’மெய்யழகன்’ – விமர்சனம்!
நல்ல சினிமா எப்போது அதிகமாக வரும் என்றால் நல்ல சினிமாக்களை பார்ப்பவர்களும், நல்ல சினிமாவை எடுப்பவர்களும் அதிகமாகும் போது நல்ல சினிமா இயல்பிலேயே அதிகமாக வரும். உலகத்தரம் வாய்ந்த சினிமாக்கள் என்று சொல்லப்படும் எந்த சினிமாவும் படம் எடுக்கப்பட்ட மொழியினை, மண்ணைத்தாண்டி எந்த வெளிநாட்டிலும் படம் பிடிக்கப்படவில்லை.ஆனால் நம்மூரில் கரிசல் காட்டில் வாழும் பெண்ணாக இருந்தாலும் கூட பெரும்பாலும் அவர்களின் கனவுக்காட்சிகள் வெளிநாட்டில் தான் படம் பிடிக்கப்படுகிறது. அவர்களின் உடைகள் முதல் உரையாடல் வரை மொத்தமும் அந்த கதைக்கான மண்ணில் ஒட்டாமலேயே அந்தரத்தில் நிற்கும். இது சந்தையை மையப்படுத்தியதன் விளைவே. அதே சமயம் நம்மிடையில் எத்தனையோ கதைகள், குளியலறை ஓரத்தில் நம் பார்வைக்கு மறைந்து ஊறும் பூரானை போல் நெளிந்து கொண்டிருக்கின்றன. பிற மொழிகளில் அந்ததந்த பிரதேசத்து இலக்கியங்களை படமாக்கி வருகின்றனர். அந்த வகையில் ’96’ என்னும் படத்தில் ஒரு இரவில் காதலர்களை நெகிழச் செய்த டைரக்ட்ர் பிரேம்குமார், மெய்யழகன் என்ற டைட்டிலில் வழங்கி இருக்கும் புதுப் படைப்பில் உறவுகளின் மேன்மை ,மனிதம், நன்றியுணர்வு ஆகியவைகளை பற்றி ஆழமாகப் பேசி அனைத்து தரப்பினரையும் நெகிழச் செய்திருப்பதோடு, சொந்த ஊரை விட்டு விலகியவர்களை கண்கலங்க செய்து மனசையும் கனக்கச் செய்து அனுப்பும் வித்தையை செய்திருக்கிறார்.
அதாவது சொந்த பந்தங்களால் ஏமாற்றப்பட்டு தனது சொந்த வீட்டை தாரை வார்த்து விட்டு தஞ்சை நீடாமங்கலத்தை விட்டு சென்னை வந்து செட்டில் ஆகி விட்ட வாத்தியார் (ஜெயபிரகாஷ்) குடும்பம். அவரது , டீன் ஏஜ் மகன் அந்த ஊரை விட்டு சென்னை வந்து கல்யாணம் (தேவதர்ஷினி) செய்து கொண்டு ஒரு டீன் ஏஜ் மகளுக்கும் தந்தையாகி விட்டவர் அருள்மொழி (அரவிந்தசாமி). இந்த அருள்மொழிவர்மன் (அரவிந்த்சுவாமி) 20 ஆண்டுகள் கழித்து தனது சித்தப்பாவின் மகள் திருமணத்திற்கு மீண்டும் ஊருக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. சொந்த ஊரை விட்டு பிரிந்த ஏக்கம் மனதில் இருந்தாலும், உறவுக்காரர்கள் மீது ஏற்பட்ட கசப்பால், விருப்பமில்லாமல் கிளம்பிச் செல்கிறார் அருள்மொழி. கல்யாணத்திற்கு முந்தைய நாள் நடக்கும் வரவேற்புக்கே சென்று ஜஸ்ட் தலையை காட்டிவிட்டு இரவே பஸ் பிடித்து சென்னைக்கு திரும்பி வருவதுதான் திட்டம். ஆனால் ஊரில் இந்த அருள்மொழியை மிக ஆவலாக ஒருவர் எதிர்பார்த்து காத்திருக்கிறார். கண்ட மாத்திரத்தில் அருளின் கண்களைப் பொத்தி சின்னப் பிள்ளை மாதிரி சகஜமாக பேசி அத்தான்.. அத்தான்.. என அருளை சுற்றிச் சுற்றி வருகிறார் கார்த்தி . ஆனால் அருளுக்கு நாயகன் கார்த்தியை சுத்தமாக நினைவில் இல்லை. ஆனால் டன் கணக்கில் அன்பை மட்டுமே வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும் இவரை பற்றி யாரிடம் எப்படி கேட்பது என தயக்கப்பட்டு சரி ஊருக்குப் போகும் வரை தெரிந்த மாதிரியே காட்டிக்கொண்டு சமாளித்துவிட்டு கிளம்பி விடலாம் என்று நினைக்கிறார் அருள். அதன் படி பாசமாக இருக்கும் மாமா (ராஜ்கிரண்) வற்புறுத்தியும் மீறிக் கிளம்ப , உடன் பஸ் ஏற்றி விட வருகிறார் கார்த்தி .. ஆனால் கடைசி பஸ் கிளம்பிப் போய்விட,அந்த கார்த்தி வீட்டில் தங்க வேண்டி வருகிறது. அப்படி தங்கும் இரவில் கார்த்தியின் ஒவ்வொரு சொல்லும் விஸ்வரூபமெடுக்கிறது.. அதே சமயம் ஆனால் கார்த்தி அரவிந்த்சாமியின் மொத்த ஜாதகமும் சொல்லியபடி அரவிந்த்சாமி மீது உயிரையே வைத்து இருப்பதை வெளிப்படுத்துபவன் யாரென கண்டடைவதுதான் மெய்யழகன் படக் கதை .
