இனிவரும் தலைமுறைக்கு நினைவே சுமைதான்!

இனிவரும் தலைமுறைக்கு நினைவே சுமைதான்!

ந்திரங்கள் தங்கள் வாழ்க்கைக்குள் வரும்போதெல்லாம் மனிதர்கள் பதற்றமடையத் தொடங்குகிறார்கள். இத்தனைக்கும் எந்திரங்களை உருவாக்குவது மனிதர்கள்தான். ஆனாலும் எந்திரங்களின் வருகையால் தங்கள் இருப்பு காலியாகிறது என்றே மனிதர்கள் அச்சத்துடன் எதிர்நோக்குகிறார்கள். குறிப்பாக எந்திரங்களின் வருகை உடலுழைப்புத் தொழிலாளர்களின் எதிர்காலத்தைச் சூறையாடிவிடுகிறது என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் எதிர்ப்புக்குரல்கள் எழுகின்றன.

தொழிலாளர்களை மையப்படுத்தி தன் சிந்தனைகளை முன்வைத்த கார்ல் மார்க்ஸோ எந்திரங்களின் வருகையை வரவேற்கவே செய்தார். மனித வரலாற்றில் உழைப்பின் பாத்திரத்தை வலியுறுத்திய மார்க்ஸ் மனிதர்கள், குறிப்பாகத் தொழிலாளர்கள் எப்போதும் உழைத்துக்கொண்டேயிருக்க வேண்டும் என்று கருதவில்லை. போதிய உழைப்பு, போதிய ஓய்வு, போதிய கேளிக்கை எல்லா மனிதர்களுக்கும் சமமாகக் கிட்டவேண்டும் என்பதே அவரது செங்கனவு. அதனால் உடலுழைப்பைக் குறைக்கும் எந்திரங்களை வரவேற்றபோதும் எந்திரங்களால் தொழிலாளர்களின் வேலைநேரம் குறைந்துவிடப்போவதில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

எந்திரங்களைக் கொண்டு முதலாளிகள் முன்னிலும் அதிகமான உற்பத்தியை எதிர்பார்த்தார்கள். உற்பத்தி அதிகரிக்க அதிகரிக்க தொழிலாளர்களின் வேலைநேரமும் அதிகரிக்கவே செய்தது. இப்போது வரையறுக்கப்பட்ட வேலைநேரம் என்பதையே இழந்துவிட்ட காலத்தில்தான் வசிக்கிறோம் நாம். இன்னொருபுறம் மனிதச்சமூகத்தின் பெரும்பான்மையான தொழிலாளர்கள்தான் உற்பத்தி செய்யப்படும் பொருள்களின் நுகர்வோர்கள் என்பதையும் முதலாளித்துவம் மறந்துவிட்டது. வேலையிழப்புக்கும் சம்பளக்குறைவுக்கும் ஆளாகும் தொழிலாளர்களின் வாங்கும் சக்தியைக் குறைப்பதன்மூலம் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கான நுகர்வோர்கள் இல்லாமல் முதலாளித்துவம் சிக்கலில் மாட்டிக்கொள்கிறது. உலகம் முழுவதும் முதலாளித்துவம் இக்கட்டில் மாட்டி விழிப்பதைப் பார்க்கிறோம்.

சாதியமும் ஆணாதிக்கமும் நிறைந்த இந்தியச் சமூகத்தில் எந்திரங்களின் வருகை ஒருவகையில் வரவேற்கத்தக்கது. தொழிலைப் பிறப்புடன் இணைக்கும் நிலையை எந்திரங்கள் விடுவிக்கின்றன. மலமள்ளும் இயந்திரங்கள் தூய்மைப்பணிக்கென ஒரு சாதி இல்லாமல் செய்யும் சாத்தியம் கொண்டவை. சமையலும் வீட்டுவேலைகளும் பெண்களுக்கானவை என வரையறுக்கப்பட்ட இந்தியச் சமூகத்தில் எந்திரங்களின் வருகை பெண்களின் உடலுழைப்பைக் குறைக்கின்றன. எனவே எந்திரங்களின் வருகையும் இலவச மிக்ஸி, இலவச கிரைண்டர், இலவசத் தொலைக்காட்சி வழங்கும் தேர்தல் வாக்குறுதிகளும் வரவேற்கத்தக்கவை.

