லவ் டுடே – விமர்சனம்!

லவ் டுடே – விமர்சனம்!

விரல் நுனியில் உலகம், நினைத்த நேரத்தில் தொடர்பு, கருத்துப் பரிமாற்றம், பாதுகாப்பு, செய்திகள்… என ஆறாம் விரலாய் மாறிப் போன செல்போன்களால் பலவித நன்மைகள் இருக்கின்றன என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.. ஆனால் டாஸ்மாக் சாராயம் மாதிரி இந்த செல்போன்களும் போதைப் பொருளாக உருமாறி இருப்பது, இன்றைய காலத்தில் குறிப்பிடப்படவேண்டிய ஒன்று. இருபத்தி நான்கு மணி நேரமும் செல்போன்கள் நமது உடலோடு ஒட்டிக்கொண்டேதான் இருக்கின்றன. காலையில் விழிக்கச் செய்யும் அலாரத்தில் தொடங்கி, மணிக்கணக்கில் பேசுவது, வணிகம், அரட்டை என நீண்டு, இரவில் தாலாட்டுப் பாடி நம்மை உறங்கச் செய்வதுவரை செல்போன்கள்தான். அப்படி நம்மில் பலரின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத போனின் இன்னொரு கொடூர முகத்தையே லவ் டுடே என்ற பெயரில் கதை உருவாக்கி . இயக்கி ஹீரோவாகவும் நடித்து வழங்கி உள்ளார்.பிரதீப் ரங்கநாதன்.. இத்தனைக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னால் பிரதீப் ரங்கநாதன் தான் இயக்கிய ’அப் (பா) லாக்’ என்ற ஷார்ட் ஃபிலிமைத்தான் இப்போது முழுநீள திரைப்படமாக இயக்கியிருக்கிறார். அந்த, கதைக்களத்தில் மாற்றம் ஏதும் செய்யாமல், சுமார் இரண்டரை மணி நேரமாக நீட்டித்து அதையும் ரசிகர்களை கவரும் விதத்தில் திரைக்கதையை பின்னி அப்ளாஸ் வாங்கி இருக்கிறார்.

மிடில் கிளாஸ் பேமிலியைச் சேர்ந்த பிரதீப்பும், அவாள் குடும்பத்து பெண்மணியான இவனாவும் காதலிக்கின்றனர். இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக தெரிந்தும், புரிந்தும் வைத்துக் கொண்டுள்ளனர் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நேரத்தில் இவர்கள் காதல் விஷயம் இவானாவின் அப்பா சத்யராஜுக்கு தெரிய வர அவர் இவர்களின் காதலுக்கு பச்சை கொடி காட்டி விட்டு மேரேஜூக்கு ஒரு கண்டிஷன் போடுகிறார். அதாவது பிரதீப்பின் செல்போனை இவானாவிடமும், இவானாவின் செல்போனை பிரதீப்பிடமும் ஒரு நாள் முழுவதும் வைத்துக்கொள்ள கட்டளையிடுகிறார்.. அதன்படி இருவரும் செல்போனை மாற்றிக் கொள்கின்றனர். வீட்டிற்கு போன பிரதீப் ஆர்வத்தால் நிகிதாவின் கைபேசியை ஓபன் செய்து தகவல்களை பார்க்கிறார். ட்விட்டர், பல்வேறு ஆண் நண்பர்கள், பழைய காதல், டேட்டிங் என நிகிதாவின் இன்னொரு பக்கத்தை தெரிந்து கொள்கிறார். இதே போல நிகியும் பிரதீப்பின் கை பேசியை திறந்து பார்க்கிறார். உள்ளே ஒரு ஆபாச கூடாரமே இருக்கிறது. பிரதீப்பின் நண்பர்கள் தனக்கும் தன் தங்கைக்கும் ஆபாச செய்திகள் அனுப்பியது தெரிய வருகிறது. இதையடுத்து அவர்களுக்குள் இருந்த காதல் என்னவானது? இறுதியில் இருவரும் சேர்ந்தார்களா, இல்லையா? என்பதே இப்படத்தின் கதை.

கோமாளி என்னும் முதல் படத்தில் ஜெயம்ரவியை வைத்து இயக்குநராக வெற்றி பெற்ற பிரதீப் ரங்கநாதன், இரண்டாவது படத்தில் இயக்குநராக மட்டுமின்றி, கதையின் நாயகனாகவும் கமிட் ஆகி வெற்றியும் பெற்றிருக்கிறார். ஆனால் சில இடங்களில்எஸ்.ஜே.சூர்யா, பல இடங்களில் ரகுவரம் மற்றும் தனுஷ் கூடவே, பாக்யராஜ் போன்றவர்களை இமிடேட் செய்திருப்பது அப்பட்டமாக தெரிந்தாலும் கதையோட்டத்தில் அக்குறை கரைந்து போய் விடுகிறது. நாயகியாக நடித்திருக்கும் இவானா, முதல் படத்திலேயே பலமான வேடத்தில் பலே…சொல்லும் வகையில் நடித்திருக்கிறார். நாயகனுக்கு இணையாக கதையை சுமந்திருப்பவர், காதல், மகிழ்ச்சி, துக்கம், கோபம் என அனைத்து விதமான உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் ஆழமாக இடம் பிடித்துவிடுகிறார்.

சத்யராஜ் மற்றும் ராதிகா போன்றோர் தங்கள் அனுபவ நடிப்பை வழங்கி இன்றைய காதலுக்கு வலுவூட்டி இருக்கிறார்கள்..வழக்கத்துக்கு மாறான யோகிபாபு கவனம் ஈர்க்கிறார். யுவனின் இசை கதைக்கு பரபரப்பை தருகிறது.

கிடைத்த வாய்ப்பை வைத்து சக்சஸ் கொடுத்தே ஆக வேண்டும் என்ற ஒற்றை நோக்கில் 2K இளைஞர்களின் வாழ்க்கை, காதல், அந்த காதலை பெற்றோர்கள் பார்க்கும் விதம், காதலர்களுக்கு இடையே ஏற்படும் சந்தேகம் என படத்தின் முதல் பாதி ஜாலியாக நகர்ந்தாலும் ஆங்காங்கே சலிப்பு ஏற்படுத்துகிறது. அதிலும் க்ளைமாக்ஸ் வழக்கமான காதல் படங்களை போல் வழங்கியதும் மைனஸாகி விட்டது..

ஆனாலும் இந்த லவ் டுடே – இளசுகளின் ரிங் டோன் மாதிரி இப்போதைக்கு ரசிக்க வைத்து விடுகிறது.

மார்க் 3.25/5

Related Posts

error: Content is protected !!