தி.மு.க, வின் செயல் தலைவரானார் மு.க.ஸ்டாலின்!

தி.மு.க, வின் செயல் தலைவரானார் மு.க.ஸ்டாலின்!

தி.மு.க. தலைவர் கருணாநிதி வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.அவர் முழுமையாக கட்சிப் பணிகளை ஆற்ற முடியாத நிலையில் இருப்பதால் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினை செயல் தலைவராக தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக தி.மு.க. பொதுக்குழு சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கத்தில் இன்று காலை 9 மணிக்கு கூடியது. கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கலந்து கொள்ளவில்லை. எனவே பொதுச்செயலாளர் அன்பழகன் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். அன்பழகன் பெயரை அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி முன்மொழிய, செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் வழி மொழிந்தார். இதையடுத்து பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.

mk stalin jan 4

கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணைப்பொதுச்செயலாளர் துரைமுருகன், ஆற்காடு வீராசாமி, மகளிர் அணி செயலாளர் கனிமொழி, முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு மற்றும் முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும் முதலில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெய லலிதா, முன்னாள் அமைச் சர்கள் கோ.சி.மணி, சற்குண பாண்டியன், துக்ளக் ஆசிரியர் சோ, நடிகை மனோ ரமா, வ.செ.குழந்தைச்சாமி மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பிறகு மேலும் 16 தீர்மானங்கள் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து தி.மு.க.வுக்கு செயல் தலைவரை தேர்வு செய்யும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்காக தி.மு.க.வின் சட்ட விதியில் திருத்தம் மற்றும் புதிய இணைப்பு ஒன்று செய்யப்பட்டது. அந்த சட்ட திருத்தத்தை அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கொண்டு வந்தார். அதை பொதுக்குழு கூட்டத்தில் வாசித்தார்.

அவர் கூறியதாவது:- “கழக சட்ட திட்டத்தின் விதி 18-ல் ஏற்கனவே 3 பிரிவுகள் உள்ளன. 4-வது பிரிவாக சட்ட திட்டத்தில் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது. அதன்படி விதி 18 பிரிவு 4-19-ல் குறிப்பிட்டுள்ளதில் மாறுபாடு இன்றி தலைவர் பதவி விலகினாலோ நீண்ட நாட்களுக்கு பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டாலோ கழக பொதுக்குழு செயல் தலைவராக ஒருவரை நியமிக்கலாம். இந்த சட்ட திருத்தத்தில் தலைவருக்கு அளிக்கப்பட்ட அனைத்து அதிகாரங்களையும், பணிகளையும் செயல் தலைவர் ஆற்றுவார். இந்த சட்ட திருத்தத்துக்கு உங்கள் ஆதரவை தெரிவிக்கும் வகையில் கரவொலி எழுப்பி தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

உடனே அரங்கில் கூடியிருந்த நிர்வாகிகளும், பொதுக்குழு உறுப்பினர்களும் நீண்ட நேரம் கரவொலி எழுப்பினார்கள். அண்ணா அறிவாலயத்துக்கு வெளியேயும் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.

அதன்பிறகு தி.மு.க. சட்டவிதி திருத்த அறிவிப்பை பொதுச்செயலாளர் அன்பழகனிடம் ஆர்.எஸ்.பாரதி வழங்கினார்.
அதைப் பெற்றுக் கொண்டு அன்பழகன் பேசுகையில், கழக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட கழக சட்ட திட்ட விதி 18, 4-ன் கீழ், செயல் தலைவராக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பெயரை முன்மொழிகிறேன். அவர் பொருளாளர் பொறுப்புடன் செயல் தலைவர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என்றார்.

உடனே மு.க.ஸ்டாலின் எழுந்து அன்பழகன் காலைத் தொட்டு வணங்கி ஆசி பெற்றார். பிறகு அன்பழகனிடம் இருந்து செயல்தலைவர் நியமன அறிவிப்பை ஸ்டாலின் பெற்றுக்கொண்டார். செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் நியமிக்கப்பட்டதை வழிமொழிந்து துரைமுருகன், அன்பழகன் ஆகியோர் பேசினார்கள்.

இதையடுத்து கூட்டத்தில் பேசிய தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், “நான் நன்றியுரையாற்ற வரவில்லை. ஏற்புரையாற்ற மட்டுமே வந்துள்ளேன். உடல் நலக்குறைவால் திமுக தலைவர் கருணாநிதி வராமல் பொதுக்குழு நடக்கிறது. தலைவரான கருணாநிதி வர முடியாத நிலை இருப்பதால் திமுக விதிமுறைகளில் திருத்தம் செய்து என்னை செயல் தலைவராக்கியுள்ளனர். செயல் தலைவராக நியமித்தது திடீரென எடுத்த முடிவு இல்லை. ஓய்வுக்கே ஓய்வு கொடுத்தவர் கருணாநிதி. ஆனால் அவருக்கு இப்போது ஓய்வு தேவைப்படுகிறது. கருணாநிதி நல்லபடியாக உடல்நலம் தேற வேண்டும் என்பதால் ஓய்வு கொடுத்துள்ளோம்.

நான் சிறு வயது முதல் அரசியலில் ஈடுபாடு கொண்டு செயலாற்றினேன். பல்வேறு பதவிகள் எனக்கு கட்சியில் கிடைத்தன. அனைத்துமே நியமன பொறுப்பு கிடையாது. ஜனநாயக முறையில் போட்டியிட்டுதான் வெற்றி பெற்று பதவிகளுக்கு வந்தேன். ஆனால், முன்பெல்லாம் புதிய புதிய பொறுப்புகளுக்கு வந்தபோது, மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைந்தேன். ஆனால் இப்போது மகிழ்ச்சியடையவில்லை.

தலைவர் உடல் நலம் இப்படி இருக்கும் சூழலில் செயல் தலைவராக பொறுப்பேற்பதால் மகிழ்ச்சியடைய முடியவில்லை. உங்கள் அன்பால்தான் இந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளேன். செயல் தலைவர் என்றாலும், கட்சி தலைவருக்கு துணை நிற்கும் வகையில்தான் எனது பணி அமையும். தலைவர், பொதுச்செயலாளர், முதன்மை செயலாளர், கழக முன்னோடிகள் காட்டும் வழியில் நின்று உறுதியாக இயக்கப் பணியை உங்கள் ஒத்துழைப்போடு நான் ஆற்றுவதற்கு தயாராக இருக்கிறேன். இதுவே எனது ஏற்புரை. கருணாநிதி அடிக்கடி என்னிடம் ஒரு விஷயத்தை சொல்வது உண்டு. பல நிகழ்ச்சிகளில் நானும் அதை சொல்லியுள்ளேன்.

நான் சென்னை மேயராக பொறுப்பேற்றபோது, “அது பதவியில்லை, பொறுப்பு” என்று என்னிடம் கருணாநிதி கூறினார். மக்களுக்கு பொறுப்போடு கடமையாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் அதை பொறுப்பு என குறிப்பிடுகிறேன், என்று கருணாநிதி குறிப்பிட்டார். அதேபோல செயல் தலைவர் பதவியை பதவியாக கருதவில்லை. பொறுப்பாக ஏற்றுக்கொள்கிறேன். கருணாநிதி, அன்பழகன், பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் இதயமார்ந்த வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று அவர் கூறினார்.

Related Posts