கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்பட 8 பேரின் ஆயுள் தண்டனை- ஐகோர்ட்உறுதி செய்து தீர்ப்பு!

கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்பட 8 பேரின் ஆயுள் தண்டனை-  ஐகோர்ட்உறுதி செய்து தீர்ப்பு!

சேலம் டிஸ்ட்ரிக் ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கடந்த 2015-ம் ஆண்டு ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில், தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு, மதுரை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து 10 பேரும் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். அதேபோல, வழக்கில் இருந்து 5 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கோகுல்ராஜின் தாய் மேல்முறையீடு செய்தார். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள், வழக்கின் முக்கிய சாட்சியான கோகுல்ராஜின் தோழியை நீதிமன்றத்துக்கு வரவழைத்து விசாரித்தனர். அப்போது அவர் பிறழ் சாட்சி அளித்ததாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இந்தநிலையில், யுவராஜ் உள்ளிட்டோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி கேமரா பதிவு உள்ளிட்ட மின்னணு ஆதாரங்களை சேகரித்ததில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி, தங்களுக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை என வாதிட்டார். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மிகவும் திட்டமிட்டு கோகுல்ராஜ் கொல்லப்பட்டதாக வாதிட்டார். இதனிடையே கோகுல்ராஜ் கடைசியாக உயிருடன் காணப்பட்ட திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் மற்றும் கோகுல்ராஜ் சடலமாக கண்டெடுக்கப்பட்ட ரயில் பாதை ஆகியவற்றை நீதிபதிகள் நேரில் ஆய்வு செய்தனர். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், மனுக்கள் மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்தநிலையில், இந்த வழக்குகளில் இன்று தீர்ப்பளித்த சென்னை ஐகோர்ட், யுவராஜ், அருண், குமார், சதீஷ்குமார், ரகு, ரஞ்சித், சந்திரசேகரன், செல்வராஜ், ஆகிய 8 பேருக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. பிரபு, கிரிதர் இருவருக்கும் மட்டும் ஆயுள் தண்டனையானது ஐந்தாண்டு தண்டனையாக குறைக்கப்பட்டது. மேலும், யுவராஜ் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்ற கூறிய ஐகோர்ட், 5 பேரின் விடுதலையில் தலையிட முடியாது என்றும் தெரிவித்து விட்டது.

error: Content is protected !!