மார்க் ஆண்டனி -விமர்சனம்!

மார்க் ஆண்டனி -விமர்சனம்!

உலக சினிமா தொடங்கி நம்ம தமிழ் சினிமா வரை டைம் டிராவல் பற்றிய படங்கள் அவ்வப்போது வெளியாகின்றன. இவற்றில் பெரும்பாலானப் படங்களில் ஒரே மாதிரியான கதைகளை நாம் பார்க்கலாம். ஏதோ ஒரு தொழில்நுட்பத்தால் காலத்தைக் கடந்து செல்லும் வாய்ப்புகள் மனிதர்களுக்கு கிடைக்கிறது. அதைகொண்டு அவர்கள் தங்களது ஆசையினால் ஏதோ ஒரு மாற்றத்தை செய்துவிடுகிறார்கள். பின்பு அதன் விளைவுகளை எதிர்கொள்வதை வைத்து கதை பண்ணி இருப்பார்கள். அந்த வகையில் கடந்த காலத்தை மாற்றும் வகையிலான டைம் டிராவல் போன் ஒன்று விஷாலுக்கும் எஸ்.ஜே. சூர்யாவுக்கும் கிடைக்க அவர்கள் இருவருக்கும் இடையிலான நட்பு, மோதல், நம்பிக்கை துரோகம், மகன் பாசம் போன்றவற்றை நாடகப் பாணிக் காமெடியில் சொல்வதுடன் கடந்த காலத்தில் அவர்கள் எதை மாற்ற நினைக்கிறார்கள்? நடந்தது என்ன? என்பதே மார்க் ஆண்டனி!

அதாவது சயின்டிஸ்ட் சிரஞ்சீவி (செல்வராகவன்) கடந்த காலத்துக்கு சென்று நடந்ததை மாற்றும் வகையிலான ஒரு டைம் டிராவல் போனை 1975-ம் வருஷம் கண்டுபிடிக்கிறார். எதிர்பாராத ஒரு சம்பவத்தால் அவர் இறந்து போக அவர் கண்டுபிடித்த டைம் டிராவல் போன் மெக்கானிக் மார்க் (விஷால்) கையில்.கிடைக்க அவர் தன் தாயை கொலை செய்த தன் அப்பாவைத் திட்டி தீர்க்க டைம் மிஷின் போன் மூலம் தொடர்பு கொள்கிறார். அப்போதுதான் தன் அப்பா ஆண்டனி (விஷால்) ரொம்ப நல்லவர் என்று தெரிய வருகிறது. இதை அடுத்து அவரை மீண்டும் உயிருடன் வரவழைக்க முயல்கிறார். இந்நிலையில் அந்த மிஷின் ஜாக்கியின் மகன் கையில். கிடைக்க அவரும் இறந்த தனது அப்பா ஜாக்கியை (எஸ். ஜே.சூர்யா) உயிருடன் வரவழைக்கிறார். எல்லோரும் ஒரே காலகட்டத்தில் இணைகின்றனர். அந்த வகையில் ஆண்டனியும், ஜாக்கியும் மீண்டும் சந்திக்கும்போது பூகம்பம் வெடிக்கிறது. இதன் முடிவு என்ன என்பதை உப்பு, புளி, மிளகாய் ஆகியவற்றுடன் அஜினோமோட்டைவை கொஞ்சம் தூக்கலாகப் போட்டு ஒரு படையல் படைத்து இருப்பதே மார்க் அஆண்டனி கதை..

