⏳மண் இன்றி மனிதன் இல்லை: 2025 உலக மண் தினம் – எதிர்காலத்தின் ஆதாரம்!
இன்று, டிசம்பர் 5-ம் தேதி, இந்த பரந்துப்பட்ட பூமி முழுவதும் சகிப்புத் தன்மை எக்கச்சக்கம் கொண்டது எதுவென்றால், அது நம்மைச் சுமக்கும் ‘மண்’ தான். ஆம், நமது வாழ்வாதாரத்தின் ஆதாரமான இந்த மண்ணின் முக்கியத்துவத்தை உலகுக்கு உணர்த்த, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 5-ம் தேதி ‘உலக மண் தினம்’ (World Soil Day) உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

🌱 மண் தினத்தின் பிறப்பும் நோக்கமும்
குறைந்து வரும் மண் வளம், மண் மாசுபாடு ஆகியவற்றால் எதிர்காலத் தலைமுறை சந்திக்கப்போகும் சவால்களைக் கருத்தில் கொண்டு, தாய்லாந்து மன்னர் பூமி பால் அவர்களின் முயற்சியால் இந்த நாள் ஐக்கிய நாடுகள் சபையால் (FAO) அங்கீகரிக்கப்பட்டு உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
‘மண்ணின் மீது மனிதனுக்கு ஆசை, மனிதன் மீது மண்ணுக்கு ஆசை, மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது, இதை மனம்தான் உணர மறுக்கிறது’ என்ற பாடல் நம்மைத் தாங்கி நிற்கும் மண்ணின் மகத்துவத்தைப் பறைசாற்றுகிறது. பஞ்சபூதங்களில் ஒன்றான நிலத்தின் ஆதாரமாக விளங்கும் மண்ணின் முக்கியத்துவம், அதன் வளம், மனிதனின் வாழ்வில் மண்ணின் பங்கு, மண் இன்றி மனிதன் இல்லை ஆகியவை குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் தற்போது எழுந்துள்ளது.
🏙️ 2025-இன் கருப்பொருள்: “Healthy Soils for Healthy Cities”
2025 ஆம் ஆண்டின் உலக மண் தினத்தின் (World Soil Day) கருப்பொருள் “Healthy Soils for Healthy Cities” (ஆரோக்கியமான மண் ஆரோக்கியமான நகரங்களுக்கு) என்பதாகும்.
இந்தத் தீம், நகரங்களில் மண்ணின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. நகரமயமாக்கல் மற்றும் மண் சீலிங் (Soil Sealing – மண்ணை கான்கிரீட்டால் மூடுதல்) போன்ற சவால்களை எதிர்கொள்ள இது உதவுகிறது. ஐ.எஃஏ.ஓ (FAO) அமைப்பால் அறிவிக்கப்பட்ட இந்தத் தீம், மண் மழைநீரை உறிஞ்சி, வெப்பநிலையைக் கட்டுப்படுத்தி, கார்பனைச் சேமித்து, நகரங்களை பசுமைப்படுத்த எப்படி உதவும் என்பதை விளக்குகிறது.

🔬 மண்ணின் அடிப்படைத் தன்மையும் வளமும்
மேல் மண்ணின் தன்மையைப் பொறுத்தே பயிர் விளைச்சல் அமைகிறது. விவசாயம் செழிப்படைய இதுவே ஆதாரம். மண்ணில் உள்ள கூறுகள் அதன் மகத்துவத்தைப் பறைசாற்றுகின்றன:
மேல் பரப்பில் சுமார் 2.5 செ.மீ. ஆழத்தில் காணப்படும் வளமான ‘டாப் சாயில்’ உருவாக சுமார் ஆயிரம் ஆண்டுகள் ஆகும். சுமார் ஒரு கிராம் மேல்மண்ணில் கோடிக்கணக்கான பாக்டீரியாக்கள், பூஞ்சைக் காளான்கள், பல லட்சம் ஆக்டினோமைசீட்ஸ் போன்ற நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் உள்ளன.
🧬 மண்ணுக்கும் மனிதனுக்கும் உள்ள ஒற்றுமை
மண்ணுக்கும், மனிதனுக்கும் இடையே சில ஆச்சரியமூட்டும் ஒற்றுமைகள் உள்ளன:
-
செரிமானம்: மனித உடலில் உள்ள செரிமான சக்தியைப் போல், மண்ணில் பிளாஸ்டிக் தவிர்த்து அனைத்துப் பொருட்களும் செரிமானம் அடைந்து உருமாற்றம் பெறுகிறது.
-
சுவாசம்: மனிதன் காற்றை சுவாசித்து கார்பன்-டை-ஆக்சைடை வெளியிடுவது போல, மண்ணிலும் இந்த சுவாசம் நடைபெறுகிறது.
-
நீர்ச்சத்து: மனிதன் உடல் பெரும்பாலான பகுதி நீரால் நிரப்பப்பட்டது. மண்ணில் நான்கில் ஒரு பங்கு நீர் உள்ளது.
-
பரம்பரை: பெற்றோரின் குணாதிசயங்களை மனிதன் பிரதிபலிப்பது போல, மண்ணானது அது உருவான பாறையின் குணாதிசயத்தை ஆழமாகப் பிரதிபலிக்கிறது.
எண்ணிலடங்கா உயிரினங்களின் ஆத்மாக்களின் கலவைதான் மண்.

