செய்தியைக் கேட்க / Listen to News
எந்த மொழி திரைப்படமாக இருந்தாலும், காலம் மாறினாலும், தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ந்தாலும், ரசிகர்களின் இதயத்தை எப்போதும் ஆக்கிரமித்து நிற்பது காதல் கதைகள்தான். காதல் என்பது வெறும் ஆண்–பெண் உறவைச் சொல்லும் உணர்வு மட்டுமல்ல; நம்பிக்கை, தியாகம், பிரிவு, மீண்டும் இணைதல், கனவு, வலி, மகிழ்ச்சி போன்ற மனித உணர்வுகளின் முழுமையான பிரதிபலிப்பாக அது திரையில் உயிர்பெறுகிறது. அதனால்தான் காதலை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் எல்லைகளைக் கடந்து உலகம் முழுவதும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடிக்கின்றன. அந்த வகையில், இன்றைய தலைமுறையின் காதலைப் பேசும் படமாக உருவாகி வெளிவந்திருக்கிறது ‘லவ் ஓ லவ்’ (Love Oh Love).
கதைக்களம்:
சொற்ப வருமானத்தில் குடும்பம் நடத்தும் நடுத்தர வர்க்கத்துப் பெற்றோருக்கு (கே.எஸ்.ரவிக்குமார் – ஐஸ்வர்யா) ஒரே மகன் பவிஷ். அவனுக்கு ஒரு தங்கையும் இருக்கிறாள். இந்தச் சூழலில், ஒற்றைப் பெற்றோராக இருக்கும் தாயால் (ரம்யா) வசதிகள் குறையாமல் வளர்க்கப்பட்ட பணக்கார வீட்டுப் பெண் நாக துர்காவுடன் பவிஷுக்குக் காதல் பற்றிக்கொள்கிறது.
ஆரம்பத்தில் ஜாலியாகத் தொடங்கும் இந்த பந்தம், போகப்போகப் பொருளாதார ரீதியாகப் பவிஷை அடியோடு பிழிந்தெடுக்கிறது. அவனது மாதாந்திரச் சம்பளத்தையோ, குடும்பச் சூழ்நிலையையோ சற்றும் மதிக்காமல், நாக துர்கா தன் அந்தஸ்துக்கு இணையான ஆடம்பரச் செலவுகளை வைக்கிறாள். நினைத்த மாத்திரத்தில் லட்ச ரூபாய் மதிப்புள்ள பட்டுப்புடவைகள், கண்ணைப் பறிக்கும் தங்க நகைகள், ஊட்டிக்கு ஜாலி டூர் எனத் தன் விருப்பப் பட்டியலால் காதலனின் பர்ஸைக் காலி செய்கிறாள்.
பணப் பற்றாக்குறை ஒருபுறமிருக்க, “நான் எப்போது கூப்பிட்டாலும், எங்கு இருந்தாலும் எந்த வேலையையும் பார்க்காமல் உடனே என் முன்னால் வந்து நிற்க வேண்டும்” என அவனது தனிப்பட்ட சுதந்திரத்திலும், நேரத்திலும் ஆதிக்கம் செலுத்துகிறாள்.
இதற்கிடையே, காதலியின் தாய் காவல் நிலையத்தில் கொடுக்கும் பொய்ப் புகாரால், பவிஷின் குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக அசிங்கப்பட்டு, மானத்திற்கு அஞ்சி சொந்த ஊருக்கே ஓடி விடுகிறார்கள். கடன்காரர்களின் டார்ச்சர், வேலை இழப்பு, நாலாபுறமும் விழும் அடி உதை எனத் தொடர் இன்னல்களால் பவிஷின் வாழ்க்கை நரகமாகிறது. ஒரு கட்டத்தில் பொறுமையின் எல்லையைத் தாண்டும் போது, காதலியின் அடாவடி தாங்காமல் அவளை ஓங்கி அறைந்து விடுகிறான். இந்த விவகாரம் மகளிர் சங்கத் தலைவி வனிதா மூலம் மீண்டும் காவல் நிலையம் வரை சென்று விஸ்வரூபம் எடுக்கிறது.
