நெல்லையின் பெருமை: ஆனித் தேரோட்டமின்று – பக்தி, ஒற்றுமை, மற்றும் கலாச்சாரத்தின் சங்கமம்!

நெல்லையின் பெருமை: ஆனித் தேரோட்டமின்று – பக்தி, ஒற்றுமை, மற்றும் கலாச்சாரத்தின் சங்கமம்!

ன்று, திருநெல்வேலி மாநகரில், டவுன் நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோயில் தேரோட்டம்  பக்திப் பரவசத்துடன் கோலாகலமாக நடைபெறுகிறது. நெல்லை மக்களைப் பொறுத்தவரை, “தேர் இழுக்கறது” என்பது வெறும் ஒரு செயல் அல்ல; அது அவர்களின் ஆழ்ந்த பக்தி உணர்வின், பாரம்பரியத்தின் மற்றும் சமூக ஒற்றுமையின் ஒரு மகத்தான வெளிப்பாடு. ஆனித் திருவிழாவின் ஒரு முக்கிய பகுதியாக நடைபெறும் இந்தத் தேரோட்டம், நெல்லையின் ஆன்மீக வாழ்விலும், கலாச்சாரப் பெருமையிலும் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது. அதாவது தாரகாக்ஷன், கமலாக்ஷன், வித்யுன்மாலி என்ற கொடிய அசுரர்கள் தங்கம். வெள்ளி. இரும்பால் ஆன திரிபுரங்களில் இருந்துகொண்டு உலக உயிர்களைத் துன்புறுத்தி வந்தனர். தேவர்களின் வேண்டுகோளை ஏற்ற காருண்ய மூர்த்தியான சிவபெருமான் பூமி, வானம், சூரிய, சந்திரர் முதலியவற்றால் உருவாக்கப்பட்ட தேரில் எழுந்தருளி அசுரர்களை எரித்து அழித்து உயிர்களைக் காத்தருளினார். இதுவே ஆனி பெருந்திருவிழாவின் ஒன்பதாம் திருநாளாகிய தேரோட்ட விழாவின் தத்துவம். இந்தத் தத்துவ அடிப்படையில் கி.பி.1504ம் ஆண்டு முதல் இன்று வரை வருடந்தோறும் திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்தில் ஆனி தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

தேர் பெருமைகள்

திருநெல்வேலி நகரின் மத்தியில் பதினான்கு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது சுவாமி நெல்லையப்பர் – காந்திமதி அம்பாள் திருக்கோயில். திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயிலில் ஐந்து தேர்கள் உள்ளன. இறைவனுக்கு ஒன்று, இறைவிக்கு ஒன்று, அவர்களின் பிள்ளைகளான விநாயகர், சுப்ரமணியர் ஆகியோருக்கு தலா ஒன்றும், சிவபெருமானின் வாசல் கணக்கர் சண்டிகேஸ்வரருக்கு ஒன்று என ஐந்து தேர்கள் உள்ளன. இவை ஒன்றை விட ஒன்று அளவில் பெரியதும் சிறியதுமாகும். சண்டிகேஸ்வரர் தேர் இந்த ஆண்டு புதியதாக செய்யப்பட்டு மிக அழகாகக் காட்சி அளிக்கிறது.

நெல்லையப்பர் தேர் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே செய்யப்பட்ட அழகு தேராகும். உயரத்திலும் நிறையிலும் அமைப்பிலும் நெல்லையப்பர் தேருக்கு ராஜ கம்பீரம் உண்டு. இதன் வடிவமைப்பு சதுர செவ்வக வடிவமைப்பாகும். அதற்கேற்ப தேர் கூரையும் அழகாகப் பொருந்தியுள்ளது. தேரின் அடிப்பாகத்தில் அலங்கார மண்டபம் போன்ற அமைப்பில் படிப்படியாக வரிசையாக அபூர்வ சிற்பங்கள் கண்களை கவர்கின்றன

