’மதராஸி’ – விமர்சனம்!

’மதராஸி’ –  விமர்சனம்!

ஜினி பார்த்து இருக்கீங்களா?துப்பாக்கி பார்த்து இருக்கீங்களா? கத்தி பார்த்தாச்சா? சர்க்கார் கண்டதுண்டா?பார்த்தாலும், சரி பார்க்கா விட்டாலும் பரவாயில்லை. இந்த மதராஸி படத்துக்காக அதில் கொஞ்சம், இதில் கொஞ்சம் என தன் பழைய பட நினைவுகளுடன் புதுசான களத்தில் பரபரவென்ற ஸ்பீடில் ஒரு பக்க கமர்சியல் படத்தை வழங்கி இருக்கிறார்கள். அதிலும் கண்ணெதிரே ஒரு தவறு நடந்தால் அதை தட்டிக் கேட்காதவனே சராசரி மனிதன் என்றும், தட்டிக் கேட்பவன் அப்நார்மல் என்றும் சொல்கிற எதிர்மறை சமூகத்தில்தான் நாம் வாழ்கிறோம் என்ற மெசெஜைச் சுட்டிக் காட்டும் படமாக்கும் . கூடவே அமைதிப்பூங்காவாக திகழும் தமிழ்நாட்டில் இப்படியொரு நிலைமை வந்துவிடக் கூடாது என்று மக்களுக்கும், அரசுக்கும் எச்சரிக்கை காட்டும் சினிமா இது என்றால் அது மிகையல்ல,

அதாவது வள்ளலார் கட்டமைத்த தமிழகத்திற்குள் துப்பாக்கி கலாச்சாரத்தை உருவாக்க நினைக்கும் ஒரு பயங்கரவாத கும்பல் , மிகப்பெரிய அளவிலான ஆயுதங்களை விநியோகிக்கும் திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் ஐந்து கன்டெய்னர் லாரிகள் முழுக்க துப்பாக்கிகளுடன் ஒரு கும்பலை அனுப்ப முயற்சிக்கிறது. இதனை தடுக்கும் முயற்சியில் பிஜு மேனன் தலைமையிலான தேசிய புலனாய்வு அமைப்பு ஈடுபடுகிறது. இதற்கிடையே, காதலி தன்னை விட்டு பிரிந்து சென்ற சோகத்தில் தற்கொலை செய்துகொள்ள போவதாக சுற்றிக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனை வைத்து, மேற்படி பயங்கரவாத கும்பலின் திட்டத்தை முறியடிக்க பிஜு மேனன் முடிவு செய்கிறார். இந் நிலையில், நாயகன் சிவகார்த்திகேயன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அதற்காக சுமார் 15 ஆண்டுகள் சிகிச்சை பெற்று வந்தவர் என்றும் பிஜு மேனனுக்கு தெரிய வருகிறது. அவர் நினைத்தது போல் சிவகார்த்திகேயன் மூலம் பயங்கரவாத கும்பலின் திட்டம் முறியடிக்கப்பட்டதா ? , அவர் மனநிலை பாதிக்கப்பட்டது ஏன் ? அவரது காதலி அவரை பிரிந்து சென்றது ஏன் ? ஆகிய கேள்விகளுக்கான விடையை அதிரடி ஆக்‌ஷன் மற்றும் ரொமான்ஸ் ஜானரில் சொல்லி இருப்பதே ‘மதராஸி’ படக் கதை.

நாயகன் சிவகார்த்திகேயன் அமரன் படத்திற்கு பிறகு தன் உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக மாற்றி அசர வைத்த அசத்தியவர் இந்த படத்தில் ரகு என்ற நாமகரணத்தில் ஆக்ஷன் காட்சிகளில் பலே சொல்ல வைத்து விடுகிறார். கூடவே மன நோயாளியாக மிகவும் இன்னசென்ட் ஆசாமியாக அந்த கேரக்டராகவே மாறி பார்ப்பவர்களுக்கு அனுதாபத்தை கொடுத்திருக்கிறார். அதே வேளையில் கேஸ் தொழிற்சாலையில் நடைபெறும் சண்டைக்காட்சியும், கிளைமாக்ஸில் வில்லன் உடனான ஆக்‌ஷன் காட்சியும் மிரட்டல். அப்ப்டி ஆக்‌ஷன் காட்சிகளில் மட்டும் இன்றி ஆபத்தில் சிக்கிக்கொண்டு இருக்கும் ஒவ்வொரு உயிரையும் தன்னுடைய உறவினர்களாகவே நினைத்து உதவி செய்யும் சென்டிமெண்ட் காட்சிகளிலும் அசத்துகிறார். அதிலும் அம்மா போன் செய்தது போல் நடிக்கும் காட்சியில் கண்கலங்க வைத்துவிடுகிறார்.

