June 2, 2023

ஆபாசம், வன்முறை, பெரியவர்களின் செயல்பாடுகள் எதுவுமே இல்லாத யூ டியூப்-கள்!

இன்றைய நவீனமயமாகி விட்டக் காலத்தில் வாழும் குழந்தைகள் மொபைல் போனில் புகுந்து விளையாடுகிறார்கள். பெற்றோர்களும் அதனை ஊக்குவிக்கிறார்கள். ஆனால் மருத்துவத்துறை இதனை கடுமையாக கண்டிக்கிறது. தற்போது குழந்தைகளை அழைத்துக்கொண்டு எலும்பு சிகிச்சை நிபுணர்களிடமும், பிசியோதெரபி மையங்களுக்கும் வரும் பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. பல மணி நேரம் ஒரே இடத்தில் அசையாமல் உட்கார்ந்தபடி செல்போன், டேப்லட் போன்றவற்றில் வீடியோக்கள் பார்ப்பது, வீடியோ கேம்ஸ் விளையாடுவது போன்ற வற்றால் முதுகு எலும்பு, தசைகள் பாதிப்படைகின்றன. மன நிம்மதி, தூக்கம் என எல்லாவற்றை யும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கடைசியில் உடல் பருமன் என்ற பாதிப்பையும் தருகிறது. சும்மா உட்கார்ந்தபடி தொடுதிரையை விரல்களால் தேய்த்துக் கொண்டிருக்கும் பழக்கம் விரல் களுக்கோ, கைகளுக்கோ போதுமான பயிற்சியை தருவதில்லை. அதனால் அவை திடமான வளர்ச்சி பெறுவதில்லை. இப்படியே பழகும் குழந்தைகள் அதன்பின் பள்ளிகளில் சேர்ந்து இரண்டு, மூன்று மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து தேர்வு எழுத முடியாமல் திணறிப் போகிறார்கள். இந்நிலையில் கூட ஸ்மார்ட் போன்களில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் யூ டியூப் வீடியோக் களையும், அதற்கு மேற்பட்ட வயதுடைய குழந்தைகள் வீடியோ கேம்களையும், வீடியோக் களையும் தான் பெரும்பாலும் காண்கிறார்கள்.

அந்த வகையில் கார்ட்டூன் வீடியோக்களில் மருந்தை அப்படியே குடித்ததும் பெரும் பலசாளி ஆவதும், எதிரியைக் கத்தியால் தாக்குவது போன்ற காட்சிகளைக் காணும் குழந்தைகளின் ஆழ் மனதில் அவை பதிந்து விடுகின்றன. அதிலும் ஆபாசம், வன்முறை வீடியோக்கள் வருவதால் யூ டியூப் குழந்தைகளுக்குப் பாதுகாப்பானது அல்ல என்ற எதிர்ப்பு கிளம்பியது. இதனால் குழந்தைகள் காணும் யூ டியூப் வீடியோக்களுக்கு 13 வயது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதுவும் சரியாக பலன்தராததால், 12 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்காகவே “யூ டியூப் கிட்ஸ்’ என்ற தனி செயலியை (ஆப்) அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்தச் செயலிலும் எதிர்பார்த்த அளவுக்கு குழந்தைகளின் வயதுக்கு ஏற்ற வீடியோக்களைப் பிரித்து காண்பிக்கத் தவறிவிட்டது. அதுமட்டுமின்றி வீடியோக் களைக் காணும் குழந்தைகளின் தரவுகள் சேகரித்து விற்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.

இதன் அடுத்த கட்டமாக தற்போது https://www.youtube.com/kids/ என்ற தனி இணையதளத்தை யூ டியூப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில், 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான வீடியோக் கள், 5 முதல் 7 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான வீடியோக்கள், 7 வயதுக்கு மேற்பட்டவர்களுக் கான வீடியோக்கள் என தனித்தனியாக பிரிவுகள் உள்ளன. குழந்தைகள் கண்ட வீடியோக்களின் தொகுப்புகளும் இடம் பெற்றிருக்கும். இந்த வீடியோக்களில் ஆபாசம், வன்முறை, பெரியவர்களின் செயல்பாடுகள் ஆகியவை இருக்காது என்று யூடியூப் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

மேலும் பாதுகாப்பான வகையில் இந்த இணையதளத்தைக் குழந்தைகள் பயன்படுத்த மேற்கொள்ள செய்ய வேண்டிய மாற்றங்களை பெற்றோர்கள் தெரிவிக்காலம் என யூ டியூப் நிறுவனம் அறிவித்து உள்ளது.