மிக்ஜாம் வெள்ள நிவாரண தொகை வழங்கும் திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்!

மிக்ஜாம் வெள்ள நிவாரண தொகை வழங்கும் திட்டம்: முதல்வர்  தொடங்கி வைத்தார்!

மிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (17.12.2023) சென்னை, வேளச்சேரி, சக்தி விஜயலட்சுமி நகர், நியாய விலைக் கடை அருகில், மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சார்ந்த வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000/- நிவாரணத் தொகை வழங்கும் பணியினை பயனாளிகளுக்கு வழங்கி, தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் 2023 டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தினங்களில் வீசிய மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெரும் மழைப்பொழிவின் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. “மிக்ஜாம்” புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6 ஆயிரம் ரொக்கமாக வழங்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 9.12.2023 அன்று அறிவிப்பினை வெளியிட்டார்.

இந்த நிவாரணத் தொகை, சென்னை மாவட்டத்தின் அனைத்து வட்டங்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்கள் முழுமையாகவும் மற்றும் திருப்போரூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டம் முழுமையாகவும், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்கள், திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூவிருந்தவல்லி, ஊத்துக்கோட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய ஆறு வட்டங்கள், ஆகிய பகுதிகளில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலமாக ரூ.6000/- நிவாரணத் தொகை இன்று முதல் ரொக்கமாக வழங்கப்படுகிறது.

சென்னை மாவட்டத்தில் 13 இலட்சத்து 72 ஆயிரத்து 509 குடும்ப அட்டைதாரர்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் 6 இலட்சத்து 8 ஆயிரத்து 726 குடும்ப அட்டைதாரர்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 3 இலட்சத்து 12 ஆயிரத்து 952 குடும்ப அட்டைதாரர்களும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1 இலட்சத்து 31 ஆயிரத்து 149 குடும்ப அட்டைதாரர்களும் பயன்பெறுவர். இதற்கென தமிழ்நாடு அரசால் 1486 கோடியே 93 இலட்சத்து 74 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிவாரணத் தொகை வழங்கும் பணியினை தொடங்கி வைக்கும் விதமாக, முதலமைச்சர் வேளச்சேரி, சக்தி விஜயலட்சுமி நகரில் உள்ள நியாய விலைக் கடை அருகில் ரூ.6000/- நிவாரணத் தொகையினை பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். இந்நிவாரணத் தொகையை பெற்றுக் கொண்ட பயனாளிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.வெள்ள நிவாரணத் தொகை ரூ.6000/- குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டதும் அவர்களது கைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

வெள்ள நிவாரணத் தொகை விநியோகம் தினசரி காலை 9.00 மணி முதல் 1.00 மணி வரையும் மதியம் 3.00 மணி முதல் 5.00 வரை வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள் முதியோர் மற்றும் கைக்குழந்தையுடன் வரும் பெண்களுக்கு வெள்ள நிவாரணத் தொகை வழங்கப் படுவதில் முன்னுரிமை வழங்கப்படும்.

முன்னதாக, தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரணத் தொகை வழங்கும் பணியினை தொடங்கி வைத்தப் பின்னர், நியாய விலைக் கடை அருகில் உள்ள குறைதீர் விண்ணப்பங்கள் பெறுதல் மையம் மற்றும் உதவி மையத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

error: Content is protected !!