மேடம் மேயர் அவர்களே.. இது ஆபத்தான விளையாட்டு!

மேடம் மேயர் அவர்களே.. இது ஆபத்தான விளையாட்டு!

சென்னை மேயரும் மாநகராட்சி கமிஷனரும் ஒரு காரின் footboardடில் பயணித்தது சர்ச்சையாகி இருக்கிறது. அதற்கு ஆர் கெ நகர் எம்எல்ஏ ஒரு காரணமும் சொல்லி இருக்கிறார். முதல்வர் அவசர அவசரமாக போக வேண்டி இருந்தது. இவர்களுடைய கார் வேறெங்கோ டிராஃபிக்கில் மாட்டிக் கொண்டு விட்டது. எனவே அவசர அவசரமாக முதல்வருடன் கூடப் போகவே அப்படி வேறொரு ஓடும் காரின் footboardடில் ஏற வேண்டி இருந்தது என்று சொல்கிறார். திமுக விமர்சகர்கள் அந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். இதற்கு முன் ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சர்கள் இதே போல பயணித்ததை இதனுடன் ஒப்பிட்டுக் கலாய்க்கிறார்கள்.

அதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். அவர்களின் விளக்கத்தை ஏற்றுக் கொண்டே நான் யோசிக்கிறேன். அங்கே எனக்கு சில கேள்விகள் வருகின்றன: முதல்வருடன் மேயர் போயே தீர வேண்டும் என்று ஏதாவது கட்டாயமா? முதல்வர் ஒரு இடத்திலும் மேயர் வேறு ஒரு இடத்திலும் வெள்ள சேதங்களை பார்வையிடப் போகக் கூடாதா என்ன? சரி, சில காரணங்களுக்காக அப்படி கூடப் போயே தீர வேண்டும் என்றால், இதே போன்ற அவசரக் காரணங்கள் பேருந்துகளில் படிக்கட்டில் பயணிப்பவர்களுக்கும் இருக்கும்தானே? ஆபீசுக்கு லேட்டாக போனால் மேனேஜர் திட்டுவார், சம்பளம் பிடிப்பார்கள், அல்லது தினக்கூலி போய் விடும் போன்ற நியாயமான காரணங்கள் அவர்களுக்கும் உள்ளனவே?

அதனால்தானே உயிருக்கு ஆபத்து வந்தாலும் பரவாயில்லை என்று படிக்கட்டில் தொற்றிக் கொண்டு பயணிக்கிறார்கள்? அப்போது ஏன் அவர்களை மட்டும் பிடித்து அபராதம் விதிக்கிறோம்? மேயருக்கும் கமிஷனருக்கும் இருப்பது மட்டும் நியாயமான அவசரம்; ஒரு தினக்கூலிக்கு இருப்பது அநியாயமான அவசரமா? மேயரோ கூலியாளோ, யாராக இருந்தாலும் footboard பயணம் ஆபத்தானது.

ஒரு தினக்கூலியின் உயிருக்கு ஆபத்து நேருவது அவர் குடும்பத்தைத்தாண்டி வெளியே பெரிய பாதிப்பைக் கொண்டு வராது. ஆனால் மேயர் அல்லது கமிஷனர் உயிர் பற்பல மடங்கு முக்கியமானது. ஒரு முழு நகரத்தையும் பாதிக்கும் விஷயம். எனவே இனிமேல் இது போன்ற ஆபத்தான விளையாட்டுகளை மேற்கொள்ள வேண்டாம் என்று மேயரையும் கமிஷனரையும் கேட்டுக் கொள்கிறேன்.

ஆம்புலன்ஸ், ஃபயர் சர்வீஸ் போன்றவை தவிர வேறு எந்த சேவைக்கும் அப்படிப்பட்ட அவசரம் இருக்க வேண்டியதில்லை. நீங்கள் ஒரு அரை மணி ஒரு மணி லேட்டாகக் கூட போகலாம். யாருக்கும் பெரிய பாதிப்பு வராது. உங்கள் உயிரைப் பணயம் வைத்து அடுத்த உயிரை காப்பாற்ற முனையாதீர்கள். எனவே மேடம் மேயர் அவர்களே, உங்கள் சேவைகளை திறம்பட செய்யுங்கள். ஆனால் உங்களை பாதுகாப்புடன் கவனித்துக் கொண்டு அந்த சேவைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

– ஸ்ரீதர் சுப்ரமணியம்

error: Content is protected !!