கொஞ்சம் சுருக்கமாகச் சொல்வதானால் ஸ்டெல்லா புரூஸ் எழுதிய ஒரு காதல் தொடருக்கு வாரா வாரம் சஸ்பென்ஸ் கொண்ட லீட் கொடுத்து பப்ளிஷ் ஆனதில் நானும் இணைந்திருந்ததை நினைவூட்டி விட்டது! ஒரு க்ரைம் கதைக்குக் கொடுக்கும் ஹைப்பை அந்த லவ் ஸ்டோரி தொடருக்கு கொடுத்தது போல் 96 எப்படி ராம் ஜானு இருவருடன் ஓரிரவை கழித்தோமோ..அதே போல் பிரிந்து போன மாமன் மச்சான் இருவரின் ஓரிரவு தான் இந்தப்படம்.
தஞ்சை வாழ் வாசியாக நடித்திருக்கும்..ஸாரி வாழ்ந்திருக்கும் கார்த்தி பேச்சு, உடல் மொழி, வெகுளித்தனம், பாசம், அன்பு என சகல உணர்வுகளையும் பேச்சுடன் உடல் மொழியையும் அநாயசமாக வெளிப்படுத்தி மெய்யழகன் என்ற ரோலின் வெயிட்டை ஏற்றி விட்டு விட்டார். இத்தனைக்கும் ஹீரோ என்றால் அரவிந்த்சாமிதான். ஆனால் அந்த நாயகனை முழுமையாக்குபவர் கார்த்தி என்றால் மிகையல்ல. முழுக்க முழுக்க உணர்வுகளால் மட்டுமே கட்டமைக்கப்பட்ட ஒரு உண்மையாக கேரக்டர் கார்த்தி. அதனை அவர் தனது நடிப்பால் உயிர் கொடுத்திருக்கும் விதம் பிரமிக்க வைக்கிறது. தான் பேச வேண்டிய அரசியல், தன்னுடைய வரலாற்று பற்றிய புரிதல் என எல்லாவற்றையும் கார்த்தியின் கதாபாத்திரம் வழி நமக்கு கடத்தியிருக்கிறார் டைரக்டர். அதிலும் ஆற்றில் அமர்ந்தபடி பல இடங்களில் சிரிக்க வைத்து, கண்கலங்க சோழர் வரலாறு , குறிப்பாக வெண்ணிப் பறந்தலை போர் , நீ(ட்)டா மங்கலம் பெயர்க்காரணம், ஈழம் வீழ்ந்ததற்கான வருத்தம், தூத்துக்குடியில் சுட்டுக் கொல்லப்பட்ட வினோலியா உள்ளிட்ட நபர்களுக்காக ஆண்டாண்டு திதி கொடுப்பதாக சொல்வதை இன்றைய யூத்களுக்கும் புரிய வைப்பதோடு, சிந்திக்கவும் வைத்திருக்கிறார்.
கார்த்திக்கு இணையான ரோலில் அன்பே உருவான அருள்மொழியாக அரவிந்த்சாமி தான் ஏற்றுக் கொண்ட என்ற வேடத்தின் வலுவைப் புரிந்து சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். சொந்த ஊர் மீது இருக்கும் ஈர்ப்பும் ,ஏக்கமும் தன் மனதில் எந்த அளவுக்கு இருக்கிறது, என்பதை தன் கண்கள் மூலமாக வெளிக்காட்டுபவர், கார்த்தியிடம் சொல்லாமல் அவரை விட்டு விலகும் ஓடும் காட்சி மட்டுமில்லாமல் கார்த்தி யார் என்று தெரிந்து ஓடோடி வரும் காட்சியில் தஞ்சை நந்தி மற்றும் கோபுரம் போல் உயர்ந்து மனதில் நிற்கிறார்.ஆனால் சின்ன வயது அரவிந்த் சாமி அவ்வளவாக பொருந்தமில்லை.