எல்லாம் சரி, மனிதர்கள் X இயந்திரங்கள் என்ற இருமை எதிர்வுகள் இருக்கும்வரை இப்படியான கருதுகோள்களை முன்வைக்கலாம். இயந்திரங்களை இயக்குவதற்கு மனிதர்களே தேவைப்படாத, உடலுழைப்பைத் தாண்டி சிந்திக்கும் ஆற்றல் பெற்ற இயந்திரங்கள் உருவாகும் சூழலில்…? மனிதர்கள் என்னும் சமூக விலங்குகள் மற்ற விலங்குகளிடமிருந்து தம்மை வித்தியாசப்படுத்திக்கொள்வதே நுண்ணறிவினால்தான். இப்போதோ மனிதர்கள் கடவுளாகும் ஆசையால் எந்திரங்களை மனிதாயப்படுத்துகிறார்கள். Human, Android என்னும் சொற்களை இணைத்து Humanoid என்னும் சொல் உருவாக்கப்படுகிறது. மனிதர்கள் X எந்திரங்கள் என்னும் இருமை எதிர்வுகளின் கோடுகள் அழிக்கப்படுகின்றன. ஒரு செயற்கை நுண்ணறிவு எந்திரம் உலக செஸ் சாம்பியனைத் தோற்கடிக்கிறது, வெற்றிகரமான திரைக்கதையை உருவாக்குகிறது. இதே எந்திரம் நவீனக்கவிதையை எழுத ஆரம்பித்துவிட்டால் கவிஞர்களின் கதி…? காலாதீதம், பித்தில் உழலும் கவிமனம் ஆகியவற்றின் நிலை…?

சமகால நவீனக்கவிதைகளில் புழங்கும் சொற்களை பைனரியாக மாற்றி, கோடிங் உருவாக்குவதன் மூலம் ஒரு செயற்கை நுண்ணறிவு எந்திரத்தால் ஒரு நவீனக்கவிதையை எழுதிவிட முடியும். இது போலச்செய்தல்தான். ஆனால் இப்போதைய பல நவீனக்கவிஞர்களும் இதே போலச்செய்தலையேதான் செய்கிறார்கள் என்பதே எதார்த்தம். ஒரு கவிஞர் தன் நல்ல கவிதையை நகலாக்கம் செய்து மீண்டும் மீண்டும் பல கவிதைகளை உருவாக்குகிறார். பிறகு அவரைப் போலச்செய்து பல கவிஞர்கள் பல கவிதைகளை உருவாக்குகிறார்கள் என்றால், ஒரு செயற்கை நுண்ணறிவு எந்திரம் போலச்செய்தல் மூலம் ஒரு நவீனக்கவிதையை உருவாக்குவதில் என்ன பிழை கண்டுவிட முடியும்?

