சீனம் முன்னேறுகிறது? இந்தியா ஏன் தடுமாறுகிறது??

சீனம் எப்படி இவ்வளவு முன்னேறியிருக்கிறது என வியப்பவர்கள் கவனிக்கத் தவறுவது என்னவெனில் அந்த நாடு திட்டமிட்ட முறையில் கல்விப் புலங்களிலிருந்து மதத்தையும் அதனுடன் தொடர்புடைய மூடநம்பிக்கைகளையும் நீக்கி விட்டது என்பதைத்தான். ராகுவும் கேதுவும்தான் உங்கள் எதிர்காலத்தை நிச்சயிப்பவை என நாள்தோறும் தொலைக்காட்சிகள் சொல்லிக் கொண்டிருக்கும் சூழலில் ‘தம் மீதே நம்பிக்கை வைத்திருக்கும்’ மனிதர்களை உருவாக்க முடியாது.சமீபத்தில் நான் கர்னாடக மாநிலத்தின் கடற்கரைப் பகுதியிலிருக்கும் அரசுப் பள்ளி ஒன்றில் நடந்த ஒரு பயிற்சிப் பட்டறைக்குச் சென்றிருந்தேன். அங்கு படிக்கும் அனைத்துக் குழந்தைகளும் விளிம்புநிலைச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள். பயிற்சிப் பட்டறையில் 8 முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 100 மாணவர்கள் கலந்து கொண்டனர். பட்டறையின் பயிற்சிப் பொருள்: அறிவியல் உணர்வு, மனித நேயம், பகுத்தறிவு. நடத்தியவர் பேராசிரியர் நரேந்திர நாயக்.
அங்கிருந்த மாணவர்களிடம் இந்த எளிமையான கேள்வியைக் கேட்டேன்: யார் உங்கள் விதியை எழுதுவது? ஏறக்குறைய அனைவரும் ‘பிரம்மன்’ என்றனர். அடுத்த கேள்வி: உங்கள் வீடுகளில் எத்தனை பேர் காலையில் ஒளிபரப்பாகும் ஜோதிட பலன்கள் போன்ற நிகழ்ச்சியைப் பார்க்கின்றனர்? ஏறக்குறைய அனைத்து மாணவர்களும் தம் கைகளைத் தூக்கினர்.
எங்களுக்கு வேறு இரண்டு பள்ளிகளிலும் இதே அனுபவம்தான்.ஆக, ஏன் இந்தியாவிலிருந்து உலகை அதிர வைக்கும் கண்டுபிடிப்புகள் வருவதில்லை என்று நாம் கேட்கும்போது நாம் என்ன மாதிரியான மாணவர்களையும் வருங்கால குடிமக்களையும் உருவாக்க நினைக்கிறோம் என்று சிந்திக்க வேண்டும்.அதற்கு ஒரே, இறுதியான பதில் இதுதான்: ஒரு அரசாங்கம் எதில் முதலீடு செய்வதானாலும், அது பகுத்தறிவுள்ள மாணவர்களை உருவாக்கும் கல்வியிலும், அடிமட்டத்திலிருந்து அறிவியல் உணர்வை வளர்ப்பதிலும் (குறிப்பாக, பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் முதலீடு செய்யாவிட்டால், ஒரு வலுவான தேசத்தை உருவாக்க முடியாது.
(Suchi S.A. என்பவர் X தளத்தில் எழுதிய பதிவின் தமிழாக்கம்)
(என் பின்குறிப்பு: இந்தியாவில் பிஜேபியும் இந்துத்வ சிந்தனைகளும் வலுவாக வளர்வதற்கு ஒரு முக்கியக் காரணம் தூர்தர்ஷனில் தொடர்ந்து வெளியான ராமாயணம் மற்றும் மஹாபாரதம் தொடர்கள்தான் என அரவிந்த் ராகோபால் Politics After Television: Hindu Nationalism and the Reshaping of the Public in India என்கிற நூலில் நிறுவியிருக்கிறார். ஃபிரண்ட்லைனிலும் இது குறித்து கட்டுரை எழுதியிருக்கிறார்.)