June 4, 2023

மோடி அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிக்கு ஐகோர்ட் இடைக்கால தடை!

ல்லையின்றி விரிவடைந்துக் கொண்டே போகும் டிஜிட்டல் ஊடகங்களை கண்காணிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் புதிய தகவல் தொழில்நுட்ப விதிக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பல்வேறு சமூக ஊடகங்களில் இந்தியாவின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் பகிரப்படுவதாக குற்றச்சாட்டுகள் நீண்டகாலமாக எழுந்து வந்த நிலையில், இது போன்ற போன்ற சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் விதத்தில் மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் புதிய தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் சட்டம்) விதிகள் 2021ஐ கடந்த பிப்ரவரி மாதம் கொண்டு வந்தது. இந்த விதிகளை செல்லாது என அறிவிக்க கோரி கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, நாடு முழுவதும் உள்ள அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் உறுப்பினர்களாக உள்ள டிஜிட்டல் நியூஸ் பப்ளிஷர்ஸ் அசோசியேஷன் மற்றும் பிரபல பத்திரிகையாளர் முகுந்த் பத்மநாபன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், ‘டிஜிட்டல் தளத்தில் வெளியிடப்படும் செய்திகளை, சம்பந்தப்பட்ட பப்ளிஷரின் விளக்கம் கேட்காமல் முடக்கம் செய்ய தகவல் தொழில்நுட்ப துறை செயலாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது தன்னிச்சையானது’ என கூறப்பட்டுள்ளது. மேலும், செய்திகளை முடக்கம் செய்ய அதிகாரம் வழங்கும் பிரிவின் அடிப்படையில் தங்கள் சங்க உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள், இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள தனி உரிமையை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது பதிலளித்த மத்திய அரசு, சமூக வலைதளங்களை ஒழுங்குபடுத்தவும், ஆன்லைன் செய்திகளை ஒழுங்குபடுத்தவுமே விதிகள் கொண்டு வரப்பட்டு உள்ளதாகவும், ஒரு சட்டத்தால் தடை செய்யப்பட்ட விஷயங்களை வெளியிடவோ, பரப்பவோ கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ”ஊடகங்களை கண்காணிக்கும் நடைமுறை இருந்தால் ஜனநாயகத்தின் நான்காவது தூண் இல்லாமல் ஆகிவிடும்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

அப்போது மத்திய அரசு தரப்பில், ‘புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு மும்பை உயர்நீதிமன்றம் விதித்த தடை நாடு முழுவதும் பொருந்தும்’ என தெரிவிக்கப்பட்டது.மேலும், இந்த விதிகளை எதிர்த்த வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய வழக்கு அக்டோபர் முதல் வாரம் விசாரணைக்கு வர உள்ளதாகவும் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர், மும்பை ஐகோர்ட் உத்தரவு நாடு முழுவதும் பொருந்தும் என கூறும் நிலையில், விதிகளை பின்பற்றும்படி டிஜிட்டல் பப்ளிஷர்ஸ் அமைப்பு உறுப்பினர்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக குற்றம் சாட்டினார்.

மேலும், புதிய தகவல் தொழில்நுட்ப விதியின் 9 வது பிரிவின் 3வது உட்பிரிவு டிஜிட்டல் ஊடகங்களை ஒன்றிய அரசு கண்காணிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். இதையடுத்து, ஒன்றிய அரசு கண்காணிப்பு நடைமுறை மூலம் ஊடகங்களை கட்டுப்படுத்துவது, ஊடகங்களின் சுதந்திரத்தை பறிக்கும் செயல் எனக் கூறிய நீதிபதிகள், அந்த பிரிவுக்கு இடைக்கால தடை விதித்து, வழக்கின் விசாரணையை அக்டோபர் கடைசி வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.