மிசஸ் & மிஸ்டர்- விமர்சனம்!.

மிசஸ் & மிஸ்டர்- விமர்சனம்!.

னிதா விஜயகுமார் என்றதும், அவரது சினிமா அறிமுகம், தைரியமான மற்றும் அதிகப்பட்ச சர்ச்சைக்குரிய தனிப்பட்ட வாழ்க்கை, பேட்டிகள் மட்டுமின்றி பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவரது பங்கேற்பு ஆகியவைதானே பெரும்பாலும் நினைவுக்கு வரும். அப்பேர்பட்டவர் தன் இளம் மகள் சம்பாத்தியத்தைப் போட்டு இவரே நாயகியாக நடித்து கதை எழுதி ஒரு படத்தை இயக்கி வழங்கி கவர முயன்றுள்ளார். வயதாகிவிட்ட கோளாறாலோ என்னவோ எல்லை மீறிய .கவர்ச்சிக் காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள் ஆகியனவற்றைத் தாராளமாக வைத்து முகம் சுளிக்க வைத்து விட்டார்.

அதாவது லவ்மேரேஜ் செய்து கொள்ளும் வனிதா விஜயகுமாரும், செஃப் ராபர்ட்டும் பாங்காக்கில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். 40 வயதை எட்டும் வனிதா குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறார். ஆனால், ராபர்ட் வேண்டாம் குழந்தை என்று மறுத்து வருகிறார். இதனால் இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டாலும், கர்ப்பமாவதற்கான சகல பராக்கிரமங்களையும் வனிதா பிரயோகித்து வருகிறார். அதன்படி வனிதா கர்ப்பமாகி விட, ராபர்ட்டுகு தெரிந்தால் குழந்தை பெற்றுக்கொள்ள தடையாக இருப்பார், என்று நினைத்து அவருக்கு தெரியாமல் பாங்காக்கில் இருந்து இந்தியா வந்துவிடுகிறார். வனிதாவின் பிரிவை தாங்க முடியாமல் தவிக்கும் ராபர்ட், வனிதாவை தேடி இந்தியா வருகிறார். வனிதா ஆசைப்பட்டது போல் குழந்தை பெற்றுக் கொண்டாரா?, அவரது கணவர் ராபர்ட் குழந்தை வேண்டாம் என்று சொல்வதற்கான காரணம் என்ன ? என்பதே படத்தின் கதை.

ஹீரோயினாக நடித்திருக்கும் வனிதா விஜயகுமார், 40 வயது பெண்மணி ரோலில் பத்து பொருத்தமும் பக்காவாக பொருந்தியிருக்கிறார். ராபர்ட்டை உருகி உருகி காதலிப்பவர், குழந்தை பெற்றுக் கொள்வதற்காக செய்யும் வேலைகள் அனைத்தும் ஓவர் கசமுசாவாக இருக்கிறது. ஒரு 40 வயது கடந்த ஒரு பெண்ணிற்குக் குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆசை வர அப்பொழுது அவர் சந்திக்கும் சிக்கல்கள், அவர் சந்திக்கும் உளவியல் பிரச்சனைகள், சுற்றி இருக்கும் சமூகத்தின் அழுத்தங்கள் என அவர் சந்திக்கும் உளவியல் மற்றும் உடல் ரீதியான பிரச்சனைகளை எல்லாம் சரியாக சொல்வதில் ஜெயித்து விடுகிறார்.

வனிதாவின் ஹஸ்பெண்டாக நடித்திருக்கும் நடன இயக்குநர் ராபர்ட், வனிதா மட்டும் போதும், குழந்தை வேண்டாம் என்பதற்கான காரணத்தை மறைத்து, அவரை காப்பாற்ற போராடும் காட்சிகளில் நேர்த்தியாக நடித்திருக்கிறார். வனிதாவின் அம்மாவாக நடித்திருக்கும் அந்த கால செக்ஸ் பாம் ஷகிலா, பவர் ஸ்டார் சீனிவாசன், ஃபாத்திமா பாபு, ஸ்ரீமன், ஆர்த்தி கணேஷ், கணேஷ்குமார், ரவிகாந்த், அனுமோகன், வாசுகி, ஸ்வேதா பாரதி என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் மற்றும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருக்கும் கிரண் என அனைவரும் அதர பழைய நடிகர்களாக இருப்பதால், அவர்களது திரை இருப்பு மற்றும் நடிப்பு படத்திற்கு எந்தவிதத்திலும் கைகொடுக்கவில்லை.

ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் சுமார் .பின்னணி இசை தேவையான அளவு அமைந்திருக்கிறது. கேமராமேன் டிஜி கப்பில் ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்ஃபுல்லாக இருக்கின்றன. வெளிநாடு சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நடிப்பு இயக்கம் தயாரிப்பு என அனைத்து துறையிலும் தானே முழுமையாக இன்வால்வாகி அதைச் சிறப்பான முறையில் கொடுத்து கவனம் பெற்ற வனிதா விஜயகுமார் நல்ல கதையைத் தேர்ந்தெடுத்து விட்டு அதை திரைக்கதை ஆக்குவதில் கவனம் சிதறி பலான சினிமா லெவலில் எடுத்து விட்டார்.

மொத்தத்தில் இந்த மிசஸ் & மிஸ்டர் – பர்வெர்டட் ஓல்ட் கப்பிள்

மார்க் 2/5

Related Posts