பிரவேச வரலாற்றில், இது தனித்துவமிக்க ஒரு சாதனை.

முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிய பின்னர், ஓமந்தூரார் அரசியல் வாழ்வை முற்றிலுமாகத் துறந்து ஆன்மிகத்தில் ஈடுபட்டாலும் தனது மரபார்ந்த விவசாய வாழ்க்கையை மீண்டும் வாழ ஆசைப்பட்டு, தனது வியர்வை சிந்தும் உழைப்பால் வடலூர் பகுதியிலிருந்த தரிசு நிலங்களையெல்லாம் விளைநிலங்களாக மாற்றினார். இன்று அணையா ஜோதியாக வெளிச்சம் வீசும் வடலூரில் சுத்த சன்மார்க்க நிலையத்தை நிறுவ இவர்தான் முன்னின்றார். வடலூரில் வள்ளலார் குருகுலப் பள்ளி, அப்பர் அனாதைகள் இல்லம், ஏழை மாணவர்களுக்கான குடில், அப்பர் சான்றோர் இல்லம், ராமலிங்கத் தொண்டர் இல்லம் ஆகிய நிறுவனங்களை ஓமந்தூரார் ஏற்படுத்தினார்.

ஓமந்தூரார் பிறந்த தின சிறப்புக் கட்டுரை

நிலவளம் ரெங்கராஜன்