தேசியக் கணித நாள்:கணித மேதை ராமானுஜன் நினைவுக் குறிப்புகள்!
அறிவியலுக்கு அன்னை என்றும், அனைத்துத் துறைகளின் ஆணிவேர் என்றும் அழைக்கப்படுவது கணிதம். உலகின் ஆரம்பகால கணித வளர்ச்சிக்கு இந்தியா வழங்கிய பங்களிப்பு ஈடு இணையற்றது. குறிப்பாக, ‘பூஜ்ஜியம்’ (Zero) என்ற மாபெரும் தத்துவத்தை உலகுக்கு அறிமுகம் செய்ததே இந்தியாதான். ஆரியபட்டாவுக்குப் பின் 16-ம் நூற்றாண்டில் கணிதத்துறையில் சற்று பின்தங்கியிருந்த இந்தியாவை, 20-ம் நூற்றாண்டில் மீண்டும் உலக அரங்கில் தலைநிமிரச் செய்தவர் மாமேதை சீனிவாச ராமானுஜன்.
10 வயதில் ஆசிரியரை அதிரவைத்த கேள்வி!
1887 டிசம்பர் 22-ல் ஈரோட்டில் பிறந்த ராமானுஜன், மூன்று வயது வரை பேசும் திறனற்றவராகவே இருந்தார். ஆனால், பேசத் தொடங்கியவுடன் அவர் கேட்ட கேள்விகள் உலகையே அதிரவைத்தன.

கும்பகோணத்தில் பள்ளியில் படிக்கும்போது ஆசிரியர் ஒருவர், “பூஜ்ஜியத்திற்கு மதிப்பில்லை” என்று பாடம் நடத்தினார். உடனே எழுந்த சிறுவன் ராமானுஜன், “ஐயா, பூஜ்ஜியத்திற்கு இடதுபக்கம் 1-ஐச் சேர்த்தால் 10 வருகிறதே, பின் எப்படி அதற்கு மதிப்பில்லை என்று சொல்ல முடியும்?” எனக் கேட்டு ஆசிரியரைத் திணறடித்தார்.
அதேபோல், “ஒரு எண்ணை அதே எண்ணால் வகுத்தால் 1 வரும்” என்று ஆசிரியர் சொன்னபோது, “அப்படியானால் பூஜ்ஜியத்தைப் பூஜ்ஜியத்தால் வகுத்தால் 1 வருமா?” என்று அவர் கேட்ட கேள்வி, அவரது 10 வயதிலேயே அவர் ஒரு கணித மேதை என்பதை நிரூபித்தது.
வறுமை மற்றும் ‘மெட்ராஸ் போர்ட் டிரஸ்ட்’ வாழ்க்கை
12 வயதிலேயே கணித நூல்களைத் தேடித்தேடிப் படித்த ராமானுஜன், விடை காண முடியாத சுமார் 6,000 தேற்றங்களை நிரூபிக்க முயற்சி எடுத்தார். வறுமை வாட்டிய நிலையிலும், ‘மெட்ராஸ் போர்ட் டிரஸ்ட்டில்’ எழுத்தராக வேலை பார்த்தார். இவரது திறமையை உணர்ந்த துறைமுக மேலாளர் எஸ்.என். அய்யர், ராமானுஜரின் தேற்றங்களை இங்கிலாந்துக்கு அனுப்ப ஊக்குவித்தார்.
கேம்பிரிட்ஜ் அழைப்பும்… உலகப் புகழும்!
1913-ல் ராமானுஜன் தனது கணிதக் குறிப்புகளை கேம்பிரிட்ஜ் பேராசிரியர் ஜி.ஹெச். ஹார்டிக்கு அனுப்பி வைத்தார். அதைப் பார்த்த ஹார்டி, “இது சாதாரண மனிதரது அல்ல, ஒரு மேதையின் படைப்பு” என்று வியந்து, உடனடியாக ராமானுஜத்தை இங்கிலாந்துக்கு அழைத்தார்.
1914-ல் இங்கிலாந்து சென்ற ராமானுஜன், ஆர்க்கிமிடிஸ் மற்றும் நியூட்டன் போன்ற உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானிகளுடன் ஒப்பிடப்பட்டார். லண்டன் ராயல் சொசைட்டியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் இவரே.
தேசியக் கணித நாளின் நோக்கம்
ராமானுஜனின் அசாத்தியப் பயணத்தை நினைவுகூரவே, 2012-ம் ஆண்டு முதல் டிசம்பர் 22-ம் தேதியைத் ‘தேசியக் கணித நாள்’ ஆக அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார்.
-
மாணவர்களுக்கான உத்வேகம்: எளிய பின்னணியில் பிறந்தாலும், பாடப்புத்தகங்களைத் தாண்டிச் சிந்தித்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு ராமானுஜனே சாட்சி.
-
தர்க்கரீதியான அறிவு: கருத்துகளுக்கு இடையிலான தர்க்கரீதியான தொடர்பைப் புரிந்துகொள்ள மாணவர்களை ஊக்குவிப்பதே இத்தினத்தின் முக்கிய நோக்கம்.
முன்கூட்டியே மறைந்த மாமேதை
இங்கிலாந்தின் தட்பவெப்பநிலை மற்றும் உணவுப் பழக்கம் ராமானுஜருக்கு ஒத்துவரவில்லை. உடல்நிலை பாதிக்கப்பட்டு 1917-ல் இந்தியா திரும்பிய அவர், 1920 ஏப்ரல் 26-ல் தனது 32-வது வயதிலேயே மறைந்தார். அவர் மறைந்தாலும், அவர் விட்டுச் சென்ற கணிதக் குறிப்புகள் இன்றும் பிளாக் ஹோல் முதல் நவீன இயற்பியல் வரை பல துறைகளில் வழிகாட்டியாக உள்ளன.
இன்று பள்ளிகள், கல்லூரிகளில் நடைபெறும் சிறப்பு நிகழ்வுகள், ராமானுஜன் என்ற ஒற்றைப் பெயரின் பின்னால் இருக்கும் உழைப்பையும், அறிவையும் இளைய தலைமுறைக்குக் கொண்டு செல்கின்றன.
தனுஜா


