தனியார் வசம் போகப் போகும் மத்திய அரசின் சொத்துக்கள் பட்டியல்!

தனியார் வசம் போகப் போகும் மத்திய அரசின் சொத்துக்கள் பட்டியல்!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கி வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் கண்டனம் எழுந்து வரும் நிலையில், மத்திய அரசின் பெரும்பாலான சொத்துக்களை தனியாருக்கு குத்தகைக்கு விட்டு பணமாக்கும் புதிய திட்டத்தை தற்போது அறிவித்துள்ளது. கொரோனா போன்ற பேரிடரால் அரசின் வளர்ச்சி திட்டங்களுக்குப் போதுமான நிதி ஆதாரங்கள் இல்லாத நிலையில், இத்தகைய முடிவுகளை எடுக்க வேண்டியது கட்டாயமாகியுள்ளது என பாஜக தரப்பில் விளக்கம் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவதற்காக புதுமையான, மாற்று வழிகளில் நிதி திரட்டும் நோக்கில் சொத்துக்களைப் பணமாக்கும் திட்டம் குறித்து 2021-22ம் நிதியாண்டின் நிதிநிலை அறிக்கையில் வலியுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி, நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட பல்வேறு கட்டுமான திட்டங்கள், முக்கியமான அறிவிப்புகளை நிறைவேற்றவும், அதற்கான நிதியை திரட்டவும், அரசு சொத்துகளை ஏலம், குத்தகைக்கு விட்டு நிதி திரட்டும் திட்டத்தை ஒன்றிய அரசு உருவாக்கியுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்பு சொத்துக்களை அடுத்த 4 ஆண்டுகளில், அதாவது வரும் 2022 முதல் 2025 வரை, பணமாக மாற்றுவதை இலக்காக கொண்டு தேசிய பணமாக்கல் ஆதார வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில், குத்தகைக்கு விட முடிவு செய்யப்பட்டுள்ள மத்திய அரசின் சொத்துக்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வழிமுறைகள் முதலீட்டாளர்களுக்கு தொலைநோக்கை அளிப்பதோடு, சொத்துக்களை குத்தகைக்கு விட்டு பணமாக்கும் ஒன்றிய அரசின் முயற்சிக்கு, இடைக்கால திட்டமாகவும் செயல்படும் என்று நிதி ஆயோக் தெரிவித்துள்ளது. 25 விமான நிலையங்கள், 400 ரயில் நிலையங்கள், 15 ரயில் விளையாட்டு அரங்கங்கள், 26,700 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகள், உள்பட 12 அமைச்சகங்களின் 20 சொத்துக்கள் குத்தகைக்கு விட்டு நிதி திரட்டப்பட உள்ளது. இதன் மூலம் உருவாக்கப்படும் நிதி ஆதாரங்கள் நாட்டின் பொருளாதாரம், அதன் வளர்ச்சிக்கு வலிமை சேர்க்கும் திட்டங்களுக்காக முதலீடு செய்யப்படும் என ஒன்றிய அரசின் முதலீட்டு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறையின் செயலாளர் துகின் காந்தா பாண்டே தெரிவித்துள்ளார்.

நிதி ஆயோக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஆதார வழிமுறைகள் புத்தகத்தில், ” நெடுஞ்சாலை, ரயில்வே, மின் உற்பத்தி, மின் விநியோகம், எரிவாயு குழாய்கள், உற்பத்தி குழாய் / மற்றவை, தொலைத்தொடர்பு, சேமிப்பு கிடங்கு, சுரங்கம், விமான நிலையங்கள், துறைமுகம், விளையாட்டு மைதானம் மற்றும் ரியல் எஸ்டேட் மூலம் நிதி திரட்ட போவதாகக் கூறப்பட்டுள்ளது.தமிழகத்தை பொறுத்தவரையில் தனியாருக்கு அளிக்கப்படும் சொத்துக்களின் பட்டியலில், சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட விமான நிலையங்கள், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 3 திட்டங்கள், நீலகிரி மலை ரயில் பாதை திட்டம் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

தனியாருக்கு கொடுக்கப்பட உள்ள அரசு துறைகளின் சொத்துக்கள் மற்றும் அவற்றின் மதிப்பு பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. நெடுஞ்சாலை(துறை) – 26,700 கி.மீ (சொத்து) – ரூ.1,60,200 கோடி (மதிப்பு)

2. ரயில்வே – 400 ரயில் நிலையங்கள், 90 ரயில்கள், மற்றும் பல – ரூ.1,52,496 கோடி

3. மின் விநியோகம் – 28,608 சர்கியூட் கி.மீ – ரூ.45,200 கோடி

4. மின் உற்பத்தி – 6.5 ஜிகா வாட் கொண்ட மின் உற்பத்தி சொத்துக்கள் – ரூ.39,832 கோடி

5. எரிவாயு குழாய்கள் – 8,154 கி.மீ குழாய்கள் – ரூ. 24,462 கோடி

6. உற்பத்தி குழாய்கள் / மற்றவை – 3,930 கி.மீ குழாய்கள் – ரூ. 22,504 கோடி

7. தொலைத்தொடர்பு – 2.89 லட்ச கி.மீ பாரத்நெட் பைபர், 14,917 பிஎஸ்என்எல் & எம்டிஎன்எல் கோபுரங்கள் – ரூ. 35,100 கோடி

8. சேமிப்பு கிடங்கு – 210 லட்சம் மெட்ரி டன்(எல்எம்டி) – ரூ.28,900 கோடி

9. சுரங்கம் – 160 திட்டங்கள் – ரூ. 28,747 கோடி

10. விமான நிலையங்கள் – 25 விமான நிலையங்கள் – ரூ. 20,782 கோடி

11. துறைமுகம் – 9 முக்கிய துறைமுகங்களில் 31 திட்டங்கள் – ரூ. 12,828 கோடி

12. விளையாட்டு மைதானம் – 2 தேசிய மைதானங்கள் மற்றும் 2 பிராந்திய மையம் – ரூ. 11,450 கோடி

error: Content is protected !!