தூய்மையான, சுகாதாரமான புண்ணிய தலம் என்ற விருதை பெற்றது மதுரை மீனாட்சியம்மன் கோயில்!

இந்தியாவின் இரண்டாவது தூய்மையான, சுகாதாரமான புண்ணிய தலம் என்ற விருதை மதுரை மீனாட்சியம்மன் கோயில் பெற்றுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. இக்கோயில் பல்வேறு மன்னர்களால் பல்வேறு கால கட்டங்களில் சிறிது சிறிதாகக் கட்டி தற்போது பல்வேறு மண்டபங் களுடன் கூடிய பரந்து விரிந்த மிகப் பெரிய கோயிலாக உருவெடுத்துள்ளது. இக்கோயிலை வைத்தே மதுரை நகரம் உருவாகி இருக்கிறது. தாமரையின் நடுவில் உள்ள மொட்டு கோயில். சுற்றியுள்ள இதழ்கள் தெருக்களாக அமையப் பெற்றதே மதுரை நகரம்.
ஆரம்பத்தில் கோயில் மண்ணால் கட்டப்பட்டு மக்கள் வழிபட்டனர். அப்போது சாதாரண முறை யில் சுந்தரேசுவரருக்கு மட்டுமே கோயில் இருந்தது. ஞானசம்பந்தர் கி.பி. 7-ம் நூற்றாண்டில் மதுரைக்கு வந்தபோது, மீனாட்சி அம்மனுக்கு தனி கோயில் இல்லை. காலப்போக்கில்தான் கல்லால் ஆன கோயில் உருவாக்கப்பட்டது. கி.பி. 12-ம் நூற்றாண்டில் குலசேகர பாண்டியன் காலத்தில் கோயில் விரிவாக்கம் செய்யப்பட்டது. குலசேகரபாண்டிய மன்னரால் மீனாட்சிக்கு கோயில் எழுப்பப்பட்டது. இஸ்லாமிய மன்னர் மாலிக் கபூர் படையெடுப்பின்போது, 14-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கோயில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. தொடர்ந்து 48 ஆண்டுகள் மதுரையில் இஸ்லாமியர் ஆட்சி இருந்தது.
அப்போது சுந்தரேசுவரர்- மீனாட்சி அம்மன் கோயில் பூஜைகளுக்கு தடை இருந்தது. பூஜை செய்வோருக்கு கடும் தண்டனை வழங்கப்பட்டது.14-ம் நூற்றாண்டின் இறுதியில் குமார கம்பனன் என்ற மன்னர் ஆந்திரா பகுதியில் இருந்து மதுரைக்கு படையெடுத்தார். அவரது காலத்தில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பூஜை, தீபாராதனைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனாலும், கோயில் இடிக்கப்பட்ட நிலையில்தான் இருந்தது.இந்நிலையில் கிருஷ்ணதேவராயர் அனுப்பிய விசுவநாத நாயக்க மன்னர் மதுரைக்கு வந்தார். அவரது காலத்தில்தான் பாண்டியர் காலத்தில் எப்படி கோயில் அமைந்து இருந்ததோ அதேபோல பழமை மாறாமல் மீனாட்சி அம்மன் கோயில் கருவறை உள்ளிட்ட மண்டபங்கள் கட்டப்பட்டன.
விசுவநாத நாயக்கர் சுந்தரேசுவரர் – மீனாட்சி அம்மன் கோயில்களை இணைத்து கருவறை, அர்த்த மண்டபம் உட்பட பல்வேறு மண்டபங்கள் கட்டினார். இதைத் தொடர்ந்து ராணி மங்கம்மாள் மற்றும் திருமலை மன்னர் உள்ளிட்ட நாயக்க மன்னர்கள் மதுரையை ஆண்டபோது, மீனாட்சி கோயில் முழு வடிவம் பெற்றது.
இதனிடையேதான் மோடி தலைமையிலான மத்திய அரசின் தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு நாடு முழுவதுமிருந்து முக்கிய புனித தலங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதன் தூய்மை, சுகாதாரம் கண்காணிக்கப்பட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றிலும் சுமார் 25 நவீன மின்னணு கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
கோவில் சுற்று பகுதிகளில் பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் ஆங்காங்கே இரட்டை குப்பைத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் துப்புரவு பணிக்கு பணி யாளர்கள் இருப்பதுடன், நவீன மண் கூட்டும் இயந்திரம், 63 காம்பேக்டர் பின்கள், 4 மினி காம் பேக்டர் லாரிகள், 15 சுத்திகரிக்கப்பட்ட தானியங்கி குடிநீர் இயந்திரங்கள் மற்றும் பக்தர்களை அழைத்துச் செல்வதற்கு வசதியாக 5 நவீன பேட்டரி வாகனங்களும் உள்ளன.
டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஸ்ரீகஜேந்திரசிங் ஷெகாவத், இணை அமைச்சர் ஸ்ரீரத்தன்லால் கட்டாரியா ஆகியோர் இரண்டாம் பரிசுக்கான விருது மற்றும் பாராட்டு சான்றிதழை மதுரை மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகனிடம் வழங்கினர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள வைஷ்ணவி தேவி கோவில் முதல் தூய்மையான புனித தலமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.