மினிமலிசத்தின் குறிக்கோளை அறிந்து கடைபிடிப்போமே!

மினிமலிசத்தின் குறிக்கோளை அறிந்து கடைபிடிப்போமே!

குறைந்த பட்சத் தேவைகளுடன் வாழ்தல் என்ற வகையிலான `மினிமலிசம்` எனப்படும் வாழ்வியலை, இப்போது ஐரோப்பா அமெரிக்கா போன்ற நாடுகளில் பரப்பி வருகிறார்கள்.உலக அளவில் நிறையப் பேரை இந்தக் கொள்கை கவர்ந்து வருகிறது. உண்மையில் இந்தச் சிந்தனை முதலில் தோன்றியது பாரத தேசத்தில்தான். இந்தக் கொள்கையின் அடிப்படையில் குடிலில் எளிய வாழ்க்கை வாழ்ந்த முனிவர்கள்தான் நம் முன்னோர். மினிமலிசக் கொள்கையின் அடிப்படை வேறேதும் அல்ல, காந்தியம்தான். ஒரு சிறிய பென்சிலைக் கூட அதன் இறுதிப் பயன்பாடு வரை உபயோகித்தால் இன்னொரு பென்சிலை அவசரமாக வாங்க வேண்டிய தேவை இராது என்பது காந்தியத் தத்துவம்.அந்தப் பென்சிலை அதன் இறுதிப் பயன்பாடு வரை உபயோகிப்பதே அதைத் தயாரித்தவர்களுக்கு நாம் செய்யும் நியாயம் என்பதும் காந்தியக் கருத்து. இதுவே மினிமலிசத்தின் குறிக்கோளும் கூட.

மினிமலிசம் என்பது,`ஒருவன் தனக்குத் தேவையான குறைந்தபட்சப் பொருட்களை மட்டும் தேவையான அளவில் வைத்துக்கொண்டு வாழுதல்` எனப் பொருள் படுகிறது. உதாரணமாக ஏழு ஆடைகள் இருந்தால் ஒரு வாரத்தைக் கழிக்கலாம். அதிகபட்சம் பதினான்கு ஆடைகள் இருந்தால் போதும். ஒவ்வொரு வார இறுதியிலும் ஏழு ஆடைகளைத் துவைத்து வைத்துக் கொண்டால் ஆடைப் பிரச்னையே இராது. இந்த அடிப்படை ஆடைகள் மட்டுமில்லாமல், பெரும் நிகழ்ச்சி களுக்குச் செல்ல ஒன்று அல்லது இரண்டு உயர்ந்த ரக ஆடைகளும் இரவைக் கழிக்க இரண்டு மிக சாதாரணமான ஆடைகளும் வைத்திருந்தால் போதுமானது.ஆனால் நம் வீட்டு அலமாரியைத் திறந்து பாருங்கள். ஒருமுறை மட்டுமே உடுத்திய எத்தனை ஆடைகள் அதில் குவிந்து கிடக்கின்றன! திருமணங்களில் மிகுந்த விலை கொடுத்து பெண்ணுக்கு எடுக்கப்படும் மிகப் பகட்டான சேலையையோ, மாப்பிள்ளைக்கு வரவேற்பு நிகழ்ச்சிக்கு எடுக்கப்படும் ஆடம்பரமான உடையையோ வாழ்நாளில் பெரும்பாலும் அதன் பிறகு அவர்கள் பயன்படுத்துவதே இல்லை!அல்லது பயன்படுத்தினாலும் மிகச் சொற்பத் தடவைகள் தான் பயன்படுத்துவார்கள்.

`உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்` என்கிறது தமிழ். நாம் வாழ்நாள் முழுதும் உடுத்தும் துணியின் முழக் கணக்கை எண்ணிப் பார்த்தால் தலைசுற்றும்! ஆடை களைக் குறைத்துக் கொண்டு அரைநிர்வாணப் பக்கிரியாகக் காட்சிதந்த மகாத்மாவும் ஒரே வேட்டியைத் தவிர வேறு வேட்டி இல்லாமலிருந்த பொதுவுடைமைத் தலைவர் ஜீவாவும் வாழ்ந்த தேசம் இது. ஆனால் இன்று ஆடை மோகம் மக்களை ஆட்டிப் படைக்கிறது.ஒரு பெல்ட், ஒரு ஜோடி செருப்பு, ஒரு ஜோடி ஷூ என்று வைத்துக் கொண்டால் போதுமே? இது போன்றவற்றை அளவுகடந்த எண்ணிக்கையில் வைத்திருப்பதால் என்ன பயன்? அவற்றைப் பராமரிப்பதும் கடினம். அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அவற்றை வைக்க இடம் கண்டுபிடிப்பதும் கடினம்.