ஹீரோயின் ருக்மணி வசந்த் அதகலப்படுத்தி ரசிகர்களுக்கும் விருந்து அளித்திருக்கிறார்  தனக்கு கொடுத்த ஸ்பேசில் சிறப்பாக விளையாடியிருக்கிறார். அழகாக இருக்கிறார் அளவாக நடித்திருக்கிறார் தேவையான இடங்களில் தேவையான அளவு வசனம் பேசி கவர்ந்திருக்கிறார். இந்தசிவகார்த்திகேயன், ருக்மணி காதல் ஜோடிகளாக வந்தாலும் படம் முழுவதும் அந்த காதல், ஆக்சனுக்கு மட்டுமே பயன்பட்டிரு ப்பது வித்தியாசமான அணுகுமுறை.

என் ஐ ஏ அதிகாரியாக வரும் பிஜு மேனன் எந்த நேரத்திலும் வில்லனாக மாறக்கூடும் என்ற ஒரு படபடப்பு அந்த கதாபாத்திரத்தை கடைசிவரை உயிர்ப் போடு வைத்திருக்கிறது. பிஜு மேனன் மகனாக விக்ராந்த் நடித்திருக்கிறார். பெரிய வாய்ப்பு இல்லை என்றாலும் டான்சிங் ரோஸுடன் போடும் ஆக்ஷன் காட்சியில் மனதில் இடம் பிடிக்கிறார்.

கேமராமேன் சுதீப் இளமோன், படம் முழுவதையும் பிரமாண்டமாக படமாக்கியிருக்கிறார். அதிலும் நைட் எஃபெக்ட் சண்டைக்காட்சிகளின் வேகம் மற்றும் பிரேம்கள் மூலம் பார்வையாளர்களை வியக்க வைத்திருக்கும் சுதீப் இளமோன், படம் முழுவதையும் ஹாலிவுட் தரத்தில் படமாக்கியிருக்கிறார்.

எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத், இரண்டரை மணிக்கும் மேலான நீளம் இருந்தாலும், அனைத்து காட்சிகளையும் ரசிக்கும்படி நேர்த்தியாக காட்சிகளை தொகுத்திருக்கிறார். படத்தின் ஆரம்பக் காட்சியான கண்டெய்னர் சேசிங், அதன் பிறகு ஹீரோவின் அறிமுகம், அவரது காதல், மனநலம் பாதிப்பு என அனைத்து விசயங்களையும் பார்வையாளர்கள் ரசிக்கும்படி தொகுத்திருப்பவர், சண்டைக்காட்சிகளை படத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் விதத்தில் சுவைபட தொகுத்திருக்கிறார்.

மியூசிக் டைரக்டர் அனிருத் பாடல்கள் சோபிக்கவில்லை. ஆனால் பின்னணி இசையில் ஓரளவு சமாளித்து இருக்கிறார்.

மனநல சிகிச்சைக்கு உட்பட்ட இளைஞனான சிவகார்த்திகேயன் எப்படி என் ஐ ஏ அதிகாரிகளுக்கு உதவுவார். அதை எப்படி அரசு அனுமதிக்கும் என்ற கேள்வி எல்லாம் எழுந்தாலும் அதற்கு லாஜிக் உடன் பதில் அளித்திருக்கும் இயக்குனர் மேலும் ஏகப்பட்ட லாஜிக் மீறல்களுடன் இந்த கால ட்ரெண்டுக்கு ஏற்ப ஆக்ஷன் காட்சிகளையும் , காதல் காட்சிகளையும் ஈக்வலாகக் கோர்த்து ஒரு பக்கா டைம் பாஸ் மூவி கொடுப்பத்தியோல் ஜெயித்து விட்டார்

மொத்தத்தில் இந்த மதராஸி – பக்கா எண்டர்டெயிண்ட்மெண்ட் மூவி

மார்க் 3.75/5

error: Content is protected !!