ஒரு புதிய பயணத்திற்கான தேடலோடு இந்த பயணிகளை பின்தொடர்கிறேன்!

நாம் வாழவேண்டும் என்று ஒரு கனவு வாழ்வு இருக்குமில்லையா, அதை இன்னொருவர் வாழ்வதை பார்க்கும்போது நமக்கு நிச்சயம் பொறாமை வரத்தான் செய்யும். அதுதான் இயற்கை. ஒருவேளை அப்படி வராவிட்டால் அந்த கனவில் நாம் அத்தனை தீவிரமாக இல்லை என்று எடுத்துக்கொள்ளலாம். பொதுவாக மனிதகுலமே பொறாமையினால் முன்னேற்றம் கண்டவர்கள்தான். இருந்தாலும் வெளிக்காட்டி கொள்ளமாட்டோம். பெருந்தன்மையாக நடிப்பதே நாகரிகம். ஆனால் மனிதர்களை மேலும் மேலும் நாகரிமானவர்களாக முன்னேற்றியதில் பொறாமைக்கு பெரும்பங்குண்டு. அதுதான் அவர்களை மேலும் மேலும் உழைக்கத்தூண்டுகிற பொறி!
அப்படி சமீபத்தில் எனக்கு கடுமையாக பொறாமை பொறாமையாக வந்துகொண்டே இருப்பது பேக்பேக்கர் குமார் மற்றும் தமிழ் ட்ரெக்கர் இருவர் மீதுதான். டியூபர் களான பேக்பேக்கர் குமாரும் தமிழ்ட்ரெக்கர் புவனியும் உலகின் மூலை முடுக்கெல்லாம் சுற்றி வந்து வீடியோ போடுகிற ஆட்கள். இதுவரை இவர்களை பின்தொடராதவர்கள் இப்போதே பண்ணிவிடுங்கள். ஏற்கெனவே பின்தொடர்வோருக்கு ச்சியர்ஸ். இவர்கள் இருவரின் வீடியோக்களையும் பாருங்கள், ஒரு பிரமாதமான பயண அனுபவம் நிச்சயமாக உங்களுக்கும் கிடைக்கும். யூடியூபில் பேர் அடித்தாலே இணைப்பு கிடைக்கும்.
இவர்கள் இருவரும் போகாத நாடில்லை சந்திக்காத மக்களில்லை. அத்தனை அனுபவங்கள். அண்மை நாட்களில் இவர்களுடைய வீடியோக்களில்தான் விடிகிறது. இந்த இருவரில் தமிழ் ட்ரெக்கர் சீனியர் என்பதால் அவருடைய வீடியோக்களில் ஒரு நேர்த்தி இருக்கும். ஒரு திட்டமிடலும் ஒழுங்கும் இருக்கும். ஆனால் பேக்பேக்கர் குமாரின் வீடியோக்களில் எல்லாமே அப்படி அப்படியே ராவாக இருக்கும். ஆனால் அதற்கும் ஓர் அழகுண்டு. அதுவே அவருடைய பாணியாகவும் இப்போது மாறிவிட்டது.இருவருமே ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை. இருவருக்கும் இடையே ஒரு தீவிரமான போட்டியும் இருந்து கொண்டே இருக்கும். ஒருவரை ஒருவர் முந்துவதற்கான மெனக்கெடலை நிறையவே பார்க்கவும் உணரவும் இயலும்.
தமிழ்ட்ரெக்கர் மிகவும் ஆபத்தான இடங்களுக்கு சென்று அங்கிருக்கிற சூழலில் வாழ்ந்து காட்டுகிறார். உலகின் மிகவும் குளிரான பகுதிக்கு போய் அங்கிருக்கிற குளத்தில் குளிக்கிறார். ஆப்கானிஸ்தானுக்குள் சுற்றி கைதாகி இருகிறார். பேக்பேக்கர் குமார் ஆர்டிக் தொடங்கி அண்டார்டிகா வரை வடக்கு தெற்கு கிழக்கு மேற்கு என நாலாபக்கமும் பயணித்துக்கொண்டிருக்கிறார். அவருடைய அண்டார்டிகா வீடியோ போல சில வீடியோக்களை ரிப்பீட்டில் அடிக்கடி பார்ப்பேன். இதுவரை 60 நாடுகளுக்கு போய்விட்டார். இவர்களிடம் மிகவும் பிடித்தது அதிகம் செலவு செய்யாமல் இருக்கிற கொஞ்சம் பணத்தில் நிறைய பயணிப்பவர்கள். எல்லாமே மிகச்சிறிய பட்ஜெட்டுக்குள் செய்கிறவர்கள். அதை எப்படி செய்கிறார்கள் என்பதையும் ப்ராக்டிக்கலாக செய்து காட்டுகிறார்கள்.
