நாம் தமிழர் கட்சி – ஒரு அலசல்!
இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெற்ற 35 லட்சத்துச் சொச்சம் வாக்குகளால் மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உயர்ந்திருக்கிறது.
– கரும்பு விவசாயி சின்னம் பறிப்பு
– ஒன்றிய அரசின் அதிகாரிகளின் ரெய்டு
– மற்ற கட்சிகளைப் போல பெரிய அளவு செலவு செய்ய முடியாத நிலைமை
– வாக்காளர்களுக்கு ஒரு ரூபாய்கூடக் கொடுக்காமல் கிடைத்த ப்யூர் & புனிதமான வாக்குகள் -இவற்றையும் மீறி மக்களின் நம்பிக்கையை இந்த அளவு பெற்றிருப்பது உண்மையில் பாராட்டத்தக்கது.
எப்படி இந்த அளவு வாக்குகள் கிடைத்தன? பலதரப்பட்ட மக்கள் சொல்லும் தரவுகள்:
– சீமானின் ஆவேசமான பேச்சுக்கு இளைஞர்கள் கை உயர்த்தினார்கள்
– பெரிய பெரிய கட்சிகளுக்குச் சற்றும் குறைவில்லாமல் வலைத்தளங்களில் போட்டி போட்டுப் பரப்பிய விதம்
– இயற்கையைப் பற்றி, மக்களின் வாழ்க்கை பற்றி, தற்சார்புப் பொருளாதாரம் பற்றி சீமான் எடுத்து வைத்த கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட மத்திய வயதுக்காரர்கள்
– தேர்தலுக்குச் சற்று முன் விஜய்யின் சிங்கிள் வந்ததும், அதில் மைக் சின்னம் இருந்ததும், எதிர்காலத்தில் விஜய்யும், சீமானும் இணைந்து செயல்படுவார்கள் என்று பரப்பப்பட்டதும்…காரணங்கள் என்று அடுக்குகிறார்கள்.
சரி, வரும் 2026-ல் வரப் போகும் சட்டமன்றத் தேர்தலில் நா.த.க. என்ன செய்ய வேண்டும்?
முதலில் சில புள்ளி விபரங்கள்:
1. தமிழ்நாட்டில் 2024-ல் மொத்த வாக்காளர்கள் 6 கோடியே 18 லட்சம் பேர். இதில் ஆண்கள் சுமார் 3 கோடிப் பேர். பெண்கள் சுமார் 3.14 கோடிப் பேர்.
2. இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் வாக்களித்தவர்கள் சுமார் 4.26 கோடிப் பேர்.
3. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கப் போகிறவர்கள் சுமார் 4.50 கோடிப் பேர்.
4. இதில் 18 – 25 வயதுக்காரர்கள் சுமார் – 1 கோடி.,25 – 35 வயதுக்காரர்கள் சுமார் – 1.30 கோடி.,35 – 50 வயது – 1.40 கோடி .,50 வயதிற்கு மேற்பட்டவர்கள் – 80 லட்சம் பேர்
5. 18 – 25 வயது வாக்காளர்களில் சரிபாதி பெண்கள் என்று வைத்துக் கொண்டால், ஆண்கள் சுமார் 50 லட்சம் பேர்.
இந்த ஆண்கள் கூட்டம்தான் நா.த.க.வுக்குப் பெரிய பலம். சுமார் 20 – 23 லட்சம் பேர் நா.த.க.வுக்கு வாக்களித்திருக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த வயதில் இருக்கும் பெண்கள் சுமார் 4-6 லட்சம் வாக்களித்திருக்கலாம்.
6. 25 – 35 வயதுக்காரர்களில் ஆண்கள் சுமார் 5 லட்சமும், பெண்கள் சுமார் 2 லட்சமும் வாக்களித்திருக்கும் வாய்ப்பு அதிகம்.
7. 35 வயதிற்கு மேற்பட்டவர்கள் பெரும்பாலும் மற்ற கட்சிகளுக்குத்தான் வாக்களிக்கிறார்கள். அவர்கள் அத்தனை எளிதில் வேறு சின்னத்திற்குப் பொதுவாக மாறுவதில்லை. சீமானின் ஆவேசமான பேச்சு நடுத்தர வயதுக்காரர்களை அந்த அளவு ஈர்ப்பதில்லை. காரணம், குடும்பம், வேலை, பொருளாதாரம் என்று சிறு கூட்டுக்குள் சுருங்கும் நிலை அவர்களது. உணர்ச்சிவசப்பட்டு சின்னத்தை மாற்றுவதில்லை.
8. தவறாக இருந்தாலும் வாக்களிக்கப் பணம் வாங்கிப் பழகியவர்கள், வேறு கட்சிகளுக்கு லேசில் வாக்குகளை மாற்றிப் போட மாட்டார்கள். என்னதான் கரடியாய்க் கத்தினாலும், எடுத்துச் சொன்னாலும் வறுமையும், ஆசையும் இலவசமாக வரும் பணத்தைப் பெரும்பாலும் விட்டுவிட மனசு வருவதில்லை.
இதே நிலைமையோடு வரும் 2026 சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்தால் நா.த.க. வின் உயர்வு எப்படி இருக்கும்?
இதற்குச் சில தரவுகளை அலச வேண்டியிருக்கிறது.
1. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி என்ற பேச்சு பரவலாக இருக்கிறது. இப்படியொரு கூட்டணி அமைவது சாத்தியம்தானா? அப்படி அமைந்தால் அது எந்த அளவிற்கு அதிக வாக்குகளை இவர்களுக்குப் பெற்றுத் தரும்?
2. ஒரு உறையில் 2 கத்தி என்ற நிலைமை வராதா? கடந்த 10 வருடங்களுக்கும் மேல் ஒரு கட்சியைக் கட்டமைத்து, ஓய்வு இல்லாமல் அலைந்து திரிந்து, அங்கீகாரமான கட்சியாக ஆக்கிய சீமானை அரியணையில் அமர வைக்க, நம்பர் – 1 இடத்திலிருக்கும்போதே அதனைத் துறந்து தியாகம் செய்த விஜய் விரும்புவாரா? அல்லது நேற்று கட்சி ஆரம்பித்து, இன்னும் முழுமையான கட்டமைப்பை ஏற்படுத்தாத விஜய்யை அரியணையில் அமர வைக்க சீமான் சம்மதிப்பாரா? வாய்ப்பு குறைவு என்பது பெரும்பாலானோரின் கருத்து.
3. விஜய்க்கு இருப்பதாக எதிர்பார்க்கப்படும் வாக்குகளும் 18 – 30 வயதுக்குள் இருப்பவர்கள். இவர்களில் பெண்கள் வாக்குகள் நா.த.க.வைவிட விஜய்க்குக் கொஞ்சம் அதிகமாக வர வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை விஜய் தனியாக நின்றால் நா.த.க.விலிருந்து சுமார் 10 லட்சம் வாக்குகள் அவருக்குப் போகும் வாய்ப்பு இருக்கிறது. அவரது கட்சி முதல் தேர்தலில் சுமார் 20 – 25 லட்சம் வாக்குகள் வாங்கக் கூடும். எனவே, விஜய் வரவால் பெரிதும் பாதிக்கப்படப் போவது நா.த.க.தான்.
4. திமுக இப்போது 40 இடங்களையும் கைப்பற்றியிருக்கலாம். இது அந்தக் கட்சிக்கான பெரிய எச்சரிக்கை.
நம்மை மீறி வேறு யாரும் வெற்றிபெற முடியாது என்ற ஆணவம் நிச்சயம் கொஞ்சமாவது வரும். அது மற்ற போட்டிக் கட்சிகளுக்கு வாய்ப்பாக அமையும்.
5. இந்தமுறை திமுகவிற்கு விழுந்த வாக்குகள் அவர்களை விரும்பி, ஆதரித்த வாக்குகள் அல்ல. மத்தியில் பாஜக வரக்கூடாது என்ற வாக்குகள் அதிகம். அதிலும் இஸ்லாமியர், கிரிஸ்தவர் வாக்குகளும், ஓரளவு தலித் வாக்குகளும்.
6. உடனிருந்த இஸ்லாமியக் கட்சிகளுக்கு திமுக மேல் அதிருப்தி இருக்கிறது. வரப் போகும் தேர்தலில் அது சில சதவீத வாக்குகளைச் சிதறடிக்கும்.
7. திமுக வாக்கு வங்கியிலிருந்து சில சதவீதத்தை விஜய் பறிக்கக்கூடும்.
8. அதிமுக இன்னும் கொஞ்சம் சமரசம் செய்து கூட்டணியைப் பலப்படுத்தினால் திமுக வாக்குகள் மேலும் பலவீனப்படும்.
9. நா.த.க. ஏதாவதொரு வகையில் கூடடணி அமைக்க முயற்சித்தால், கொள்கையில் பிற நாடு தவிர்த்து நம் மண்ணுக்கான விசயம் அதிகமிருந்தால், பெண்களைக் கவரும் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டால், ஐம்பதைக் கடந்தவர்களுக்கும் நம்பிக்கை ஏற்படும் வகையில் நடந்துகொண்டால், சிறுபான்மை மக்களை ஆதரவோடு கையாண்டால்…
நிச்சயம் மற்ற அனைத்துக் கட்சிகளின் வாக்கு வங்கிகளை அசைத்துப் பார்க்கும் சக்தியாக மாறும்.
10. வாக்கு சதவீதம் படிப்படியாக உயர்வது மட்டும் போதாது. அதிகாரத்தில் சிலராவது அமர வேண்டும். வரும் சட்டமன்றத் தேர்தலில் குறைந்தது 10 எம்.எல்.ஏ.க்களாவது வர வேண்டும். அப்படி வரும் பட்சத்தில் தொண்டர்களிடம் உற்சாகம் உண்டாகும். அது கட்சியின் எதிர்காலத்தை வளமாக்கும். அப்படியில்லாமல் ஒருவேளை வாக்கு 15-20% வாங்கியும், ஒருத்தர்கூட வெற்றிபெறவில்லை என்றால் நிர்வாகிகளிடமும், தொண்டர்களிடமும் அகமன சோர்வு வந்துவிடும்.
11. ஒவ்வொரு தேர்தலிலும் புதிது புதிதாக வேட்பாளர்களைப் போடாமல் பழகிய முகம் வேண்டும். அது அந்தந்தப் பகுதி மக்களிடம் நம்பிக்கையை அதிகரிக்கும்.
பார்க்கலாம் என்ன நடக்கப் போகிறதென்று!