திருமணங்களில் சீர் என்று பெரிய பெரிய பித்தளை அண்டாக்களையும் தவலைகளையும் பழைய சம்பிரதாயப்படிக் கொடுத்து விடுகிறார்கள்.திருமணங்களில் அவற்றையெல்லாம் அடுக்கி வைத்துக் காட்சிப் படுத்தி, இவ்வளவு சீர் கொடுத்தோம் என்று உறவினர்களிடம் பெருமையடித்துக் கொள்ள வேண்டுமே?இவற்றை இப்போது எந்த வீட்டில் பயன்படுத்துகிறார்கள்? இவற்றை வைக்க யார் வீட்டில் இடமிருக்கிறது? முன்பு இல்லத்திலேயே குடும்பத்தின் எல்லா மங்கல நிகழ்வுகளும் நிகழ்ந்ததால், விருந்தினர்களை உபசரிக்க இத்தகைய சமையல் பாத்திரங்கள் தேவைப்பட்டன. அப்போது வீடும் பெரிதாக இருந்தது. இன்று, இல்லத்தின் எல்லா மங்கல நிகழ்வுகளும் மண்டபங்களில் தானே நடக்கின்றன? சமையல் செய்து விருந்து படைப்பதும் அதற்கான பாத்திரங்களைச் சேமித்து வைத்துக் கொள்வதும் மண்டபத்தின் அல்லது சமையல் கலைஞரின் பொறுப்பான பின்னர் நம் வீட்டில் அண்டாவையும் தவலையையும் வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறோம்? இடத்தை அடைத்துக் கொண்டு பரணில் குடியிருக்கும் இவற்றைக் கழித்துக் கட்டாமல் எத்தனை காலம் பராமரிக்கப் போகிறோம்?

முன்பெல்லாம் கடைகள் மிகவும் குறைவு. அவையும் வீட்டை விட்டு வெகு தொலைவில் இருக்கும். அதனால் அவசரத்திற்குத் தேவைப்படுமே என்று நிறைய மளிகைப் பொருட்களை வாங்கிச் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருந்தது. இப்போதோ வீடுகளின் அருகே கடைகள் என்பது கூட அல்ல, கடைகளின் நடுவேதான் வீடுகளே இருக்கின்றன.எப்போது வேண்டுமானாலும் அருகேயுள்ள கடைகளில் தேவையான மளிகைப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்ற நிலை இருக்கும்போது ஏராளமான பொருட்களை வாங்கிச் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன? `இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம், தள்ளுபடி விற்பனை` போன்ற வியாபாரக் கவர்ச்சிகளில் மயங்கி வீடு முழுவதும் தேவைக்குமேல் பொருட்களைக் குவித்துக்கொண்டு வாழ்வதில் என்ன கிடைக்கிறது நமக்கு?

 

இந்தப் பண்பு, எவ்வளவு சம்பாதித்தாலும் போதாது என்ற வகையில் பொருட்செலவை ஏற்படுத்துகிறது என்பதும் உண்மை. மனத்தில் பொருள் சேகரிக்கத் தோன்றும் ஆசையை அடக்கிக் கொண்டு, தேவையில்லாத பொருட்களைத் துறந்துவிட்டால் வாழ்க்கை எளிதாகும்.`யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்` என்று வள்ளுவர் அன்றே இதைக் கண்டுபிடித்துச் சொல்லிவிட்டார்.எது தேவையில்லாதது என்று எப்படிக் கண்டுபிடிப்பது என்பதை அறிய ஒரு வழிமுறை உண்டு.

உங்கள் வீட்டில் இருக்கும் அனைத்துப் பொருட்களையும் ஓர் அறையில் அடைத்து விடுங்கள். பிறகு மறுநாளிலிருந்து உங்கள் இயல்பான வாழ்க்கையை வாழத் தொடங்குங்கள். உதாரணமாக காலையில் விழித்ததும் பல் துலக்கத் தேவையான பற்பசை பிரஷ் போன்றவற்றை அந்த அறையிலிருந்து எடுத்துப் பயன்படுத்துங்கள். அதைப்போன்று உங்களுக்குத் தேவையானதை ஒன்றன் பின் ஒன்றாக எடுத்துப் பயன்படுத்தத் தொடங்குங்கள்.இவ்விதம் தேவைக்கு ஏற்ற பொருளை மட்டும் அறைக்குள்ளிருந்து வெளியே எடுத்துப் பயன்படுத்தி விட்டு, எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைத்துக் கொள்ளுங்கள்.சமைக்கத் தொடங்கும்போது குக்கர் உள்ளிட்ட பாத்திரங்களை எடுத்தல், குளிக்கப் போகும்போது உடை, துண்டு போன்றவற்றை எடுத்தல், இரவு உறங்கப் போகும் போது த¨லயணை, போர்வை போன்றவற்றை எடுத்தல் இப்படி ஒரு மாதம் அந்த அறையிலிருந்து பொருட்களை எடுத்து வாழுங்கள்.

