மார்க்கோனி: அலைகளின் நாயகன், நினைவு நாள்!

மார்க்கோனி: அலைகளின் நாயகன், நினைவு நாள்!

போன தலைமுறை வரைக்கும் மிகப் பெரிய , ஒரே பொழுதுபோக்கு சாதனமாக இருந்தது வானொலிப் பெட்டி. காற்றில் தவழ்ந்துவரும் வான் அலைகள் சினிமா பாடல்களை மட்டுமல்லாமல், பயனுள்ள வேறு பல தகவல்களையும் வானொலி மூலம் சுமந்து வரும். அப்படி வானொலி வெறும் பொழுதுபோக்கு சாதனமாக மட்டுமின்றி தகவல் களஞ்சியமாகவும் செயல்பட்டு வந்தது. இப்போது தொலைக்காட்சி, இணையம் என்று பல தொடர்பு சாதனங்கள் வந்தாலும் இன்றும் பலரது வாழ்க்கையில் வானொலிக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. வானொலியில் ஒரு நல்ல நிகழ்ச்சியை கேட்ட பிறகு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் உண்மையில் மார்க்கோனிக்குதான் நன்றி சொல்ல வேண்டும். அந்த வகையில் வானொலியின் தந்தையாகப் போற்றப்படும், இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்ற, இத்தாலிய கண்டுபிடிப்பாளர் குக்லியெல்மோ மார்க்கோனி (Guglielmo Marconi) அவர்களின் நினைவு நாள். 1937 ஆம் ஆண்டு இதே நாளில்தான் அவர் காலமானார்.

குக்லியெல்மோ மார்க்கோனி (1874 – 1937):

  • வானொலியின் முன்னோடி: குக்லியெல்மோ மார்க்கோனி, வயர்லெஸ் தந்தி அமைப்பை உருவாக்கி, நீண்ட தூர வானொலி ஒலிபரப்புக்கு அடித்தளமிட்டவர். ஹெர்ட்ஸின் மின்காந்த அலைகள் குறித்த ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு, இவர் தனது சொந்த சோதனைகளைத் தொடங்கினார்.
  • முக்கிய கண்டுபிடிப்புகள்: 1895 ஆம் ஆண்டில், மார்க்கோனி ரேடியோ அலைகளைப் பயன்படுத்தி பல கிலோமீட்டர் தூரத்திற்கு சிக்னல்களை அனுப்பினார். 1901 ஆம் ஆண்டில், அட்லாண்டிக் கடற்பரப்பில் “S” என்ற மோர்ஸ் குறியீட்டை வெற்றிகரமாக அனுப்பி, கம்பியில்லாத் தகவல்தொடர்பில் ஒரு பெரிய மைல்கல்லை எட்டினார். டைட்டானிக் கப்பல் மூழ்கியபோது, மார்க்கோனியின் வயர்லெஸ் கருவிகள் மூலம் அனுப்பப்பட்ட அவசர அழைப்புகள்தான் பல உயிர்களைக் காப்பாற்றின. இதன் பின்னர், பயணிகள் கப்பல்களில் வயர்லெஸ் தொழில்நுட்பம் கட்டாயமாக்கப்பட்டது.
  • நோபல் பரிசு: கம்பியில்லாத் தந்தி முறையின் வளர்ச்சிக்கு அவர் அளித்த பங்களிப்புகளுக்காக, 1909 ஆம் ஆண்டில் கார்ல் ஃபெர்டினாண்ட் பிரவுன் உடன் இணைந்து இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
  • தொழில்முனைவோர்: 1897 ஆம் ஆண்டில் பிரிட்டனில் ‘மார்க்கோனி வயர்லெஸ் டெலிகிராபி கம்பெனி’யை நிறுவினார். வானொலியின் பரந்த சாத்தியக்கூறுகளை உணர்ந்து, பொதுமக்களின் கவனத்தை ஈர்க்க பல்வேறு அற்புதமான சோதனைகளை நடத்தினார். வானொலி அலைகளை உருவாக்கும் கருவிக்கு 1896-ல் பிரிட்டனில் காப்புரிமையும் பெற்றார். அத்துடன் கம்பியில்லாத் தந்தி சேவை, சமிக்ஞை நிறுவனத்தைப் பிரிட்டனில் தொடங்கி நடத்திவந்தார். பின்னர் அது ‘மார்கோனி கம்பியில்லாத் தந்தி நிறுவனம்’ என்று அழைக்கப்பட்டது. அந்த நிறுவனம்தான், உலகின் முதல் கம்பியில்லாத் தந்தி சேவையை இங்கிலாந்தில் உள்ள செல்ம்ஸ்ஃபோர்டில் 1898-ல் தொடங்கியது.
  • உலகப் புகழ்பெற்ற ஊடக நிறுவனமான பி.பி.சி. தொடங்கப்பட மார்கோனியும் ஒரு காரணம்.மார்கோனி கண்டறிந்த வானொலி நுண்ணலைகள் கப்பல்களுக்குக் கடல்வழியைக் கண்டறிய உதவின. ராடாரை உருவாக்கும் கொள்கைகளை 1935-ல் மார்கோனி முன்வைத்தார்.1937-ல் ஜூலை 19-ம் தேதி அவர் இறந்தபோது, அவருக்கு மரியாதை செலுத்தும்விதமாக உலகிலுள்ள வானொலி சேவைகள் அனைத்தும் சில விநாடிகளுக்கு முற்றிலும் நிறுத்தப்பட்டன.
  • வானொலி சேவைக்கு அடித்தளமிட்டது, நோபல் பரிசு பெற்றது போன்ற மிகப் பெரிய சாதனைகளைச் செய்தாலும் கடுமையான விமர்சனத்துக்கும் மார்கோனி ஆளானார். அதற்குக் காரணம் இத்தாலியை ஆண்ட பெனிட்டோ முசோலினியின் இத்தாலிய ஃபாசிசக் கட்சியில் அவர் சேர்ந்ததுதான்.

ஆனாலும் மார்க்கோனியின் அசாத்தியமான கண்டுபிடிப்புகள் மற்றும் தொலைநோக்குப் பார்வை, உலகை ஒன்றிணைக்கும் நவீன தகவல்தொடர்பு தொழில்நுட்பங்களுக்கு அடித்தளமாக அமைந்தது. வானொலி, தொலைதொடர்பு மற்றும் நமது அன்றாட வாழ்வில் ஒலிபரப்பு என பல வழிகளில் நாம் அவரது கண்டுபிடிப்புகளின் பலன்களை அனுபவிக்கிறோம். அவரது நினைவு நாளில், அந்த மாபெரும் அறிவியல் மேதையை நினைவு கூர்வோம்.

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

Related Posts

error: Content is protected !!