காந்தி கண்ணாடி விமர்சனம்!

காந்தி கண்ணாடி விமர்சனம்!

டந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி இரவு, 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அதாவது அடுத்த 4 மணி நேரத்தில் ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாகாமல் போகும் என்றார். கருப்பு பணத்தை ஒழிக்கவும், நாட்டில் ஹவாலா பரிவர்த்தனையை ஒழிக்கவும் இந்த நடவடிக்கையை எடுப்பதாக மோதி தெரிவித்தார். அடுத்த பல மாதங்கள் வங்கிகளிலும் அஞ்சலகங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் கால் கடுக்க நின்றனர். வங்கிகளில் தங்களின் பணத்தை மாற்றவும், ஏடிஎம்-களில் பணம் எடுக்கவும் பலரும் பல மணி நேரம் காத்து கிடந்தனர். இதில் சிலர் உயிரிழக்கவும் நேரிட்டது. அக்காலக் கட்ட ரணத்தை இன்றும் பலரால் மறக்க இயலாத சூழலில் அந்த உத்தரவால் வதைப்பட்ட இன்னொரு நிகழ்வை மீண்டும் கண் முன் நிகழ்த்தி காட்டி ஒரு சரித்திர பதிவாக வந்துள்ளது காந்தி கண்ணாடி. கூடவே அண்மை காலமாக பல காதல் திருமணங்கள் டைவோர்ஸில் முடியும் காலக்கட்டத்தில், 60 வயதை தாண்டியும், அன்பை வெளிப்படுத்தி வாழ்வதே காதல், என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்ய முயற்சித்திருப்பதுதான் ஹைலைட்

அதாவது காந்தி, கண்ணம்மா என்ற மூத்த ஜோடி அறுபதாவது வயது திருமண விழா ஒன்றுக்கு செல்கிறார்கள். அந்த திருமணத்தை பார்த்த கண்ணம்மாவுக்கு நமக்கும் ஒரு பிள்ளை இருந்தால் இதுபோல் 60 வயது திருமணம் செய்து வைத்திருப்பான் என்று கூற தன் உயிருக்கும் மேலாக மதிக்கும் கண்ணம்மாவின் ஆசையை நிறைவேற்ற முடிவு செய்கிறார் காந்தி. ஊரில் உள்ள தனது ஜமீன் சொத்தை விற்று 80 லட்சம் பணம் கொண்டு வருகிறார். அந்த பணம் கிடைத்த மகிழ்ச்சியில் பாலாவும், மனைவிவியின் ஆசையை நிறைவேற்ற போகிறோம், என்ற மகிழ்ச்சியில் பாலாஜி சக்திவேலும் இருக்க, அரசு அறிவிப்பின் மூலம் அவர்களிடம் இருக்கும் பணம் செல்லாமல் போய் விடுகிறது. அந்தப் பணத்தை மாற்றி எப்படியாவது கல்யாணத்தை நடத்தி விட வேண்டும் என்று பாலாஜி சக்திவேல் நினைக்க, அதே சமயம் பணம் மாற்றுவதையும் லாப நோக்கத்துடன் பார்க்கும் நாயகன் பாலா, பாலாஜி சக்திவேல் ஆசைப்பட்டது போல், 60 வது கல்யாணத்தை நடத்தினாரா ? இல்லையா ? என்பதை நகைச்சுவையாகவும், உணர்வுப்பூர்வமாகவும் சொல்ல முயற்சித்திருப்பது தான் ‘காந்தி கண்ணாடி’ படக் கதை.