அப்படி அறையிலிருந்து எடுத்த பொருட்களை உங்கள் இல்லத்தில் எங்கெங்கே வைக்க வேண்டுமோ அங்கங்கே வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மாதம் முடிந்த பிறகு அடுத்த மாதம் பாருங்கள். ஏற்கெனவே நீங்கள் வெளியில் எடுத்து வைத்த பொருட்களைத்தான் மறுபடி மறுபடி பயன்படுத்திக் கொண்டிருப்பீர்கள்.அது சொல்லும் உண்மை என்ன? அப்படி நீங்கள் வெளியே எடுத்த பொருட்கள் மட்டுமே உங்கள் வாழ்வியலுக்குப் போதுமானது.மீதியெல்லாம் அநாவசியச் சுமை. ஒரு மாதம் எடுத்த பிறகும் அந்த அறையில் மீதமிருக்கும் பொருட்களில் தொண்ணூறு சதவிகிதப் பொருட்கள் உங்களுக்குத் தேவையில்லாத உபரிப் பொருட்களே. இப்படியாக நாம் இதுவரை சேர்த்த பொருட்களில் தேவையில்லாததைக் கழித்து விட்டால், கூடுதல் நிம்மதியோடு வாழலாம் என்று பரிந்துரை செய்கிறது `மினிமலிசம்` என்கிற இன்றைக்குப் பெரிதும் தேவைப்படுகிற அற்புதமான வாழ்வியல் கொள்கை.

நம் பெற்றோர் நமக்குக் கடிதம் எழுதும்போது, பெரிதும் அஞ்சலட்டையைத் தானே பயன்படுத்தினார்கள்? அதிகச் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளத் தேவை இருந்தால் தானே இன்லண்ட் உறையை உபயோகித்தார்கள்? அவர்களின் பண்பு நலன்கள் நம்மை விட்டு ஏன் விலகிவிட்டன? உணவு உடை உறையுள் என்ற மூன்றிலும் அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்துகொண்டால் போதுமானது. மீதி அனைத்தும் ஆடம்பரமே.எந்த ஒரு பொருள்பற்றும் இல்லாத, ஏன் ஆடை என்னும் அடிப்படைத் தேவை பற்றிய பற்றுக் கூட இல்லாத தொடக்க நிலையே மனித வாழ்வின் ஆதி நிலை. நம் முன்னோருக்கும் முன்னோர், வாழ்ந்த விதம் எளிமையின் உச்சம். அந்நிலையை இன்று நாம் அடைய இயலாதுதான். ஆனால் அத்தகைய முன்னோரின் வழிவந்த நாம், இத்தனை பயனற்ற பொருட்களைச் சுமந்து கொண்டு வாழ்க்கை நடத்துவது சரிதானா?

நிர்பந்தத்தின் காரணமாக மிக எளிய வசதிகளுடன் நிறைவாக வாழும் உயர்ந்த மனிதர்களை நாம் ஏழை என்கிறோம். உரிய கெளரவத்தை நாம் அவர்களுக்குத் தருவதும் இல்லை. அளவான பொருட்களை மட்டும் வைத்துக்கொண்டு வாழ்வோர் ஏழைகள் அல்லர். அவர்களே மிகச் சரியாக வாழ்க்கை நடத்துகிறவர்கள்.இதை அவர்களே கூட உணர்ந்து பெருமிதம் கொள்வதில்லை. உண்மையில் இந்த உலகில் உரிமையுடன் வாழத் தகுதி படைத்தவர்கள் அத்தகையவர்களே. தேவையான பொருட்களைக் கட்டாயம் வாங்குவோம். அதில் கஞ்சத்தனம் அவசியமில்லை. ஆனால் தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்காதிருப்போம். அந்தக் கோட்பாட்டில் கறாராக இருப்போம்.`குறைந்த பொருட்கள், அதிக செளகரியம்` என்ற கோட்பாடு, ரயில் பயணத்தை மட்டுமல்ல, வாழ்க்கைப் பயணத்தையும் எளிதாகவும் நிம்மதி நிறைந்ததாகவும் மாற்றுகிறது என்பதைப் புரிந்துகொள்வோம்.

திருப்பூர் கிருஷ்ணன்

error: Content is protected !!