அங்கு இன்ஸ்பெக்டராக இருக்கும் செல்வராகவனிடம் பவிஷ் ஒரு புதுமையான நிபந்தனையை விதிக்கிறான். “கடந்த நான்கு வருடங்களாக இவள் ஆட்டியபடியெல்லாம் நான் எப்படி ஆடினேனோ, அதே போல் அடுத்த நான்கு மாதங்கள் இவள் எனக்காகப் பணிந்து நடக்க வேண்டும். அப்படி அவளால் செய்ய முடியாவிட்டால், இனி என்னை எப்போதும் தொந்தரவு செய்ய மாட்டேன் என்று ‘காதல் துறப்பு கடிதம்’ (L3 – Love Leaving Letter) எழுதிக் கொடுத்துவிட்டுப் போக வேண்டும்” என்கிறான்.
காதலை நிரூபிக்க இந்த நிபந்தனையை ஏற்றுக்கொள்ளும் நாக துர்கா, காதலனுக்காக டாஸ்மாக்கில் மதுபானம் வாங்கித் தருவது வரை இறங்கி வந்து போராடுகிறாள். ஆனால் அவனோ, இந்த நரக உறவே வேண்டாம் என்ற இறுதி முடிவை நோக்கி நகர்கிறான். ஒரு கட்டத்தில் நாயகியின் தாயும் இதில் தலையிட, மனமுடையும் நாயகியின் காதல் என்னவானது? இவர்களின் பிணைப்பு நீடித்ததா இல்லையா என்பதே மீதிக்கதை.
நடிகர்களின் பங்களிப்பு
-
பவிஷ்: நாயகனாக நடித்திருக்கும் பவிஷ், நடனம் மற்றும் நடிப்பில் தன்னைச் சிறப்பாக நிரூபித்துள்ளார். சில இடங்களில் இவரிடம் தனுஷின் சாயல் தெரிகிறது. ஆக்ஷன், நடனம், காதலி மீதான கோபம் என அனைத்திலும் அளவாக நடித்து, காதலால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எதார்த்தப் பிரதிபலிப்பாக வலம் வருகிறார்.
-
நாக துர்கா: புதுமுக நாயகியான இவர் பக்கத்து வீட்டுப் பெண் போல் எளிமையாக இருந்தாலும், பார்வையாளர்களை சட்டென்று கவரக்கூடிய அளவில் இல்லை. நடனக் காட்சிகளிலும் இவருக்குப் போதிய வாய்ப்பு இல்லாததால் மனதில் ஒட்ட மறுக்கிறார்.
-
இதர கதாபாத்திரங்கள்: நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார், இன்ஸ்பெக்டராக வரும் செல்வராகவன் மற்றும் மகளிர் சங்கத் தலைவியாக வரும் வனிதா விஜயகுமார் ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரங்களை நிறைவாகச் செய்துள்ளனர்.
தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பு
-
ஒளிப்பதிவு (பி.ஜி.முத்தையா): படம் முழுவதையும் கலர்ஃபுல்லாகக் காட்சிப்படுத்தி கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார். ஒரே ஒரு சண்டைக்காட்சி என்றாலும், நாயகனைப் புழுதியோடு உருள வைத்து உண்மைக்கு நெருக்கமாகப் படமாக்கியுள்ளார். பாடல்களில் பயன்படுத்திய ஒளி மற்றும் வண்ணங்கள் இவரை ஒரு பக்கா கமர்ஷியல் ஒளிப்பதிவாளராகக் காட்டுகிறது.
-
இசை (மிபாக்ஸன்): பாடல்கள் கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்தவையாக இருந்தாலும், மக்கள் மனதில் திரும்பத் திரும்பக் கேட்கும் வகையில் நீடித்து நிற்கவில்லை. பின்னணி இசை கதைக்குத் தேவையான அளவில் அமைந்துள்ளது.
ஜென்-இசட் காதலும் இயக்குநரின் பார்வையும்
இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் இப்படம் மூலமாக வெளிப்படுத்தியிருக்கும் காதல் பலருக்கும் புதுசாக இருக்கலாம். இன்றைய ஜென்-இசட் (Gen Z) காதல் உறவுகளையும், அதனுடன் வரும் அதீத எதிர்பார்ப்புகளையும், குடும்ப உறவுகளோடு இணைத்துச் சரியான அளவில் வழங்க முயன்றதில் இயக்குநர் தேர்ச்சி பெற்றுவிடுகிறார்.
ஆங்காங்கே சில நாடகத்தனம் தென்பட்டாலும், தற்காலக் காதலின் எதார்த்த சிக்கல்களைப் பேசும் இந்த ‘லவ் ஓ லவ்’ (L.O.L) திரைப்படம், இளைஞர்கள் தியேட்டரில் ரசிக்கத் தகுந்த ஒரு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது.
மார்க் 3.5/5

