நிமிஷா பிரியா வழக்கும், இந்திய நீதித்துறையின் முரண்களும்!
ஏமனில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள கேரள செவிலியர் நிமிஷா பிரியா விவகாரம், உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நாளை (ஜூலை 16) அவருக்குத் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என ஏமனின் ஹவுத்தி கோஷ்டிகள் அறிவித்துள்ள நிலையில், இந்திய அரசு தன்னால் இயன்ற அனைத்து இராஜதந்திர முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. ஆனால், இந்த துயரச் சூழலில், நம் உள்நாட்டு நீதி அமைப்பின் செயல்பாட்டில் சில ஆழமான முரண்கள் வெளிப்படுவதும் கவலையளிக்கிறது.
நிமிஷா பிரியா, ஹவுத்தி ஆட்சிக்கு முன்பே ஏமனில் பணிக்குச் சென்றவர். அப்போது, அவர் ஒரு ஓமானிய குடிமகனுக்கு விஷ ஊசி செலுத்தி கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டார். இக்குற்றம் பின்னர் மரண தண்டனையாக உறுதி செய்யப்பட்டது. இந்தியா இந்த விவகாரத்தில் தலையிட முயன்றபோது, ஏமனில் ஹவுத்திகளின் ஆட்சி நிலைபெற்றது. தலிபான்களுக்கு ஒப்பான கடுமையான நிலைப்பாட்டைக் கொண்ட ஹவுத்திகளிடம் பேசுவது சிரமமாகவே இருந்தது. நிமிஷாவின் தீர்ப்பில் மாற்றமில்லை என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர்.
ஈரானுடன் இந்தியாவுக்கு உள்ள நட்பு, ஹவுத்திகள் ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் என்பதால், ஈரான் வழியாக இந்தியா இராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், ஹவுத்திகள் பல காரணங்களுக்காகத் தயங்குகிறார்கள். இதில் முதன்மையானது ‘பணம்’. ஆட்களை மிரட்டிப் பணம் அல்லது வேறு ஏதேனும் பெற்று காரியம் சாதிப்பது ஈரானியப் பயிற்சியில் முக்கியமானது என்பதை ஹமாஸ் மற்றும் சமீபத்திய கப்பல் மூழ்கடிப்புச் சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன. ‘இரத்தப் பணம்’ (Blood Money) என்ற ஒரு சட்ட விதி ஹவுத்திகளிடம் உண்டு. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஈடாகப் பணம் வழங்கப்பட்டால், கொலைக் குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுவார்கள். நிமிஷா விவகாரத்தில், இதை நேரடியாகவோ, மறைமுகமாகவோ அவர்கள் கேட்கிறார்களா என்பது தெளிவில்லை. கத்தாரில் சிக்கிய இந்தியர்களை மீட்டது போல இது எளிதான காரியமாக இல்லை என்றாலும், ஹவுத்திகள் அவ்வளவு எளிதாகத் தண்டனையை நிறைவேற்ற மாட்டார்கள் என்ற நம்பிக்கையும், ஈரான் வழியாக இந்தியா தொடர்ந்து பேசும் என்ற நம்பிக்கையும் ஒருபுறம் உள்ளது. மறுபுறம், அச்சமும் சூழ்ந்துள்ளது.

இந்த இராஜதந்திரச் சவால்களுக்கு மத்தியில், நிமிஷாவின் தாயார் நேற்று இந்திய சுப்ரீம் கோர்ட்டில் தன் மகளைக் காக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடுத்தார். அரசின் வழக்கறிஞர் நிலைமையின் தீவிரத்தைச் சுட்டிக்காட்டிய போதிலும், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் வழக்கை வரும் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர். இங்கேதான் ஒரு அதிர்ச்சியூட்டும் முரண் தலைதூக்குகிறது. ஒரு இந்தியக் குடிமகளின் உயிர் ஊசலாடும் தருணத்தில், “நாளை தூக்கு” என்ற கெடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், நமது நாட்டின் உச்சபட்ச நீதி மன்றம் ஒரு வார காலம் (ஜூலை 18 ஆம் தேதி) அவகாசம் எடுத்துக்கொள்வது விந்தையிலும் விந்தையாகும். நீதிபதிகளைப் பொறுத்தவரை, இது ஒரு சாதாரண வழக்கு; உரிய நடைமுறைகளைப் பின்பற்றி விசாரிக்கலாம்; வழக்கு முடிந்தால் போதும் என்ற மனநிலை வெளிப்படுவது போலத் தோன்றுகிறது. 22 ஆம் தேதி, யாரைக் காப்பாற்ற தீர்ப்பிடுவார்கள் என்பது தெரியாத நிலை.
