கே.ஜி.எஃப் சாப்டர் டூ – விமர்சனம்!

கே.ஜி.எஃப் சாப்டர் டூ – விமர்சனம்!

கே.ஜி.எஃப் முதல் பாகத்தில் தங்க சுரங்கத்தை தன் வசம் வைத்திருந்த கருடனை கொலை செய்து கே.ஜி.எஃப்- யை யஷ் கைப்பற்றினார். அதன் தொடர்ச்சியாக 2ஆம் பாகம் தொடர்கிறது. கே.ஜி.எஃப் பில் வாழ்ந்து வரும் மக்களுக்கு நல்லது செய்து தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து வருகிறார் யஷ். கே.ஜி.எஃப்-பை பிடிக்க யஷ்க்கு முன்னால் ஆசைப்பட்டு வந்தவர்கள், யஷை கொலை செய்ய திட்டம் போடுகிறார்கள். அதே சமயம் இறந்துவிட்டதாக கருதப்பட்ட சஞ்சய் தத், கே.ஜி.எஃப்.யை கைப்பற்ற தன் படைகளுடன் வருகிறார். இறுதியில் எதிரிகளை எதிர்த்து யஷ், கே.ஜி.எஃப்யை தக்க வைத்துக் கொண்டாரா? சஞ்சய் தத்தின் நிலைமை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

கன்னட சினிமா நாயகனாக இருந்தாலும் ரியல் பான் இந்தியனாகி ‘சலாம் ராக்கி பாய்’ என மற்ற மொழி ரசிகர்களும் அவரை உச்சி முகர்ந்து கொண்டாடுகிறார்கள். நீளமான தாடியும், ஆண்மை புடைக்கும் மேனியுமாக ரசிகர்களை ஈர்க்கிறார். கிடைத்த காதலில் கரைவதும், களத்தில் வெடிப்பதுமாக தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் யஷ்-திரையில் வரும் போதெல்லாம் கைத் தட்ட வேண்டிய உணர்வை அளிக்கிறார்.. நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீநிதி ஷெட்டி அழகான தேவதையாக வந்து ரசிக்க வைக்கிறார்.

சஞ்சய் தத் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவருடைய கெட்டப்பும் பார்வையும் மிரட்டல். அரசியல் தலைவராகவும் ரவினா டாண்டன் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதியும்படி நடித்துள்ளார் நடிகர் பிரகாஷ்ராஜ். சென்ற பாகத்தில் கேஜிஎப் கதையை சொல்லும் நபரின் மகனாக நடித்திருக்கும் இவர் தனக்கு கொடுக்கப்பட்ட ஸ்பேசில் சிறப்பாக ஸ்கோர் செய்துள்ளார். அதேபோல் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கும் ஈஸ்வரி ராவ், சரண் ஆகியோர் கொடுத்த வேலையை நிறைவாக செய்து மனதில் பதிகின்றனர்.

டெக்னிக்கல் டீம்தான் படத்திற்கான உயிரோட்டமே, ஹாலிவுட் தரத்தில் இப்படம் இருக்க புவன் கவுடாவின் கேம்ரா, ஆர்ட் டைரக்டரின் பிரமிப்பூட்டும் செட் வொர்க், விறுவிறுப்பான எடிட்டிங், அதற்கேற்ற பின்னணி இசை, பரபரக்கும் ஆக்ஷன் காட்சிகள், சவுண்ட் டிசைன் என அனைத்துமே இப்படத்தில் மிக நிறைவாக வந்துள்ளது. ஒரு சாதாரண கதையை எடுத்துக்கொண்டு இவர்களின் துணையுடன் உலகத்தரத்தில் ஒரு படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் பிரஷாந்த் நீல். அதிலும் ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என இந்திய சினிமாவுக்கே கற்றுக்கொடுத்து ட்ரெண்ட் செட் செய்து காட்டியுள்ளார் இயக்குநர் பிரசாந்த் நில். குறிப்பாக முதல் பார்ட்டில் வழங்கிய அதிகமான ஹைப்பையும், அது ஏற்படுத்திய எதிர்பார்ப்பையும் கொஞ்சம் கூட ஏமாற்றாமல் வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளார். சுமார் இரண்டே முக்கால் மணி நேரம் ஓடக்கூடிய இந்த படம், ஒரு இடத்தில் கூட அயர்ச்சியை ஏற்படுத்தாதவாறு காட்சிக்கு காட்சி ரசைக்க வைக்கும் வித்தையை அள்ளி தெளித்து ‘வாவ் ‘ சொல்ல வைக்கிறார்.எல்லாவற்றிலும் மேலாக மூன்றாம் பாகம் வருமென்பதை உணரச் செய்து இப்போதே ஏங்க செய்த விட்டதிலும் ஸ்கோர் செய்து விட்டார்கள் இந்த கே ஜி எஃப் டீம்.

Related Posts

error: Content is protected !!