கான்பூர் அருகே ரயில் விபத்தில் 95 பேர் பலி; பலர் படுகாயம்
உ.பி.யில் இன்று இந்தூரில் இருந்து பீஹார் மாநிலத் தலைநகர் பாட்னாவிற்கு சென்று கொண்டிருந்தது இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ். இதில் பயணம் செய்து கொண்டிருந்த பெரும்பாலான பயணிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். அப்போது, உ.பி.யின் கான்பூரில் உள்ள ஊரகப்பகுதியின் புக்கரையான் அருகே விடியற்காலை கடந்த ரயிலில் திடீர் என விபத்து ஏற்பட்டது.

சரியாக 3.10 மணிக்கு அதன் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து இறங்கத் துவங்கின. தொடர்ந்து அடுத்தடுத்து 14 ரயில் பெட்டிகளும் ஒன்றன் மீது ஒன்றாக மோதி நசுங்கின. இதில், உயிரிழந்த பயணிகளின் 95 உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. 150-க்கும் அதிகமான பயணிகள் படுகாயம் அடைந்து 100 கி.மீ தொலைவிலுள்ள கான்பூர் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து உ.பி.யின் சட்டம்-ஒழுங்கு கூடுதல் இயக்குநர் ஜெனரலான தல்ஜித் சிங் சவுத்ரி ‘தி இந்து’விடம் கூறுகையில், ”முன்பகுதியில் இருந்த இரு பொதுபயணிகள் பெட்டி, 4 குளிர்சாதன பெட்டி மற்றும் எஸ்-1 முதல் எஸ்-6 வரையிலான ரிசர்வ் உட்பட 14 பெட்டிகள் மிகவும் மோசமாக நசுங்கியுள்ளன. எஸ்-7 முதல் எஸ்-12 வரையிலான பெட்டிகள் பாதுகாப்பாக உள்ளன. இதில் இருந்த பயணிகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. இதில் சிக்கிய பயணிகளை மீட்க பல பெட்டிகளை கேஸ் கட்டரால் வெட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது. இருட்டில் தடைபட்டிருந்த மீட்புப் பணிகள் விடியலில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன” எனத் தெரிவித்தார்.
உ.பி. முதல்வர் அகிலேஷ் சிங் யாதவ் தம் நேரடியாகத் தலையிட்டு மீட்புப் பணிகளை முடுக்கி விட்டிருக்கிறார். உ.பி.யின் லக்னோவில் முகாம் இட்டுள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் உடனடியாக புக்கரையான் அடைந்து தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு உதவியாக, உ.பி. போலீஸ், மத்திய பாதுகாப்பு படை, ரயில்வே போலீஸ் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்திய ராணுவத்தின் 250 வீரர்களும் மீட்புப்பணியில் இறங்கியுள்ளனர். இவர்களுக்கு உதவியாக ஐம்பதிற்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் செயல்பட்டு வருகின்றன.
விபத்து ரயிலில் மீட்கப்பட்ட பயணிகள் பத்திரமாக வீடு திரும்பும் பொருட்டு உ.பி. மாநில அரசின் சிறப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இதையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என உத்தரப் பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்றும் மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும் உத்தரப்பிரதேச முதல்வர் அகிகேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்