இது வெறும் ஒரு வழக்கல்ல; ஒரு இந்தியக் குடிமகளின் வாழ்வும் சாவும் தொடர்பான அவசர நிலை. இது, இந்திய நீதிபதிகள் நியமன முறைகள் மற்றும் அவர்களின் அணுகுமுறை குறித்து மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்பதற்கான வலுவான காரணத்தை முன்வைக்கிறது. நீதித்துறையின் செயல்பாடுகளில் இன்னும் அதிக உணர்திறன், வேகம் மற்றும் மனிதநேயம் தேவை என்பதை இந்தச் சம்பவம் அழுத்தமாகப் பறைசாற்றுகிறது.
நிமிஷா பிரியா விடுதலையாகி வர தேசம் முழுவதும் பிரார்த்திக்கிறது. “சேவ் சிரியா, சேவ் பாலஸ்தீன்” என முழக்கமிடும் அதே தேசபற்றுள்ளோர், ஒரு இந்தியப் பெண் ஏமனில் சிக்கி சாவை எதிர்நோக்கும் போது காணாமல் போவது, அவர்களுடைய தேசபற்றின் பரிமாணத்தை கேள்விக்குள்ளாக்குகிறது.
இந்தியா தனது குடிமக்களைப் பாதுகாக்க அனைத்து வழிகளிலும் போராட வேண்டும். அதே சமயம், நம் உள்நாட்டு நீதி அமைப்பு இதுபோன்ற அசாதாரண சூழ்நிலைகளில் எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் நாம் சுயபரிசோதனை செய்ய வேண்டும். நிமிஷா பிரியாவின் வழக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும் – வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களைக் காப்பாற்றுவதிலும், உள்நாட்டில் அவசர நீதி வழங்கும் பொறிமுறைகளை மேம்படுத்துவதிலும்.
அடிசினல் ரிப்போர்ட்:நிமிஷா பிரியாவைச் சுற்றியுள்ள விவகார பின்னணி:
பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த நிமிஷா பிரியா (வயது 38), ஏமனில் செவிலியராக பணியாற்றி வந்தார். 2017-ஆம் ஆண்டு, தலோல் அப்டோ மஹ்தி என்ற தனது தொழில் பங்குதாரரை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டார். வழக்கு விசாரணையின் முடிவில், 2020-ஆம் ஆண்டு அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. 2023-ல் அவரது இறுதி மேல்முறையீடும் நிராகரிக்கப்பட்டது.
தற்போது, சனாவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிமிஷாவின் மரண தண்டனை ஜூலை 16-ஆம் தேதி நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தடுக்க அவரது குடும்பம், இந்திய மதிப்பில் ரூ.8.60 கோடி அளவிலான ‘குருதிப் பணம்’ தொகையை வழங்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. இந்தத் தொகை “Save Nimisha Priya Council” அமைப்பின் வழியாக கிரவுட் ஃபண்டிங் மூலம் திரட்டப்பட்டுள்ளது.
இஸ்லாமிய ஷரியத் சட்டப்படி, கொலை செய்யப்பட்ட நபரின் குடும்பத்துக்கு இழப்பீடு (குருதிப் பணம்) செலுத்தப்பட்டால் குற்றவாளியை மன்னிக்கலாம். இதற்கு மத நெறிமுறைகளிலும் ஆதாரம் உள்ளது. முகமது நபி கூறியபடி, 100 ஒட்டகங்கள் போன்ற இழப்பீடுகளும் வழங்கக்கூடியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது, இந்தக் குருதிப் பணத்தையே நிமிஷாவின் வாழ்க்கையைத் தீர்மானிக்கக்கூடிய ஒரே வாய்ப்பாக பார்க்கப்படுகின்றது. இந்திய மக்களும் இந்த வழக்கை கவனமாகக் கடத்தியுள்ளன.
தனுஜா


