`கிங் ஆஃப் கொத்தா’- விமர்சனம்!

`கிங் ஆஃப் கொத்தா’- விமர்சனம்!

மோலிவுட் சேட்டன்களுக்கு நம் கோலிவுட் , டோலிவுட் படங்களை பார்த்த பாதிப்பு வந்துவிட்டது போலும். புதுமையான கதை களத்தை கவனமாக தேர்ந்தெடுப்பவர்கள் வழக்கமான கேங்ஸ்டர் கதையையே எந்த வித சுவாரசியமும் இல்லாமல் எடுத்து தந்து கடுப்பேற்றி விட்டார்கள். அதிலும் .காட்சிக்கு காட்சி யாரையாவது வெட்டிக்கொள்கிறார்கள் அல்லது குத்தி கொல்கிறார்கள் சர்வம் ரத்த மயம். கட்டடற்ற வன்முறை பல இடங்களில் முகம் சுழிக்க வைக்கிறது. ஹீரோ துல்கர் சல்மானுக்கு படம் முழுவதும் தரும் பில்டப்கள் சிரிப்பை வரவைப்பதுதான் சோகம். !

அதாவது கதை 96ல் துவங்குகிறது. கேரளாவில் கொத்தா என்ற பகுதியில் மருத்துவ பயன்பாட்டிற்காக அபின் விளைவிக்க விவசாயிகளுக்கு அனுமதி அளித்திருக்கிறது. ஆனால் அரசாங்கத்திற்கு ஒரு சிறு அளவை மட்டுமே உற்பத்தி செய்துவிட்டு கிராமத்தில் இருக்கும் மொத்த விவசாயிகளையும் தான் சொந்தமாக வியாபாரம் செய்ய அபின் விளைவிக்க வைத்து தனி ராஜாங்கம் நடத்துகிறார் ரவிடி ஷபீர்.. . அதே ஊருக்கு வரும் புதிய போலீஸ் ஆபிசர் பிரசன்னா, ஷபீரின் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்து, அவரைப் பற்றி விசாரிக்கிறார். அப்போது, ஷபீருக்கு முன்பு கொத்தாவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் துல்கர் சல்மான் என்றும், அவரது நெருங்கிய நண்பர் தான் ஷபீர் என்றும் தெரிய வருகிறது. அதே சமயம், தன் வாழ்க்கையில் நடந்த சில கசப்பான சம்பவங்களால் கொத்தாவை விட்டு துல்கர் சல்மான் வெளியேற, அதன் பிறகு ஷபீர் கொத்தாவை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அங்கு அட்டூழியம் செய்வதையும் தெரிந்துக்கொள்ளும் பிரசன்னா, ஷபீரை அழிக்க துல்கர் சல்மானை மீண்டும் கொத்தாவுக்கு வரவைக்க திட்டமிடுகிறார். அதன்படி, துல்கர் சல்மான் மருபடியும் கொத்தாவுக்கு வந்த சூழலில்,கொத்தா யாருக்கு சொந்தமானது? என்பதை ஏகப்பட்ட மசாலாத்தனத்தோடும் அடி தடியோடும் சொல்வது தான் ‘கிங் ஆஃப் கொத்தா’கதை..

கதைக்கு முக்கியத்துவம் தந்து நடிக்கும் ஹீரோக்களில் ஒருவர் துல்கர். ஆனால் இந்த கொத்தையில் கோட்டை விட்டு விட்டதென்னவோ நிஜ,ம்.. நடிப்பை பொறுத்தவரையில் எல்லோருமே பெட்டராகவே கொடுத்திருக்கிறார்கள், துல்கர் சல்மான் ஒரு கேங்ஸ்டராக மிரட்டவில்லை என்றாலும் ஒரு அடாவடி சாக்லேட் பாயாக ரசிக்க வைக்கிறார். முதல் பாதியில் கொத்தா ராஜுவாக சில சண்டைக்காட்சிகளில் மெனக்கெட்டிருப்பர், இரண்டாம் பாதியில் ராஜு மதராஸியாக வந்து ஸ்கோர் செய்ய முயல்கிறார்.கண்ணன் பாய் என்ற கேரக்டரில் நடித்திருக்கும் ஷபீர் அடடே சொல்ல வைத்து விடுகிறார்.,

செம்பன் வினோத் ஜோஸ், பில்டப்புடன் அறிமுகமானாலும் ஒரு சில காட்சிகளுக்குப் பிறகு காணாமல் போய்விடுகிறார். அவருடைய வேடமும் மிரட்டலாக அல்லாமல் காமெடிக்கானதாக பயன்படுத்தப்பட்டுள்ளது. நியாயமான போலீஸ் ஆபீசராக நடித்திருக்கும் பிரசன்னாவின் அறிமுகம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும், பிறகு டம்மி பீஸாகி விடுகிறார்.துல்கரின் நண்பராகவும் போலீஸ் ஆபீசராகவும் வரும் கோகுல் சுரேஷ், நாயகனின் கதையை சொல்ல மட்டுமே பயன்பட்டிருக்கிறார்.துல்கர் சல்மானின் தந்தையாக நடித்திருக்கும் ஷம்மி திலகன், சில காட்சிகளில் வந்தாலும் மாஸ் காட்டியிருக்கிறார்.

கேமராமேன் நிமிஷ் ரவி நைட் எஃபெக்ட் காட்சிகளையும், சண்டைக்காட்சிகளையும் ரசிக்கும்படி படமாக்கியிருக்கிறார். ஆனால், கொத்தா என்ற ஊர் மற்றும் அங்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் மஞ்சள் லைட்கள் எரிச்சலைத் தருகிறது. .ஜேக்ஸ் பிஜோயின் இசையில் கலாபக்காரா பாடல் தூள்ளலாக இருக்கிறது. படத்தின் பின்னணி இசையும் பரபரப்பைக் கூட்டுகிறது. ஆனால் இதற்கு முன்பு வேறு படங்களில் கேட்டது போன்ற எண்ணமும் எழுகிறது.

ஆனால் ஆரம்ப பேராவில் சொன்னது போல் இது ஒரு வழக்கமான கேங்க்ஸ்டர் ட்ராமா மட்டுமே., ஒரு அதிரடி கதைக்குத் தேவையான போதிய ஆழமும், அலசலும் இல்லை. முதன்மைக் கதாபாத்திரங்களான ராஜூ – கண்ணன் இருவருக்குமான கெமிஸ்ட்ரி கூட மேலோட்டமாக இருப்பதாலும்
ரவுடி சாம்ராஜ்யம் தொடர்பான காட்சிகள் முழுமையாக வடிவமைக்கப்படாதது படத்திற்கு தொய்வை கொடுப்பதோடு, மூன்று மணி நேரம் கடந்த நிலையில் “இந்த படம் எப்போடா முடியும்” என்று வாய் விட்டு கேட்க வைத்து விடுகிறது.

மொத்தத்தில் கிங் ஆஃப் கொத்தா – சொதப்பல்

மார்க் 2/5

error: Content is protected !!