பிளாஸ்டிக் தேசியக் கொடியா? பீ கேர்ஃபுல்! – மத்திய அர்சு எச்சரிக்கை

பிளாஸ்டிக் தேசியக் கொடியா? பீ கேர்ஃபுல்! – மத்திய அர்சு எச்சரிக்கை

சுதந்திர தினம், குடியரசு தினம், நாட்டு தலைவர்கள் நினைவு தினம் போன்ற நாட்களில் தேசிய கொடிகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. தற்போது பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்படும் தேசிய கொடி அதிகளவில் விற்பனைக்கு வருகிறது. சுதந்திர தினம், குடியரசு தின விழாக்களுக்குப் பிறகு பிளாஸ்டிக் தேசிய கொடிகள் சாலைகளிலும், வடிகால்களிலும் தூக்கி வீசப்படுகின்றன. இதனால் சுற்றுப்புறச்சூழல் சீர்கேடு அடைக்கிறது. கேரளாவில் பிளாஸ்டிக் கொடிகளை பயன்படுத்துவது, விற்பனை செய்வது, கொள்முதல் செய்வதற்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. அதேபோல் தமிழகத்திலும் பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்படும் தேசிய கொடிகளுக்கு அரசு தடை விதிக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் உரத்தக் குரலில் சொல்லி வந்த நிலையில் பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட தேசிய கொடியை மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

iday aug 14

மத்திய அரசு இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் தேசிய கொடிகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. தற்போது பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளதால், சிறிய அளவிலான பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்படும் மூவர்ண தேசிய கொடி அதிகளவில் விற்பனைக்கு வருகிறது. குடியரசு தின, சுதந்திர தின விழாக்களுக்குப் பிறகு, பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட தேசியக் கொடிகள் சாலைகளிலும், வடிகால்களிலும் தூக்கி வீசப்படுகிறது. இது தேசிய கொடியை அவமதிப்பது போன்றதாகும்.

தேசிய மரியாதை சட்டத்தின் 2வது பிரிவின் படி தேசியக் கொடிகளை பொது இடத்தில் எரிப்பது, அழிப்பது, சிதைப்பது போன்றவற்றுக்கு 3 ஆண்டு வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் கிடைக்க வழி உள்ளது. எனவே, பிளாஸ்டிக் கொடிகளை பயன்படுத்தும் விஷயத்தில் மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் கவனம் செலுத்த வேண்டும்.மேலும் இது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.