துணை வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த பாலா இந்த படம் மூலம் ஹீரோவாக ஆகியிருக்கிறார். நியாயமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து மனதில் இடம் பிடிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதை எல்லாம் செய்திருக்கிறார். ஆனால் ஆக்டிங்கில் அவர் இன்னும் தேறவில்லை என்பது தான் உண்மை. நடனம் ஆடுகிறார், அவ்வபோது டைமிங் காமெடி வசனங்கள் மூலம் சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார், சென்டிமெண்ட் காட்சிகளில் பார்வையாளர்களை கண்கலங்க வைக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், அனைத்தும் முயற்சியாக மட்டுமே இருக்கிறதே தவிர சிறப்பானதாக இல்லை. இது முதல் படம் என்பதால் அடுத்தடுத்த படங்களில் இம்ப்ரூவ் ஆகி விடுவார் என்று நம்புவோம்

காந்தி, கண்ணம்மா மூத்த தம்பதி கதாபாத்திரத்தில் பாலாஜி சக்திவேல், ஊர்வசி பட்டம் பெற்ற அர்ச்சனா நடித்திருக்கிறார்கள் என்பதை விட நிஜமாகவே வாழ்ந்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம், ஊர்வசி பட்டம் பெற்ற அர்ச்சனா மறைந்த இயக்குனர் பாலுமகேந்திராவின் திறமையான ஒரு கண்டுபிடிப்பு. இந்த காலகட்டத்தில் ஊர்வசி பட்டம் என்பது கிடையாது ஆனால் அர்ச்சனா திரையுலகுக்கு வந்த காலகட்டங்களில் சிறந்த நடிகைக்கு மத்திய அரசு ஊர்வசி பட்டம் வழங்கி கௌரவிப்பது உண்டு. அந்தப் பட்டத்தை தான் அர்ச்சனா பெற்றிருக்கிறார். ஊர்வசி பட்டம் பெற்ற ஒரு நடிகை எப்படி நடிப்பார் என்பதை நாம் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இதுவரை அவரது நடிப்பை பார்க்காத இளவட்டங்களுக்கு வாய்ப்பாக இந்த படம் வந்திருக்கிறது. காதல் படத்தை இயக்கிய பாலாஜி சக்திவேல் சில படங்களில் நடித்திருக்கிறார் அந்த கதாபாத்திரங்கள் எல்லாம் பெரிதாக ஞாபகத்தில் இல்லை. ஆனால் இந்த படத்தில் காந்தி என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்திருக்கும் நடிப்பு காலகாலத்துக்கும் அவர் பெயரை சொல்லிக் கொண்டிருக்கும்.

ஹீரூவின் நண்பராக நடித்திருக்கும் மதன், நிகிலா சங்கர், ஜீவா சுப்பிரமணியம், ரித்து சாரா, அமுதவாணன், மனோஜ் பிரபு என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் தங்களால் முடிந்த பங்களிப்பை செய்துள்ளார்கள்.

கேமராமேன் பாலாஜி கே.ராஜா, லைவ் லொக்கேஷன்களில் காட்சிகளை பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக இரவு நேரக் காட்சிகள், கோவில் திருவிழா ஆகியவற்றின் மூலம் கவனம் ஈர்ப்பவர், கதாபாத்திரங்களையும் பளிச்சென்று காண்பித்திருக்கிறார்.

விவேக் – மெர்வின் இசையில் பாடல்கள் கொண்டாடும் விதமாகவும், திரும்ப திரும்ப கேட்கும் விதமாகவும் இருக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரோட்டம் அளித்திருக்கிறது.

ஆனாலும் திரைக்கதை இன்னும் அக்கறைக் காட்டி இருக்கலாம். மேலும் பல காட்சியமைப்புகள் படத்தை தொய்வடைய செய்கின்றன,

ஆனாலும் குடும்பத்தோடு பார்க்க கூடிய விதத்தில் படத்தை நாகரீகமாக கையாண்டிருக்கும் இயக்குநர் ஷெரிப், முன்னரே சொன்னது போல் இளமை பருவத்தில் மட்டும் அல்ல முதுமையிலும் தொடர்வதே உண்மையான காதல் என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லும் முயற்சியில் சற்று சறுக்கி விட்டார்

மொத்தத்தில் காந்தி கண்ணாடி = மோடி ஆட்சியின் பிரதிபலிப்பு

மார்க் 2.75/5

Related Posts