32°C
விளம்பரம்
Advertisement

‘இதயம் முரளி’ – விமர்சனம்!

admin Published: July 11, 2026 4 நிமிட வாசிப்பு Updated: July 12, 2026 Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News


மிழ் சினிமாவில் காதலை மௌனமாக வாழ்ந்த நாயகர்களைப் பற்றிப் பேசும்போது, ரசிகர்களின் நினைவில் முதலில் நிற்பவர் “இதயம்” முரளி தான். காதலித்த பெண்ணிடம் தனது காதலை நேரில் சொல்லத் துணிவில்லாமல், அவளின் அருகிலேயே இருந்து அவளது மகிழ்ச்சியிலேயே தனது மகிழ்ச்சியைத் தேடும் அப்பாவியான இளைஞனின் உணர்வுகளை முரளி அவ்வளவு இயல்பாக வெளிப்படுத்தினார். காதலை வெளிப்படுத்த முடியாமல் ஒவ்வொரு தருணத்திலும் தவிக்கும் மனநிலை, சொல்லாத வார்த்தைகளால் சுமக்கும் வலி, ஒருதலைக் காதலின் ஏக்கம், இழந்துவிடுவோமோ என்ற பயம், இறுதிவரை மனதுக்குள்ளேயே காதலை புதைத்து வைத்திருக்கும் அந்த மௌனப் போராட்டம் ஆகியவற்றை அவர் கண்களாலும் முகபாவனைகளாலும் மட்டுமே உயிர்ப்பித்தார். அதனால்தான், “காதலியிடம் காதலைச் சொல்லாத நாயகன்” என்ற அடையாளம் முரளியுடன் என்றும் பிரிக்க முடியாத வகையில் இணைந்து, ரசிகர்களின் மனதில் அவரை “இதயம் முரளி” என்ற பெயரில் நிலைத்திருக்கச் செய்தது. அன்னாரின் அதே நாமகரணத்தில், அந்த முரளியின் மகன் அதர்வாவை ஹீரோவாகக் கொண்டு வந்திருப்பதுதான் இப்படம். ஆனால் ஒட்டுமொத்தமாக, உணர்வற்ற திரைக்கதை மற்றும் லாஜிக் இல்லாத காட்சிகளால், இந்த ‘இதயம் முரளி’ ரசிகர்களின் இதயத்தைக் கவரத் தவறிவிட்டது.

கதைக்களம்

பழைய ‘இதயம்’ திரைப்படம் ஒரே ஒரு பெண்ணின் மீதான வாழ்நாள் காதலைப் பேசியது என்றால், இந்த ‘இதயம் முரளி’ நாயகனின் மூன்று வெவ்வேறு காலகட்டக் காதல்களைப் பேசுகிறது. ஆரம்பப் பள்ளிப் பருவம், உயர்நிலைப் பள்ளிப் பருவம் மற்றும் கல்லூரிப் பருவம் என மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் மூன்று பெண்கள் மீது நாயகனுக்குக் காதல் மலர்கிறது. தனது தந்தை முரளியின் பாணியிலேயே, இந்த மூன்று காதல்களையும் அந்தந்தப் பெண்களிடம் கடைசி வரை சொல்லாமலேயே, ஒருதலைக் காதலாகவே (One-sided love) கடந்து செல்கிறான். தன் காதலை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கும் ஒரு இளைஞனின் ஏக்கம் கலந்த கற்பனை உலகத்தை (Wholesome yearner’s fantasy) மையமாகக் கொண்டு இந்தத் திரைக்கதை பின்னப்பட்டுள்ளது.

நடிக, நடிகையர் பங்களிப்பு

  • அதர்வா: நாயகன் அதர்வா உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டிய இடங்களில் ஃபீல் பண்ணாமலும், அழ வேண்டிய இடங்களில் அழாமலும் ஒரே மாதிரியான முகபாவனையுடன் (Expression) வலம் வருகிறார். உணர்வுப்பூர்வமான நடிப்பிற்கு அவர் தனது தந்தை முரளி நடித்த சிறந்த படங்களை மீண்டும் போட்டுப் பார்க்க வேண்டும்.

  • பகத் பாசில்: நடிப்புத் திறமைக்கு உலகளவில் பெயர் பெற்ற பகத் பாசில் போன்ற ஒரு மாபெரும் கலைஞனை இயக்குநர் மிக மோசமாக வீணடித்துள்ளார். பிசினஸ் கிளாஸ் விமானப் பயணத்தில் அதர்வா சொல்லும் கதையை வெறுமனே கேட்கும் ஒரு சக பயணியாக வரும் அவருக்கு, எந்தவித முக்கியத்துவமும் இல்லாத வசனங்களும் காட்சிகளும் கொடுக்கப்பட்டு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ரேஞ்சிற்குச் சுருக்கியுள்ளனர்.