டைட்டில் கேரக்டரான ஆண்டனியாக 80களின் லுக்கில் மாஸ் காட்டுகிறார் விஷால். சண்டைக்காட்சிகளிலும், நக்கல் காட்சிகளிலும் அடடே சொல்ல வைக்கிறார். ஆனால் மகன் ரோலில் வழங்கும் நடிப்பு கடுப்பேற்றுகிறது. உருக்கமான காட்சிகளை எல்லாம் விஷால் இனி தவிர்த்து விடலாம்.. சகிக்கவில்லை. ஹீரோ விஷாலை விட பல இடங்களில் எஸ்.ஜே.சூர்யா ஸ்கோர் செய்கிறார். அவரது வழக்கமான நடிப்பு மூலம் அப்பா, மகன் இரண்டு கதாபாத்திரங்களையும் கையாண்டிருந்தாலும், அவரது ஒவ்வொரு அசைவும் ரசிகர்களை குதூகலிக்க வைக்கிறது. அதிலும், தந்தை மற்றும் மகன் எஸ்.ஜே.சூர்யா இடையில் நடக்கும் தொலைபேசி உரையாடல் காட்சி அட்டகாசம்.. குறிப்பாக காட்ஃபாதர் ஜாக்கியாக மாஸ் காட்டுவது, சிலுக்கைப் பார்த்து உருகுவது, மதன் பாண்டியனாக காமெடி செய்வது என திரை முழுக்க அவரது ராஜாங்கம் தான். சில இடங்களில் ஓவர் ஆக்டிங்காக தோன்றினாலும் பல இடங்களில் தொய்வடையும் கதையை கேஷூவலாக நகர்த்த இவரது நடிப்பே ஹெல்ப் செய்கிறது. நாயகியாக நடித்திருக்கும் ரிது வர்மாவுக்கு வழக்கமான கமர்ஷியல் கதாநாயகி வேடம் தான். அதனால் அவர் வரும் காட்சிகள் பெரிதாக ஈர்க்கவில்லை. சுனில்,படம் முழுக்க வருகிறார் என்றாலும், டம்மி பீஸாகப்பட்டிருக்கிறார் அவரின் பாத்திரத்தை இன்னும் பயன்படுத்தியிருக்கலாம். செல்வராகவன், நிழல்கள் ரவி, அபிநயா, ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் ‘விஷால் vs எஸ்.ஜே.சூர்யா’விற்கு மத்தியில் பெரிதாக ஜொலிக்கவில்லை. ஆனாலும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார்கள். ரெடின் கிங்ஸ்லி வேஸ்ட்..!

அபிநந்தன் ராமானுஜத்தின் கேமரா படம் முழுவதையும் மாஸாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, சண்டைக்காட்சிகளை மிரட்டலாக படமாக்கியிருக்கிறது. விஷால், எஸ்.ஜே.சூர்யாவுக்கான பின்னணி இசை திரையை தெறிக்க விட்டாலும் பல இடங்களிலும் டெசிபல் தாண்டி எகிறும் ஜிவி பிரகாஷின் இசை காது ஜவ்வுகளை சோதிக்கிறது. பாடல்கள் எதுவுமே சுத்தமாக மனதில் ஒட்டவில்லை ..! ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெயின், திலீப் சுப்புராயன், கனல் கண்ணன், தினேஷ் சுப்புராயன், மாபியா சசி ஆகியோரின் பங்களிப்பு அபாரம்.. ஆர்ட் டைரக்டர் ஆர்.கே.விஜய் முருகனின் பங்களிப்பும் அட்டகாசம்

ஆனால் எடுத்துக் கொண்ட கதையில் ஏகப்பட்ட லாஜிக் மீறல், குழப்பங்கள் எல்லாம் இருந்தாலும் ஃபேமிலி செண்டிமெண்ட், கேங்ஸ்டர், ஃபேன்டஸி, காமெடி, கலாட்டா என எல்லா ஜானரையும் கலந்து கட்டி முன்னரே சொன்னது போல் அஜினோமோட்டோ என்னும் தூக்கலான மசாலாவுடன் கமகமவென்று நன்றாகத்தான் இருக்கிறது .. ஸாரி.. இருந்தது.!

மொத்தத்தில் இந்த மார்க் ஆண்டனி – ஒரு எண்டர்டெயினர் மூவி

மார்க் 3.5/5

error: Content is protected !!