அத்துடன் கார்த்தியின் மனைவியாக வரும் ஸ்ரீ திவ்யா, அரவிந்த்சாமியின் மனைவியாக நடித்த தேவதர்ஷினி, ராஜ்கிரண், ஜெயப்பிரகாஷ், இளவரசு, கருணாகரன், ஸ்ரீரஞ்சனி என பிரபல நட்சத்திரங்கள் பலர் இருந்தாலும் விலங்குகள் பறவைகள் ,சைக்கிள்,ஒரு இடம் என என பாகுபாடு இல்லாமல் கதை சொல்கிறார். ஆரம்பக் காட்சியில் ஆயிரக்கணக்கான கிளிகளுக்கு நடுவே தனியாக அரவிந்த் சாமி உட்கார்ந்திருக்கும் ஒரு ஷாட்டில் அருள்மொழி யாக அரவிந்த் சாமியிடம் உள்ள தனிமையை மிக அழகாக சொல்லி விடுகிறார். அதை எல்லாம் தாண்டி வேணடாம் என்று தாரை வார்க்கப்பட்ட ஒரு சைக்கிளே ஒரு குடும்பத்தின் அடுத்த தலைமுறையை உருவாக்கி இருக்கிறது என்பதை இப்படியெல்லாம் சொல்ல முடியுமா என்று பிரமிக்க வைத்து விட்டார்கள் .
கேமராமேன் மகேந்திரன் ஜெயராஜின் ஒளிப்பதிவில் தஞ்சை பசுமை மற்றும் இரவின் அழகை மட்டும் இன்றி ஒவ்வொரு கேரக்டர்களின் உணர்வுகளை- குறிப்பாக அரவிந்த்சாமியை திருமணம் செய்துக் கொள்ளும் சுழல் தவறிப் போய் லோக்கலில் வாழ்ந்த/ வாழும் குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்ட ஒரு பெண் மண்டப ஸ்கீரினில் பார்த்து பரவசமாகி வந்து பேசும் உரையாடலும் அந்த லைட் டச்சும் கவிதை..கவிதை!அத்துடன் மணப்பெண்ணாகிய தங்கச்சிக்காக வாங்கிப் போன பரிசுப் பொருட்களும், அதை மணப்பெண் பிரித்து பார்த்து அண்ணனையே அணிவிக்கும் காட்சி பாசக் கவிதைகளை சூழலுடன் படமாக்கி ரசிகரின் கண்ணிலும் நீர் வரவழைத்த வித்தையைக் காட்டி கலங்கடித்ததற்கு மகேந்திரனுக்கு ஒரு தனி பாராட்டு விழா நடத்த ஆணையிடலாம்
மியூசிக் டைரக்டர் கோவிந்த் வசந்தாவின் இசை தஞ்சை ஆற்றின் நீரோட்டம் போல் கதை முழுக்க ஒரு இனிமையான சலசலப்பை ஏற்படுத்தியே இருக்கிறது. இந்த படத்தில் இசை எவ்வளவு பெரிய பலம் என்பதை பின்னணி இசையே இல்லாத ஒரு சில காட்சிகளை கவனித்தால் புரியும். குறிப்பாக கமலின் குரலில் வரும் போறேன் நான் போறேன் பாடல் ப்ளீஸ் ஒன்ஸ்மோர் சொல்ல வைத்து விடுகிறது .
மொத்தத்தில் யார் என்றே தெரியாத ஒருவர், தனக்கு திகட்ட திகட்ட அன்பு காட்டினால் ஒருவரால் என்ன செய்ய முடியும்? என்பதை இவ்வளவு நீண்ட படைப்பாக வழங்கி ஸ்கோர் செய்து விட்டார்பிரேம்..படத்தின் தொடக்கம் முதல், எண்ட் கார்ட் வரை எங்கு திரும்பினாலும் அன்பு .. அன்பு..,அன்பு மட்டுமே! நம்மைப் புரிந்து கொள்ளாத அன்பு பிரிந்துவிடும். ஆனால் நம்மைப் புரிந்து கொண்ட அன்புக்கோ பிரிவேயில்லை. இத்தனை அன்புகாட்ட நம்மிடம் என்ன இருக்கிறது என்று யோசிக்க வைத்த ஒருவரை வாழ்வில் சந்தித்திருந்தால் நீங்கள் நிஜமான அதிர்ஷ்டசாலி…அன்பை மட்டுமே கடனாகத் தந்தால் அதிக வட்டியுடன் அது திரும்பிக் கிடைக்கும்…புரிதல் மட்டுமே உண்மை அன்பை என்றுமே உணர்த்தும் படமிது..!.
சிலர் ஏதேதோ குறை சொன்னாலும் பலரின் மனசில் ஒட்டிக் கொண்டாய் மெய்யழகா!
மார்க் 4.3/5


