எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா – ஜெ.வுக்கு நினைவு மண்டபம் – தமிழக அரசு அறிவிப்பு
அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி மரணமடைந்தார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாள்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சைபலனின்றி அவர் மரணமடைந்தார். அவரது உடல் சென்னை மெரீனா கடற்கரையில், மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் நினைவிட வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் அதிமுக வெளியிட்ட ஓர் செய்திக் குறிப்பில், ‘ மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் தொடர்ந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருவதை இன்றளவும் காண முடிகிறது. மக்களுக்காக பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா உணவகம், அம்மா சிமெண்ட் போன்ற பல்வேறு பயனுள்ள திட்டங்களை கொண்டு வந்த ஜெயலலிதா பெண்களுக்காக பல்வேறு ஒப்பற்ற திட்டங்களையும் கொண்டு வந்தார்.

ஏழை பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி போன்ற திட்டங்களை கொண்டு வந்து பெண்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ஜெயலலிதா எனவே அவருக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்களும், தாய்மார்களும் விருப்பப்பட்டனர். அவர்களின் விருப்பம் விரைவில் நிறைவேற உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரம்மாண்ட நினைவு மண்டபம் மெரீனா கடற்கரையில் அமைக்கப்படும் என்று நேற்று முதல்வர் பழனிசாமி சட்டசபையில் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் நேற்று பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மானியக்கோரிக்கை விவாதத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். அப்போது நினைவு மண்டபம் குறித்து அவர், “பொன்மனச் செம்மல் மக்கள் திலகம், வள்ளல் பெருமான் என்றெல்லாம் மக்களால் போற்றிப் புகழப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் பாரத ரத்னா, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, சென்னையில் அவரின் நினைவாக நூற்றாண்டுவிழா வளைவு அமைக்கப்படும். உலகத் தலைவர்களின் வரிசையில் ஒருவராக விளங்கிய, மறைந்த முதல்வர் ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில், பிரம்மண்டமான நினைவுமண்டபம் அமைக்க உலகளாவிய கட்டட கலைஞர்கள் நிறுவனங்களிலிருந்து வரைபடங்களைபெறுவதற்கு விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. எல்லோரும் பாராட்டும் வகையில் நிபுணர்கள் குழு மூலம்,சிறந்த வரைபடங்களை தேர்வு செய்து நினைவு மண்டபம் அமைக்கப்படவுள்ளது” என் தெரிவித்தார் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் தமிழக அரசு வெளியிட்டுள்ள மற்றோரு செய்திக்குறிப்பில்,”முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை தமிழகம் முழுவதும் சிறப்பாக நடத்துவது குறித்து மாநில அளவிலான குழு மற்றும் நூற்றாண்டு விழா மலர் குழுவின் ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நூற்றாண்டு விழா சிறப்பு இலச்சினை வெளியிட பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை பெற்றுக்கொண்டார். மேலும், நூற்றாண்டு விழா விளம்பர குறுந்தகட்டை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பெற்றுக்கொண்டார்.
ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் அரசு, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அடுத்த ஆண்டு (2018) ஜனவரி மாதம் வரை மிக சிறப்பாக கொண்டாட உள்ளது.இதன் தொடக்கவிழா நாளை மதுரையில் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட உள்ளது” என்று தெரிவிக்கப்படுள்ளது.