🐛 மண்ணின் உண்மையான மைந்தர்கள்: மண்புழுக்கள்
மனிதர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, “நான் இந்த மண்ணின் மைந்தன்” எனச் சொல்வதுண்டு. ஆனால், உண்மையில் மண்ணின் மைந்தர்கள் இந்த மண்புழுக்கள்தான்.
-
வளமேற்றுதல்: மண்புழுக்கள் மண்ணின் கீழே உள்ள கனிம வளங்களைத் தாவரங்களுக்காக மேலே கொண்டு வருகின்றன.
-
காற்றும் நீரும்: காற்றும் மழை நீரும் மண்ணுக்குள் செல்லப் பாதை ஏற்படுத்துகின்றன. வீணாகும் மழை நீரை நிலத்தடி நீராகச் சேமித்துக்கொள்ளத் துணை செய்கின்றன.
-
பழந்தமிழர் கூற்று: “நாங்கூழ் மாமை காட்டும் நானிலத்தின் தாதுதன்னை” – அதாவது, மண்புழுவின் நிறம் நான்கு நிலங்களிலும் (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்) இருக்கும் கனிமங்களின் தன்மையைக் காட்டுமாம் என்று பழந்தமிழர் பாடல் ஒன்று அதன் மகத்துவத்தைப் பறைசாற்றுகிறது.
🌾 நமது வாழ்வின் அஸ்திவாரம்
நமது இந்திய நிலப்பரப்பில் 45 சதவிகிதம் நிலங்களில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. தாவர வளர்ச்சிக்குத் தேவையான நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், சுண்ணாம்புச்சத்து, இரும்பு சத்து, மெக்னீசியம், துத்தநாகம், மாங்கனிஸ் போன்றவற்றை இந்த மண் தாவரங்களுக்குத் தருகிறது. இதன்மூலம் சத்துகளைப் பெற்ற தாவரங்கள், அந்தச் சத்துகளை மண்ணில் வாழும் உயிரினங்களுக்கும், இறுதியாக மனிதர்களுக்கும் அளித்து உயிரினங்கள் வாழத் துணை புரிகிறது.
மண் சிந்தனை ஏதுமின்றி தன்னாலான பங்களிப்பை உலகுக்கு வழங்கி வருகிறது. மனிதர்களால் பல்வேறு இடையூறுகளை சந்தித்த போதிலும், எந்தவித வேறுபாடும் காட்டாமல் மனிதனைத் தாங்கி நிற்கிறது மண்.
மண் நிரந்தரமானது. நாட்டின் முன்னேற்றத்துக்கு, மேம்பாட்டுக்கு மரங்கள் மட்டுமின்றி மண் வளமும் இன்றியமையாதது. இதை உணர்ந்தே நமது மூதாதையர்கள் மரங்களோடு இணைந்து, மண் வளம் நிரம்பிய நிலங்களில் பயிர் சாகுபடி செய்து, தரமான உணவுகளை உட்கொண்டு வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் நடத்தினர்.
அந்த மகிழ்வான வாழ்வு மீண்டும் வர வேண்டும். மண்ணின் வளத்தைப் பாதுகாக்க வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் உண்டு. மண்ணின் முக்கியத்துவம் உணர்ந்து, அதனைப் பாழ்படுத்துவதைத் தவிர்த்து, அதன் வளத்தைப் பேணி, ஆரோக்கியமான எதிர்காலத் தலைமுறையை உருவாக்குவோம்.
நிலவளம் ரெங்கராஜன்