தேரில் உள்ள மர சிற்பங்கள் வெப்பத்தால் வெடித்து விடும் எனக் கருதி எண்ணைய்யும் தண்ணீரும் கலந்து ஆண்டுக்கு ஒரு முறை தெளிப்பார்கள். மரங்களில் இயற்கையாக தைல சத்து என்பது இருக்கும். இவை வெட்டப்பட்ட பின்னர் மெதுவாக தைல சத்தை இழந்து விடும். தைல சத்து முழுவதுமாகக் குறைந்து விட்டால் மரத்தில் வெடிப்பு ஏற்படும். இதைத் தடுக்கவே எண்ணெய்யும் தண்ணீரும் கலந்து தெளிக்கிறார்கள். நெல்லையப்பர் திருத்தேர் தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய தேர். இது முக்காலே இரண்டு வீசம் அளவினுடையது. ஸ்ரீவில்லிபுத்தூர் தேர் மூன்றாவது பெரிய தேர். இது முக்காலே ஒன்றரை வீசம் அளவுடையது. திருவாரூர் தேர் தேர்களிலேயே முதன்மையான தேராக விளங்குகிறது.

1948ம் ஆண்டு நம் நாடு சுதந்திரம் அடைந்ததன் வெற்றியைக் கொண்டாடுவதற்காக நெல்லை மக்களின் விருப்பப்படி தேரின் உச்சியில் ரிஷபக் கொடியோடு நம் தேசியக் கொடியும் பட்டொளி வீசி பறந்தது. இதுபோல், இந்தியாவில் வேறு எங்கும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்றுவரையிலும் எந்திரங்களின் உதவியின்றி முழுக்க முழுக்க மனித சக்தி ஒன்றினாலேயே இழுக்கப்படும் மிகப் பெரிய தேர் இதுஒன்றுதான் என்பது இதன் தனிச்சிறப்பாகும். நான்கு வெளிச்சக்கரங்களும் நான்கு உள்சக்கரங்களும் கொண்டு அளவில் பெரியதாக விளங்கும் இத்தேரின் இரும்பு அச்சு லண்டனில் செய்யப்பட்டதாகும். முற்காலத்தில் இதன் மேல் பகுதியில் ஒன்பது தட்டுகள் இருந்ததாகவும் இப்போதுதான் அதனை ஐந்து தட்டுகளாக குறைத்துவிட்டதாகவும் கூறுவர்.

“அம்மையப்பரைப் பார்த்து, மனசு நெறஞ்சு போயிருது” என்று பக்தர்கள் நெகிழ்ந்து கூறுவது, திருநெல்வேலி மக்களின் உள்ளார்ந்த பக்தியையும், தமிழ் மொழியின் ஆன்மீகப் பிணைப்பையும் பறைசாற்றுகிறது. இந்த வார்த்தைகள், வெறும் சொற்களல்ல; அது இறைவனுடனான தனிப்பட்ட மற்றும் ஆழமான உறவின் பிரதிபலிப்பு. ஆனித் திருவிழாவின்போது, “தேர் வருது, பாரு!” என்று கூட்டத்தில் ஒலிக்கும் உற்சாகமான குரல்கள், நெல்லை மக்களின் கொண்டாட்ட உணர்வையும், பக்திப் பெருக்கையும் வெளிப்படுத்துகின்றன. அந்த ஒரு குரல், ஆயிரக்கணக்கானோரை ஒருங்கிணைத்து, ஒரே இலக்கை நோக்கி நகர்த்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

தேரோட்டம்: வெறும் மத நிகழ்வு அல்ல!

பக்திப் பாடல்களை ஒருமித்த குரலில் பாடுவது, தொன்மை வாய்ந்த புராணக் கதைகளை நினைவுகூர்வது, மற்றும் இறைவனின் திருவுருவச் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வது ஆகியவை இவ்விழாவின் சிறப்பு அம்சங்களாகும். இது ஒரு கூட்டுப் பிரார்த்தனையாகவும், சமூக நல்லிணக்கத்திற்கான ஒரு பாலமாகவும் செயல்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், இந்தத் தேரோட்டம் நெல்லை மக்களின் மனதில் நீங்காத நினைவுகளைப் பதித்து, அவர்களின் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் ஒரு உன்னதமான நிகழ்வாகத் திகழ்கிறது. இன்று நெல்லை வீதிகளில் தேர் அசைந்து வரும்போது, பக்தர்களின் “அரோகரா, சிவ சிவா” என்ற கோஷங்களும், மனமுருகிய பிரார்த்தனைகளும் அந்த நகரத்தை ஆன்மீக அதிர்வுகளால் நிரப்புகின்றன. இது திருநெல்வேலியின் தனித்துவமான அடையாளங்களில் ஒன்றாகும்.

காந்தி அக்கா