தமிழ் குரல் / AI Voice
ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில், லெஜெண்ட் சரவணன் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள ‘லீடர்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 3-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இதையொட்டி சென்னையில் நடைபெற்ற இதன் பிரம்மாண்ட விழாவில் திரையுலக ஜாம்பவான்கள் பலரும் கலந்துகொண்டு சுவாரசியமான பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.

நிஜ வாழ்வின் ‘லீடர்’ – திரைப்பிரபலங்களின் புகழாரம்
-
கலைப்புலி எஸ். தாணு: “லெஜெண்ட் சரவணன் பல கதைகளைத் தன் மனதில் வைத்திருக்கிறார். அவர் என்னிடம் சொன்ன புரூஸ்லீயின் கதை மிகவும் வியப்பாக இருந்தது. அதற்காக அவர் சிக்ஸ் பேக் வைக்கும் அளவுக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்வேன் என்றார். அவரது உழைப்பு மிகப்பெரிய வெற்றியைத் தரும்,” எனப் பாராட்டினார்.
-
ஆர்.கே. செல்வமணி: 1988-ம் ஆண்டு சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரைச் சந்தித்த நினைவுகளைப் பகிர்ந்தார். “சாதாரண மக்களும் சட்டை வாங்க வேண்டும் என்பதற்காக 99 ரூபாய்க்குச் சட்டை விற்றவர்கள் அவர்கள். 100 ரூபாய் சட்டை வாங்குபவர்களுக்கும், லட்ச ரூபாய்க்குப் பொருள் வாங்குபவர்களுக்கும் அவர்கள் சமமான மரியாதை கொடுத்தார்கள். அந்தப் பண்புதான் இன்றும் அவர்களை உயரத்தில் வைத்துள்ளது,” என்றார்.
-
இயக்குநர் பாக்யராஜ்: “யாரைப் பற்றியும் கவலைப்படாமல், தனக்குச் சரியென்று பட்டதைத் தன்னம்பிக்கையுடன் செய்து முடிப்பவர் லெஜெண்ட் சரவணன். அந்தத் தைரியமே அவருக்குப் பெரிய பலம்,” என வாழ்த்தினார்.
படப்பிடிப்பு தளத்தில் நடந்த திக் திக் நிமிடங்கள்
படத்தின் ஆக்ஷன் காட்சிகள் குறித்துப் பேசிய பேபி இயல், படப்பிடிப்பில் நடந்த ஒரு விபத்து குறித்துக் குறிப்பிட்டார். “மழையில் லெஜெண்ட் அங்கிள் எங்களைக் காப்பாற்றுவது போன்ற காட்சி. அப்போது அவர் கால் இடறி விழுந்துவிட்டார். ஆனாலும் பேலன்ஸ் செய்து எங்களைக் கீழே விழாமல் காப்பாற்றினார். அந்த ஒரு நொடி எனக்கு ‘மினி ஹார்ட் அட்டாக்’ வந்தது போலிருந்தது. இவ்வளவு ரிஸ்க் எடுக்காதீர்கள் என்று அவரிடம் கேட்டுக் கொண்டேன்,” என்றார்.

தொழில்நுட்பக் கலைஞர்களின் அர்ப்பணிப்பு
-
இசையமைப்பாளர் ஜிப்ரான்: “துரை செந்தில்குமார் சாருடன் பணியாற்றியது ஒரு தெய்வீகமான அனுபவம். நான் ஒரு இசைக்குறிப்பை நினைக்கும் போதே அவர் அதைச் சரியாகக் கேட்பார். லெஜெண்ட் சரவணன் சார் ஒரு தயாரிப்பாளராக மட்டுமல்லாமல், முழுமையான அர்ப்பணிப்பு கொண்ட நடிகராகத் தன்னை நிரூபித்துள்ளார்,” என்றார்.
-
நடிகர் ஷாம்: “துரை செந்தில்குமார் ஒரு பொறுப்புணர்ச்சி மிக்க இயக்குநர். இந்தப் படத்தின் டப்பிங் போது, ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அவரே டப்பிங் பேசி வைத்திருந்தார். அந்தத் தெளிவு யாரிடமும் இருக்காது. லெஜெண்ட் சரவணனின் நகைச்சுவை உணர்வு மற்றும் வாழ்க்கையைப் பற்றிய அவரது தொலைநோக்கு பார்வை எனக்கு மிகவும் பிடித்திருந்தது,” என நெகிழ்ந்தார்.
வசூலில் புதிய சாதனை படைக்குமா?
நடிகர் விடிவி கணேஷ் பேசுகையில், “பணம் யாரிடமும் இருக்கலாம், ஆனால் நடிப்பு மீதான வெறி இருந்தால்தான் சாதிக்க முடியும். இந்தப் படம் கண்டிப்பாக 500 முதல் 600 கோடி ரூபாய் வசூலிக்கும். மற்ற மொழிகளிலும் வெற்றி பெற்றால் 1000 கோடி வசூலை எட்டும்,” என அதிரடியாகக் குறிப்பிட்டார்.
லெஜெண்ட் சரவணனின் உருக்கமான வேண்டுகோள்
விழாவின் இறுதியில் பேசிய லெஜெண்ட் சரவணன், உலகெங்கும் நிலவும் போர்ச் சூழல் குறித்துத் தனது கவலையைப் பகிர்ந்து கொண்டார். போர் நிறுத்தப்பட்டு மக்கள் மகிழ்ச்சியாக வாழ இறைவனைப் பிரார்த்திப்பதாகக் கூறினார்.
“கடவுள் எந்த உதவியையும் நேரடியாகச் செய்வது இல்லை, நல்ல மனிதர்கள் மூலமாகத்தான் எல்லாம் நடக்கும். நீங்கள் என்னை நம்புங்கள். இப்படம் ‘ஜெயிலர்’, ‘விக்ரம்’ போல மிகப்பெரிய வெற்றியைப் பெறும்,” என நம்பிக்கையுடன் விடைபெற்றார்.
