அன்னை தெரசாவின் வெள்ளை ஆடைக்கு பிராண்டிங் உரிமை!
நோபல் பரிசு பெற்ற ரோமன் கத்தோலிக்க கன்னியாஸ்திரியான அன்னை தெரசா அணிந்த நீல நிற மூன்று கோடு களை ஓரமாக கொண்டிருக்கும் வெள்ளை நிற சேலைக்கு பிராண்ட் அடையாளம் வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வெள்ளை சேலை, வணிக ரீதியாக தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கும் நோக்கில் அன்னை தெரசா நிறுவிய மிஷினரிஸ் ஆப் சேரிட்டி துறவற சபைக்கு இந்த பிராண்ட் அடையாள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அன்னை தெரசாவை, “கொல்கத்தா புனித தெரசா” என்று வத்திக்கான் புனிதராகப் பிரகடனப்படுத்திய நேரத்தில், இந்த நீல நிற ஓரமுடைய வெள்ளை சேலை “மிஷினரிஸ் ஆப் சேரிட்டி” துறவற சபையினருக்கு அறிவு சார் சொத்துரிமையாக இந்திய அரசு வழங்கியது. ஆனால், அந்த நேரத்தில் பொதுவெளியில் அறிவிக்காமல் இதனை ரகசியமாக வைத்துக்கொள்ள இந்த துறவற சபை முடிவு செய்திருந்தது.
மூன்று நீல நிற கோடுகளை ஓரமாக கொண்ட வெள்ளை சேலை அணிந்து கொண்டு இந்தியாவின் கொல்கத்தா (கல்கத்தா) மாநகரில் ஏழைக்ளுக்காக சுமார் அரை நுற்றாண்டாக அன்னை தெரசா சேவைகள் பல புரிந்து வந்தார். ந்த வெள்ளை சேலையின் ஓரத்தில் அமைந்திருக்கும் மூன்று நீல நிற கோடுகளில் ஒன்று, பிற இரு நீல நிற கோடுகளை விட சற்று அகலமானதாக இருக்கும். தொடங்கி 67 ஆண்டுகள் ஆகியிருக்கும் “மிஷினரிஸ் ஆப் சேரிட்டி” துறவற சபையில் உலக அளவில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட கன்னியாஸ்திரிகள் சேவை செய்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் தொடர்ந்து அணிந்து வருகின்ற இந்த நீல நிற ஓரமுடைய வெள்ளை சேலை உலகளவில் இந்த துறவற சபையின் சீருடையாக ஆகியுள்ளது.
2013 ஆம் ஆண்டு இதற்கான பிராண்ட் அடையாளத்தை பெறுவதற்கு விண்ணப்பித்தாக கூறுகிறார் இந்த துறவற சபையினருக்காக சட்ட ஆலோசகர் பிஸ்வாஜித் சர்க்கார். “எதிர்காலத்தில் வணிக நோக்கத்திற்காக தவறாக பயன்படுத்தப்படும் நிலையை தடுப்பதற்காக இந்த நீல நிற ஓரமுடைய வெள்ளை சேலை பாதுகாக்கப்பட வேண்டும் என்று நினைத்தேன்” என்று காரணம் கூறினார்.
தற்போது “யாராவது இந்த சேலையை அணியவோ அல்லது இந்த நிற வகையை பயன்படுத்தவோ விரும்பினால், எங்களுக்கு எழுதலாம். அதில் வணிக நோக்கம் இல்லை என்று உணர்ந்தால் நாங்கள் அனுமதிப்போம்” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.