கிட்டத்தட்ட இதேமாதிரியான கோடிங் முறையைப்போன்ற ஒரு தொழில்நுட்ப உத்தியைத்தான் பாடலாசிரியர் மதன் கார்க்கி ‘லிரிக் இன்ஜினீயரிங்’ என்று அறிமுகப்படுத்தினார். இசையமைப்பாளரால் அமைக்கப்படும் மெட்டுக்கு ஏற்ற வார்த்தைகளைக் காட்சியின் சூழலுக்கு ஏற்ற வார்த்தைகளுடன் தொழில்நுட்பரீதியாக உருவாக்க முடியும் என்பது அவர் வாதம். இதற்குமுன்னால் எழுதப்பட்ட பாடல்வரிகளைத் தரவுகளாக மாற்றி, அதன் அடிப்படையில் புதிய பாடல்களை இயற்ற முடியும் என்றால் யார் வேண்டுமானாலும் பாடலாசிரியராகிவிட முடியும். மரபிலக்கணப் பயிற்சியோ கவித்துவமோ தேவையில்லை. இப்போதே தனுஷும் சிவகார்த்திகேயனும் ‘பொயட்டு’ பாடலாசிரியர்களாக மாறிவிட்டார்கள். திரைரசிகர்கள் இந்த எதார்த்தத்தை ஏற்றுக்கொண்டுவிட்டார்களே தவிர வைரமுத்துவோ தாமரையோ யுகபாரதியோதான் பாட்டெழுத வேண்டும் என்று அடம் பிடிப்பதில்லை. இனி மெட்டையே ஓர் இயந்திரம் உருவாக்கி அதற்கான பாடல்வரிகளையும் உருவாக்கிவிடும். திரைப்பாடல்களில் நிகழும் இந்த மாற்றம் கவிதைகளை மட்டும் விட்டுவிடுமா?

‘கலையும் இலக்கியமும் காலத்தில் நிலைத்துநிற்பவை; தனக்கேயான தனித்துவப் படைப்பாற்றல் கொண்டவை. எனவே அவை பிரதி செய்யப்படாத உன்னதமானவை. மனித வாழ்க்கைக்கு ஒளிசேர்ப்பவை’ என்னும் நம்பிக்கையிலிருந்து மட்டுமே இதை எதிர்கொண்டுவிட முடியாது.
காலத்தில் நிலைத்திருப்பவை என்பதைத் தாண்டி இப்போது காலமே நிலைத்திருக்க முடியாத காலம் உருவாகிவிட்டது என்பதை உணரவேண்டிய தருணமிது.

60கள், 70கள், 80களில் பிறந்த மூவர் ஒரு பொதுமேசையில் அமர்ந்து உரையாடுவதற்கான சாத்தியமுண்டு. அவர்களுக்கிடையில் பகிர்ந்துகொள்ள பொதுவான அனுபவங்களும் பொதுவான ரசனைகளும் உண்டு. ஆனால் 90’ஸ் கிட்ஸ் எனப்படும் தலைமுறைக்கும் 2கே கிட்ஸ் எனப்படும் தலைமுறைக்கும் உரையாடலில் பகிர்ந்துகொள்ள பொதுவான ரசனைகளும் பொதுவான அனுபவங்களும் இல்லவே இல்லை அல்லது மிகக்குறைவு என்பதுதான் எதார்த்தம்.

காலம் என்பது இப்போது பிளவுபட்டுவிட்டது. ஒவ்வொரு தசாப்தத்துக்குமான தலைமுறை உருவாகிவிட்டது. இனி ஒரே தசாப்தத்துக்கு உள்ளேயே ஐந்து ஆண்டுகளுக்குள் ஒரு தலைமுறை, இரண்டு ஆண்டுகளுக்குள் ஒரு தலைமுறை, ஒரே ஆண்டுக்குள்ளேயே வெவ்வேறு தலைமுறைகள் உருவாகும் சாத்தியங்களைப் பார்க்கிறோம். இனிவரும் காலம், நிலைத்து உறைந்துபோகும் காலமில்லை. எனில் எந்தக் காலத்துக்கு நிலைக்கப்போகும் கவிதைகளை எழுதப்போகிறார்கள் நம் கவிஞர்கள்?

ஒரு பாரம்பரியத் தொழில் படிப்படியாக அழிவதற்குப் பத்தாண்டுகள் முதல் கால்நூற்றாண்டுவரை எடுத்துக்கொண்ட காலம் உண்டு. இப்போதோ ஒரு தொழில் அழிவதற்கும் புதுத்தொழில் உருவாகுவதற்கும் ஓராண்டுகாலம் கூட பிடிப்பதில்லை. இந்தத் தசாப்தத்தில் அல்லது கடந்த ஐந்தாண்டுகளில் உங்கள் கண்முன் அழிந்த தொழில்களை நினைவுகூருங்கள்.

