பெகாசஸ் ஸ்பைவேர் உளவு விவகாரம் …!-மோடி அரசு கண்டறிய வேண்டும்!

பெகாசஸ் ஸ்பைவேர் உளவு விவகாரம் …!-மோடி அரசு கண்டறிய வேண்டும்!

ழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று இந்தியாவில் பெகாசஸ் ஸ்பைவேர் பயன்படுத்தப்பட்டு பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் தொலைபேசிகள் ஹேக் செய்யப்பட்டுள்ளது தொடர்பான காரசாரமான விவாதங்களும், எதிர்க்கட்சிகளின் விமர்சன ஏவுகணைகளும் பல தரப்பிலிருந்து பாய்ந்து கொண்டிருக்கின்றன. இந்த பெகாசஸ் தொழில்நுட்பம் அரசாங்கங்களுக்கு மட்டுமே தன் சேவையை வழங்கும் என்பதால் இச்சர்ச்சையில் மோடி அரசு சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலில் இருந்து இயக்கும் பிரபலமான என்.எஸ்.ஓ-வின் ‘பெகாசஸ்’ ஸ்பைவேரை பயன்படுத்தி நம் நாட்டில் மத்திய அமைச்சர்கள், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் உள்ளிட்டோரின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக தி கார்டியன், வாஷிங்க்டன் போஸ்ட் உள்ளிட்ட சர்வதேச பத்திரிகைகளில் முக்கியமான அறிக்கை ஒன்று வெளியிடப்பட உள்ளதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய ஸ்வாமி மற்றும் ஷீலா பட் உள்ளிட்ட மூத்த பத்திரிகையாளர்கள் சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு நேற்றைய தினம் முழுவதும் இந்திய மக்களைப் பலத்த எதிர்பார்ப்பில் ஆழ்த்தியிருந்தனர். இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட பெகாசஸ் ஸ்பைவேர் குறித்த அறிக்கையானது நேற்றிரவு 9.30 மணிக்கு வெளியானது. தி வயர், தி கார்டியன், வாஷிங்க்டன் போஸ்ட் உள்ளிட்ட சர்வதேச பத்திரிகைகள் இணைந்து பணியாற்றிய `ப்ராஜெக்ட் பெகாசஸ்’-ன் புலனாய்வு அறிக்கையில் இந்தியாவில் பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் ஒரு சில மத்திய அமைச்சர்கள் உள்பட சுமார் 300 இந்தியர்களின் தொலைபேசிகள் இஸ்ரேல் நிறுவனத்தின் பெகாசஸ் ஸ்பைவேர் மென்பொருளைப் பயன்படுத்தி உளவு பார்க்கப்பட்டுள்ளதாக வெளியான அதிர்ச்சி தகவல்கள்தான் பெரும் புயலை கிளப்பியுள்லது.

பிரான்சை சேர்ந்த ஃபர்பிடன் ஸ்டோரிஸ் மற்றும் ஆம்னெஸ்டி இண்டர் நேஷனல் என்ற சர்வதேச மனித உரிமை அமைப்பிற்கு கிடைத்த சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்களை, உலகத்தின் தலை சிறந்த 16 பத்திரிகை நிறுவனங்கள் ஒன்றிணைந்து ஆராய்ந்ததுடன், அது தொடர்பாக புலன் விசாரணையை நடத்தியுள்ளனர்.
இந்த விசாரணையின் முடிவில், என்எஸ்ஓ குரூப் நிறுவனம் தயாரித்துள்ள, பெகசிஸ் என்ற ஸ்பைவேரை பயன்படுத்தி, இந்தியாவில் சுமார் 40 பத்திரிகையாளர்கள் வேவு பார்க்கப்பட்டது தெரியவந்துள்ளது. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர், பத்திரிகையாளர்கள் வேவு பார்க்கப்பட்டள்ளனர்.

கண்காணிக்கப்பட்டோரின் பட்டியலில், டெல்லியில் இருந்து செயல்படும் முக்கிய பத்திரிகையாளர்கள் பலர் இடம்பெற்றுள்ளனர். அதில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா மற்றும் நிகில் எனும் தொழிலதிபருக்கும் இடையே நடந்த ஒப்பந்தங்கள் பற்றி செய்தி வெளியிட்ட தி வயர் இணையதளத்தைச் சேர்ந்த் ரோகிணி சிங், அந்த இணையதளத்தின் நிறுவனர்கள் சித்தார்த் வரதராஜன் மற்றும் எம்.கே.வேணு, தி வயர் இணையதளத்திற்கு எழுதிவரும் தேவிரூபா மித்ரா, பிரேம்குமார் ஜா மற்றும் ஸ்வாதி சதுர்வேதி, ரஃபேல் விமான ஊழல் பற்றி தொடர்ச்சியாக எழுதி வந்த தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையைச் சேர்ந்த் சுஷாந்த் சிங், கல்வி மற்றும் தேர்தல் ஆணையம் தொடர்பான செய்திகளை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் எழுதி வரும் ரித்திகா சோப்ரா, காஷ்மீர் தொடர்பான செய்திகளை எழுதிவரும் முசாமீல் ஜமீல் ஆகியோர் இடம் பெற்றிப்பதாக தெரியவந்துள்ளது.

பெகசிஸ் ஸ்பைவேர் குறித்து கருத்து தெரிவித்துள்ள என்எஸ்ஓ குரூப் நிறுவனம், அந்த மென்பொருளை தனியாருக்கோ, தனி நபருக்கோ தாங்கள் விற்பதில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. அதேபோல், நம்பகமான அரசுகளுக்கு மட்டுமே அதை விற்பதாகவும், தீவிரவாதத்தை தடுப்பதற்கும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குமே பெகசிஸ் ஸ்பைவேர் பயன்டுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. என்எஸ்ஓ நிறுவனத்தின் இந்த கருத்து, பெகசிஸ் ஸ்பைவேர், அரசுகளுக்கு மட்டுமே விற்கப்படுவதை உறுதி செய்துள்ளது. அப்படியிருக்கும்போது, அது உண்மையென்றால், இந்தியாவில் உள்ள பத்திரிகையாளர்களை பெகசிஸ் ஸ்பைவேரை பயன்படுத்தி அரசை தவிர வேறு யார் வேவு பார்த்திருக்க முடியும்?

ஆனால், ஒன்றிய அரசு பத்திரிகையாளர்களை உளவு பார்க்கவில்லை என்று கூறியுள்ளது. அப்படியென்றால் யார் உளவு பார்த்தது? மற்றொரு நாட்டை சேர்ந்த அரசா? அப்படி நடந்திருந்தால் இது நாட்டின் இறையாண்மைக்கு எதிராக நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இல்லையா? இதை கண்டுபிடிக்க வேண்டியது அரசின் கடமை இல்லையா?

ஆகவே, நாங்கள் வேவு பார்க்கவில்லை என்று கூறிவிட்டு இந்த விவகாரத்திலிருந்து விலகிவிடாமல், யார் வேவு பார்த்தது என்பதை கண்டுபிடிக்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமை. அந்த கடமையை நிறைவேற்றுவதன் மூலம், இந்தியாவின் இறையாண்மையையும், அரசியல் சாசனம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள உரிமையும் நிலைநாட்டப்பட வேண்டும்

சபரீசன்

error: Content is protected !!