  • இதர நட்சத்திரங்கள்: நடிகர் நட்டி, படத்தில் அதர்வாவுக்கு அப்பாவா அல்லது மாமாவா என்பதில் ரசிகர்களுக்குக் குழப்பமே மிஞ்சுகிறது. யூடியூப்பில் ரசிக்கப்பட்ட கோபி-சுதாகர் ஜோடியின் சுதாகர் மற்றும் தமன் போன்றோரின் காமெடி காட்சிகள் பிக் ஸ்கிரீனில் சற்றும் எடுபடவில்லை.

டெக்னிஷியன்ஸ்

தொழில்நுட்ப ரீதியாகத் திரைப்படத்தின் கேமரா ஒர்க் நன்றாக இருந்தாலும், பின்னணி இசை காதை பிளக்கும் வண்ணம் உள்ளது. இருப்பினும், படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள இசைஞானி இளையராஜாவின் பழைய பாடல்களான ‘பொட்டு வைத்த வட்ட நிலா’ மற்றும் ‘ஏப்ரல் மேயிலே’ ஆகிய பாடல்களும், அவரது அசல் பின்னணி இசை வரும் இடங்களும் மட்டுமே தியேட்டரில் ரசிகர்களைக் கைதட்ட வைக்கின்றன.

இயக்கம்

இயக்குநர் ஆகாஷ் பாஸ்கர் (இயக்குநர் விக்னேஷ் சிவனின் முன்னாள் உதவி இயக்குநர்) இவ்வளவு எளிமையான ஒரு ஒன்லைன் கதையை வைத்துக்கொண்டு, சுமார் இரண்டே முக்கால் மணி நேரத் திரைப்படத்தை இழுத்துச் சென்றிருப்பதுதான் ரசிகர்களின் பொறுமையைச் சோதிக்கும் முதல் பலவீனம்.

திரைப்படத்தின் ஆரம்பக் காட்சியே அடுக்கடுக்கான லாஜிக் கேள்விகளை எழுப்புகிறது. சென்னையில் ஒருபுறம் திருமண வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்க, மாப்பிள்ளையான அதர்வாவோ நியூயார்க்கில் நண்பர்களுடன் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருக்கிறார். அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு வர 16 மணி நேரப் பயணம் தேவைப்படும் சூழலில், எந்தவிதப் பதற்றமும் இல்லாமல் மாப்பிள்ளை ஷூ மாட்டிக் கொண்டு கிளம்பும் காட்சிகள் அப்பட்டமான சினிமாத்தனம்.

அடுத்து, லேண்ட்லைன் போன்கள் மறைந்து மொபைல் போன்கள் எட்டிப்பார்க்கும் 90-களின் பிற்பகுதியைக் காட்டும் போது, காட்சிகள் 70 மற்றும் 80-களின் பின்னணி போல மண் வாசனை, மழை வாசனை எனப் பழைய பாணியில் அமைத்துள்ளார். பள்ளிப் பருவத்தில் ஆசிரியையின் மேல் மாணவனுக்கு வரும் காதலும், பிரசவ வலியால் துடிக்கும் அந்த ஆசிரியைக்குச் சிறு பிள்ளைகளே ஓடிச் சென்று மருத்துவமனையில் சேர்க்கும் காட்சியும் எதார்த்தத்திற்குச் சற்றும் செட் ஆகவில்லை. திரைப்படத்தின் முதல் பாதி, ஸ்டேரிங் வீல் பேலன்ஸ் இல்லாத ஒரு பழைய தண்ணி லாரி தள்ளாடுவது போல எதை நோக்கிப் பயணிக்கிறது என்றே தெரியாமல் தடம் புரண்டு நகர்கிறது.

அதேபோல், படத்தின் உண்மையான கிளைமாக்ஸ் காட்சியை சுந்தர் சி படங்களில் வருவது போல ஒரு கல்யாண மண்டபத்தில் ஒளிந்து விளையாடும் பாணியில் சொதப்பியுள்ளார். ஒரு மினிஸ்டர் லெவல் வீட்டுப் பெண்ணின் கல்யாணம், ஒட்டுமொத்தத் தமிழ்நாடே பார்த்துக் கொண்டிருக்கும் சூழலில், மிக எளிதாக நிறுத்தப்பட்டு காதலியைச் சேர்த்து வைப்பது போன்ற காட்சிகள் நம்பும்படியாக இல்லை.

முத்தாய்ப்பாக ரிசல்ட்

உணர்வற்ற திரைக்கதை மற்றும் லாஜிக் இல்லாத காட்சிகளால், இந்த ‘இதயம் முரளி’ ரசிகர்களின் இதயத்தை வெல்லத் தவறிவிட்டது. முரளியின் அசல் ‘இதயம்’ கொடுத்த காதலின் ஆழத்தையும், அந்த எமோஷனல் அதிர்வலையையும் தியேட்டரில் துளியும் கடத்த முடியாமல் இந்தத் திரைப்படம் தடுமாறி நிற்கிறது.

மார்க் 2.25/5

உடனடி செய்திகள்