உற்பத்தியைவிடவும் சேவைத்துறைக்கு முன்னுரிமை அளிக்கும் காலமிது. உணவை, அமேசான் பொருள்களை, திரையரங்க நுழைவுச்சீட்டை, சுற்றுலாத்தளங்களைச் சுற்றிப்பார்க்கும் வசதியை, டேட்டிங்கை, காமத்துக்கான தங்குமிடத்தை, கடனட்டைகளை உங்களுக்கு உடனுக்குடன் வழங்கும் சேவகர்களே நம்மைச்சுற்றியிருக்கிறார்கள். இதில் கணிசமான துறைகளில் இப்போது செயற்கை நுண்ணறிவு எந்திரங்கள் வரத்தொடங்கிவிட்டன. இனி நமக்கான கவிதையை, இசையை, ரசனையை வழங்கும் சேவையை அளிக்கும் நுண்ணறிவு எந்திரங்கள் உருவாகும் காலமிது.

மேலும் எல்லா மதிப்பீடுகளும் இடைவிடாது மாறிக்கொண்டிருக்கின்றன. நம் நவீன கவிஞர்கள் சங்ககால அகப்பாடல்களைப் போல் காதல் கவிதைகளை எழுதிக்குவித்து தொகுப்பாக்குகிறார்கள். ஆனால் எதார்த்தத்தில் இன்றைய தலைமுறை காதலின் புனித மாயையிலிருந்து விலகி பிரேக்-அப், லிவ்-இன் ரிலேஷன்ஷிப், Friendship with benefits என்று வெவ்வேறு கட்டங்களுக்கு நகர்ந்துகொண்டிருக்கிறது. நாளை இன்னும் பல புதிய உறவுமுறைகள் உருவாகலாம். மாறிவிட்ட மதிப்பீடுகளை உணராது, காலத்தில் உறைந்துபோன நம் கவிஞர்களின் கவிதைகளை இளம் தலைமுறை ஏற்பதற்கு என்ன நியாயம் இருக்கப்போகிறது? அதைவிடவும் மாறிவிட்ட மதிப்பீடுகளைப் புரிந்துகொண்டு அதற்கான ரசனைகளைத் தகவமைக்கும் ஒரு செயற்கை நுண்ணறிவு எந்திரம், உண்மையிலேயே ‘நவீனமான’ ஒரு கவிதையை எழுதிவிட இயலும்.

மனிதர்களால் உள்ளீடு செய்யப்படும் தகவல்களைக் கொண்டே கூகுள் போன்ற தேடுபொறிகள் இப்போது செயற்படுகின்றன. இந்த நிலையிலேயே கூகுளைச் சார்ந்துதான் மனிதர்களின் அன்றாடம் இயங்கவேண்டிய வினோதநிலை. நாளை மனிதர்களின் உள்ளீடே தேவைப்படாமல், தனக்கான உள்ளீடுகளைத் தானே உருவாக்கிக்கொள்ளும் செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள் அதிகரிக்கத் தொடங்கும்போது இயந்திரங்கள்மீதான மனிதர்களின் சார்புத்தன்மை இன்னும் அதிகரிக்கவே செய்யும். மனிதர்களின் சார்புத்தன்மை அதிகரிக்க அதிகரிக்க மனிதர்களின் ரசனைகள், மதிப்பீடுகள் எல்லாவற்றையும் செயற்கை நுண்ணறிவு எந்திரங்களே கட்டமைக்கும். சுருக்கமாகச் சொல்லப்போனால் ரோபோக்களை மனிதர்கள் உருவாக்கிய காலம்போய் தங்களுக்கேற்ற மனிதர்களை ரோபோக்கள் உருவாக்கும். அந்தக் காலத்தில் கவிஞர்கள் என்ற தேவையில்லாத தொந்தரவு எதற்கு?