இவர்களுடைய காணொலிகள், அதில் அவர் பேசுகிற விஷயங்கள் எல்லாம் தாண்டி அவர் இத்தனை பயணிப்பதை பார்க்கவே மட்டற்ற மகிழ்ச்சியாக இருக்கும். தென்னமெரிக்க நாடுகளில் பயணித்த வீடியோக்கள் அவ்வளவு பிடித்திருந்தது. க்யூபாவில் யாரோ ஒருவருடைய வீட்டுக்கு போய் சிக்கன் சமைத்து கொடுத்துக்கொண்டிருந்தார் குமார். அண்டார்டிகா பயண வீடியோக்களை நாலைந்து முறை பார்த்திருக்கிறேன். அண்டார்டிகா என்பது எனக்கெல்லாம் பதினைந்து ஆண்டுகால கனவுகளில் ஒன்று. அவருக்கும்தான். ஆனால் அதை அவர் எப்படி சாத்தியப்படுத்தினார் என்பதே ஒரு விறுவிறுப்பான நாவலுக்கான கதை. 10 லட்ச ரூபாய்க்கு மேல் செலவாகிற பயணத்தை 6 லட்சத்தில் சாத்தியப்படுத்தி சென்று வந்தார்.
பேக்பேக்கர் குமாருக்கும் எனக்கும் கிட்டத்தட்ட ஒரே வயதுதான். இந்த வயதில் தன்னுடைய நல்ல சௌகர்யமான வேலையை ரிசைன் பண்ணிவிட்டு முழுநேர பயணியாக யூடியூபராக சுற்றிக்கொண்டிருக்கிறார். அதுதான் என்னுடைய பொறாமைக்கு முக்கியமான காரணமாக இருக்கமுடியும். தமிழ்ட்ரெக்கரும் ஒரு முழுநேர பயணியாக இருக்கிறார். இருவருக்குமே யூடியூபராக இருப்பதால் அதன்வழி ஒரளவு வருமானம் வருவதால் அதை முதலீடாக்கி மேலும் மேலும் பயணிக்க முடிகிறது. எழுத்துத்துறையில் இருப்பவர்களுக்கு இது எக்காலத்திலும் சாத்தியமாகாது. ஒரு பயணம் போய்விட்டு வந்து வார இதழ்களில் கட்டுரை எழுதலாம், புத்தகம் போடலாம், அதில் வருகிற காசுக்கு ஆட்டோவில் அமைந்தகரை கூட போகமுடியாது.
இப்போது இந்த இரண்டு யூடியூபர்களும் தனித்தனியாக ஒரே நேரத்தில் பசுபிக் பெருங்கடலில் இருக்கிற குட்டிகுட்டி தீவுகளில் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஒன்றரை லட்சம் செலவில் 45 நாட்கள் ஏகப்பட்ட தீவுகள் என பேக்பேக்கர் குமாரின் பயணம் தொடர்கிறது. நிச்சயமாக ஆச்சர்யப்படுத்துக்கிறார்கள். இவர்களுடைய ஒவ்வொரு வீடியோவுக்கும் பின்னாலும் அவ்வளவு உழைப்பும், அர்பணிப்பும் இருக்கும். தன்னுடைய பார்வையாளர்களும் குறைந்த செலவில் இந்த இடங்களுக்கு பயணிக்க வேண்டும் அவர்களும் இந்த இடங்களுக்கு வரவேண்டும் என்கிற அன்பு வெளிப்படும். அப்படி வருகிறவர்கள் பணத்தை எப்படி மிச்சப்படுத்தலாம் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்கிற அக்கறையோடு பேசுகிறார்கள். இதில் பேக்பேக்கர் குமார் தன்னுடைய பார்வையாளர்கள் ஏமாற்றப்பட்டுவிடக்கூடாது என எந்த விளம்பரமும் போடுவதில்லை.
