இன்று பல வீடுகளில் ஒரு அறிவிக்கப்படாத ‘அவசர நிலை’ பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. அடுப்பில் கொதிக்கும் சாம்பாரின் மணம் மறைந்து, மிக்சியில் ஓடும் தேங்காய்ச் சட்னிக்கும், மிளகாய்ப்பொடிக்கும் இல்லத்தரசிகள் மாறிவிட்டனர். “மறு உத்தரவு வரும்வரை சமையல் எரிவாயுவைச் சிக்கனமாகப் பயன்படுத்துங்கள்” என்பதே அந்த உத்தரவு. இது ஏதோ ஒரு வீட்டின் கதையல்ல, சர்வதேச அரசியல் சதுரங்க ஆட்டத்தால் இன்று இந்தியாவின் ஒவ்வொரு அடுப்பங்கரையிலும் எதிரொலிக்கும் அபாயச் சங்கு.
டிரம்ப் சட்டையும்… மோடிஜியின் ராஜதந்திரமும்!
நமது பிரதமர் மோடிஜி என்பதில் ஐயமில்லை. ஆனால், அவர் அணிந்திருக்கும் சட்டை மட்டும் டிரம்ப்புடையதாகத் தெரிகிறது. முன்பு அமெரிக்காவின் நெருக்குதலால் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதைக் குறைத்தோம். இப்போது உக்ரைன் – ரஷ்யா போர்ச் சூழலில், “சரி, போனால் போகிறது… இன்னும் முப்பது நாட்களுக்கு மட்டும் ரஷ்யாவிடம் வாங்கிக் கொள்ளுங்கள்” என்று அமெரிக்கா நமக்கு வழங்கியிருக்கும் ‘பெருந்தன்மை’ கலந்த அனுமதி, இந்தியாவின் இறையாண்மையை உரசிப் பார்க்கிறது.

இதை ‘மோடிஜியின் ராஜதந்திரம்’ என்று ஒரு தரப்பு கொண்டாடினாலும், யதார்த்தம் கசப்பானது. “முன்பு இருந்த நட்புக்காகச் சலுகை விலையில் தந்தோம். இப்போது உங்கள் பாதை மாறிவிட்டது. இனி சந்தை விலைதான்” என்று ரஷ்யா கறாராகக் கைவிரித்துவிட்டது. இதில் நஷ்டம் என்னவோ இந்தியாவிற்குத்தான், டிரம்பிற்கு அல்ல.
மூடப்படும் ஹோட்டல்கள்: வேலையிழக்கும் தொழிலாளர்கள்!
எரிவாயு தட்டுப்பாடு வீடுகளைத் தாண்டி வீதிக்கும் வந்துவிட்டது. தமிழகத்தில் எரிவாயு கிடைக்காமல் ஹோட்டல்கள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருகின்றன. இதனால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறார்கள். தேசபக்தி என்ற ஒற்றை மந்திரத்தை மட்டுமே நம்பியிருக்கும் மத்திய அரசு, அடித்தட்டு மக்களின் இந்த வயிற்றுப் பசியைப் போக்குமா என்பதுதான் இன்றைய பெரும் கேள்வி.
அரசியல் கூத்துகளும்… நெத்தியடி கேள்விகளும்!
இந்தச் சூழலில், பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸின் கேள்வி மட்டும் சற்றே விசித்திரமாக இருக்கிறது. “உணவகங்கள் மூடப்பட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும்; சமையல் எரிவாயுத் தட்டுப்பாட்டைப் போக்க திமுக அரசின் திட்டம் என்ன?” என்று தமிழக முதல்வர் ஸ்டாலினைப் பார்த்துக் கேட்டிருக்கிறார்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பெட்ரோலிய அமைச்சகத்தின் குறையை மாநில அரசிடம் கேட்பதைக் கண்டு, “நான் எப்போது பிரதமரானேன்?” என்று ஸ்டாலின் திகைத்துப் போயிருக்கிறாராம். ஒருவேளை, தான் எங்கே கேள்வி கேட்டு ஸ்டாலினை மேலும் கலங்கடித்துவிடுவோமோ என்று பயந்துதான் எடப்பாடி பழனிசாமி மௌனமாக இருக்கிறாரோ என்னவோ!
தேவை தீர்வு, நையாண்டி அல்ல!
சர்வதேச அரசியலில் இந்தியா எடுக்கும் முடிவுகள் சாமானியனின் சமையல் பாத்திரத்தைப் பாதிக்கக் கூடாது. ரஷ்யாவின் நட்பை இழந்து, அமெரிக்காவின் தாளத்திற்கு ஆடுவதால் ஏற்படும் விலைவாசி உயர்வை இந்தியக் குடும்பங்களால் தாங்க முடியாது. எரிவாயு சிக்கனம் என்பது இல்லத்தரசிகளின் கட்டாயமாக மாறாமல், அரசின் கடமையாக மாற வேண்டும்.
செ, இளங்கோவன்