ஏ.ஆர்.ரஹ்மான் வருகையின்போது, ‘என்ன இருந்தாலும் இளையராஜா பாடல்போல் வராது. ரஹ்மான் பாடல்களை அப்போதைக்கு மட்டும்தான் ரசிக்கமுடியும். காலத்தில் நிலைக்கும் இசையில்லை’ என்று ஆறுதலடைந்தோம். இப்போதோ காலத்தில் நிலைக்கும் இசையோ பாடலோ இன்றைய, நாளைய தலைமுறைக்குத் தேவையே இல்லை.

நம் நினைவிலிருந்து பழம்பாடல்களையும் கவிதை வரிகளையும் பகிரும் காலம் மறைந்து கொண்டிருக்கிறது. இனிவரும் தலைமுறைக்கு நினைவே சுமைதான். ஒரு மொபைல்போனிலோ ஒரு லேப்டாப்பிலோ நிரம்பி வழியும் மெமரியை அழித்துவிட்டு புதுவிஷயங்களை உடனுக்குடன் தரவேற்றும் தலைமுறையிது. இப்போது தரவேற்றப்படும் விஷயங்களின் ஆயுளும் குறுகியகாலமே. மீண்டும் மீண்டும் நினைவுகள் அழிக்கப்பட்டு புதிய தருணங்களும் புதிய அனுபவங்களும் தருவிக்கப்படும் காலமிது. உங்கள் முதல் அலைபேசியில் நீங்கள் முதன்முதலாக எடுத்த புகைப்படம் உங்களிடம் இருக்கிறதா என்று பாருங்கள். உங்கள் காதலியின், மனைவியின், மகளின், மகனின் அலைபேசி எண்ணே உங்கள் நினைவில் இருக்கத் தேவையற்ற காலமிது.

நினைவுகளும் நிலைத்தன்மையும் இல்லாத காலத்தில் அமரத்துவம் வாய்ந்த கவிதைகள் யாருக்குத் தேவை? அப்போதைய கணங்களைக் கிளர்த்தும் கவிதைகளை இனி ஓர் எந்திரம் உருவாக்கும்.

நம் கவிஞர்களுக்கு இனி மிச்சமிருக்கும் நம்பிக்கை, விஞ்ஞானத்தின் பலவீனம் மட்டுமே. இன்னும் விஞ்ஞானத்தால் முழுவதுமாக அறியப்படாதது இந்தப் பிரபஞ்சத்தின் அமைப்பும் இயக்கமும் மனித மூளை செயல்படும் விதமும் எல்லைகளற்ற அதன் ஆற்றலுமே. முழுவதுமாக ஒரு மனித மூளை இயங்கும் விதத்தை விஞ்ஞானம் அறியும்வரை நம் கவித்துவத்தின் இடுக்குகளுக்குள் எந்திரத்தின் கரங்கள் நுழைய முடியாது என்று நம்பிக்கிடப்போம்.

(மதுரை வைகை இலக்கியத்திருவிழாவில் கலந்துகொண்டு அதன் அரங்குக்கு வெளியே ஒரு கவித்திரவ மேசையில் யவனிகா ஶ்ரீராம், நேசமித்ரன், சுகுணாதிவாகருக்கு இடையே நடந்த உரையாடலின்போது பேசப்பட்ட கருத்துகளை – நினைவிலிருந்து தொகுத்து – எழுதப்பட்ட கூட்டுக்கட்டுரை இது. இந்த உரையாடலை வளர்த்தெடுக்க எழுத்தாளர்களுக்கு, குறிப்பாகக் கவிஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்)

ராஜசங்கீதன்

error: Content is protected !!