சமீபத்தில் நான் மலேசியாவுக்கு சென்றபோது இந்த யூடியூபர்களை போல நானும் ஒரு கேமராவோடு அவர்களைப் போலவே வீடியோ எடுக்க முயற்சி செய்தேன். யூடியூபர் ஆவது எவ்வளவு கடினம் அதிலும் ட்ராவல் வ்லாகராக ஆவது எத்தனை கடினம் என்பதை உணர்ந்தேன். இந்த வேலைக்கு எவ்வளவு கவனமும், நினைவாற்றலும், சமயோசிதமும் அவசியப்படுகிறது என்பது புரிந்தது. செல்லுமிடமெல்லாம் தனியாக கேமராவைப் பார்த்து லூசுபோலப் பேசிக்கொண்டே நடக்க வேண்டும், செல்லும் இடங்கள், மக்கள் பற்றி முன்பே ஒரளவு தகவல்கள் தெரிந்து வைத்திருக்கவேண்டும். அதை பிழையின்றி சொல்லவேண்டும். தவறான தகவல்கள் கொடுத்துவிடக்கூடாது. பார்வையாளர்களுக்கு போர் அடித்துவிடாத படி நல்ல கன்டென்ட் படம்பிடிக்க வேண்டும் என எத்தனையோ சவால்கள். அதை நேரடியாக முயற்சி செய்து பார்க்கும்போதுதான் இவர்களுடைய உழைப்பை உணரமுடிகிறது.
அதிலும் பேசிக்கொண்டே நடுரோட்டில் நடப்பது, மறக்காமல் திக்காமல் திணறாமல் பேசுவது, கேமராவை நம் முகத்தில் மட்டும் வைக்காமல் எதை காட்ட வேண்டுமோ அதை படம்பிடிப்பது, அங்கே இருக்கிற லோக்கல் மக்களோடு உரையாடுவது என நிச்சயமாக பெரிய வேலையும் ஸ்கில்லும் தேவைப்படுகிறதுதான். செய்துபார்க்கும்போதுதான் இது எத்தனை கடினமென மலைக்கவைக்கிறது. கேமராவை வேகமாக மூவ் பண்ணக்கூடாது, முகத்துக்கு நேராக கேமராவை எங்கே வைக்க வேண்டும், இருட்டில் எப்படி படம் பிடிக்க வேண்டும் என ஏராளமாக கற்றுக்கொள்ள இருக்கிறது.
வீடியோ பதிவு தனி வேலை என்றால், எடுத்த வீடியோக்களை எடிட் பண்ணி மக்கள் ரசிக்கும்படி பதிவேற்ற வேண்டும். அதற்கு தனித்திறமை வேண்டும். நான் எடுத்த வீடியோக்களை நானே எடிட் செய்ய முயற்சி செய்கிறேன். ஆனால் முடியவில்லை. யூடியூபுக்கு வீடியோ எடிட்டிங் பண்ணுவது தனி ஸ்கில். இப்போதைக்கு யாராவது நல்ல எடிட்டர்கள் உதவி செய்தால் நன்றாக இருக்கும். (தமிழ் ட்ரெக்கர் தனியாக அலுவலகம் வைத்து இதை ஒருங்கிணைக்கிறார். பேக்பேக்கர் குமாரின் மனைவியே எடிட் செய்கிறார்.)
எனக்கு இப்படி பயணிக்கும் இடங்களை பற்றி எழுதவே விருப்பம். வீடியோ எடுப்பதை விட அது எளிதானதுதான். ஆனால் எழுதினால் லைக்ஸ் மட்டும்தான் கிடைக்கும். ஆகவே யூடியூப் சேனல் தொடங்கி இவர்களைப்போல செய்துபார்க்கும் ஆர்வம் வருகிறது. ஆனால் தொழில்நுட்ப அறிவும் உதவிகளும் நிச்சயம் தேவைப்படுகிறது. புதிதாக ஒரு சேனல் தொடங்கி அதற்கு சப்ஸ்க்ரைபர் தேற்றி அதற்கு பிறகு யூடியூபில் வருமானம் வருவதற்கு எல்லாம் ஒன்றிரண்டு ஆண்டுகள் ஆகிவிடும். அதுவரை தாக்கு பிடிக்க வேண்டும். பல யோசனைகள் உண்டு. ஏராளமான தயக்கங்கள் இருக்கிறது. பயம் இருக்கிறது. செய்யாமல் போகவே அதிக வாய்ப்புள்ளது. பிழைப்பையும் பார்க்க வேண்டுமே. ஆனால் இப்போதைக்கு ஒரு புதிய பயணத்திற்கான தேடலோடு இந்த பயணிகளை பின்தொடர்கிறேன்.