‘அடப் பாவமே’ என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. யாரை நினைத்து?
‘அனைவருக்கும் வீடு, மோட்டார் சைக்கிள், வீட்டுக்கொருவருக்கு வேலை, அனைவரும் கார் வாங்கும் அளவுக்கு பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவோம்…’ என்று இதுபோல் மொத்தம் பன்னிரண்டு வாக்குறுதிகளை ஏதோ துண்டுப் பிரசுரம்போல அள்ளிக் கொடுத்திருக்கிறார் ஒருவர். யார் அவர்? தவெக தலைவரான நம்ம விஜய் ஐயா அவர்கள்தான். உண்மையிலேயே மக்களுக்காக, தான் கொடுக்கும் வாக்குறுதிகள் என்று நினைத்துத்தான் இவற்றையெல்லாம் எழுதினாரா அல்லது தனது அடுத்த படத்திற்கான கதையமைப்பு என்று நினைத்து எழுதினாரா என்று தெரியவில்லை. இப்படிச் சொல்வதால், நாம் ஏதோ விஜய் ஐயா அவர்களின் மேம்பட்ட அரசியல் அறிவையோ, திரண்ட பொருளாதாரச செறிவையோ குறைத்து மதிப்பிடுவதாக அவருடைய அறிவுச் சுடர் மிளிரும் தொண்டர்கள் யாரும் நினைத்துவிட வேண்டாம் என்று மிகுந்த பணிவுடன் பாதந்தாங்கிக் கேட்டுக் கொள்கிறோம்.
கல்வியின் அருமையைப் படிக்காத மேதையான கர்மவீரர் காமராஜர் அவர்கள் உணர்ந்திருந்ததால்தான், ‘கல்விக்கண் திறந்த காமராஜர்’ என்று சொல்லுமளவுக்குப் பள்ளிகளைத் திறந்தார். அதுபோல, கல்லூரிப் பக்கம் எட்டியும் பார்த்திராதவர் விஜய் என்பதால்தான், வீட்டிலுள்ள ஒவ்வொருவரும் பட்டப் படிப்புப் படித்திருக்க வேண்டும் என்று விரும்புகிறார் என்பதை நாம் எந்தவிதமான ஐயத்திற்கும் இடமின்றி நம்புகிறோம். விஜய் அவர்களின் நல்லெண்ணமும் மக்கள் நலனில் அவர் கொண்டிருக்கும் அளவிலாக் காதலும் நமக்கு நன்றாகவே புரிகிறது. ஆனால், இங்குள்ள பொருளாதாரப் புலிகளுக்குப் புரியுமா? இதற்கெல்லாம் எங்கிருந்து நிதி வரும் என்று வானத்துக்கும் பூமிக்குமாக எம்பியெம்பிக் குதிப்பார்களே? அவர்களுக்கு விஜய் என்ன பதில் சொல்லப் போகிறார்? முன்பு என்ன நடந்தது தெரியுமா?

கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலின்போது, ‘நியாய விலைக் கடைகளில், இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்படும்’ என்று கலைஞர் வாக்குறுதி கொடுத்தார். எல்லாப் பொருளாதாரப் புலிகளும் ‘சாத்தியமேயில்லை’ என்று ஒற்றைக் காலில் நின்றபடி கூவோகூவென்று சப்தமிட்டுக் கூவினார்கள். அப்போது இங்கே சட்டமும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் எம்பிஏவும் படித்திருந்ததோடு, இந்திய நிதியமைச்சராகவும் இருந்த ப. சிதம்பரம் என்ன சொன்னார் தெரியுமா? ‘கலைஞரின் வாக்குறுதி நிறைவேற்றப்படக்கூடிய ஒன்றுதான்; சந்தேகமே வேண்டாம்’ என்று ஊரூராக ஓடியோடிச் சொன்னார். கலைஞரின் வாக்குறுதியை அதுவரை ‘முன்னாடி பார்த்தால் நாயக்கர் குதிரையாகவும பின்னடி பார்த்தால் ராவுத்தர் குதிரையாகவும் இருக்கிறதே’ என்று சந்தேகத்தோடு பார்த்த மக்கள், கலைஞரோடு சேர்ந்து, சிதம்பரமும் விளக்கிய பிறகுதான் முழுமையாக நம்பினார்கள். கலைஞரும் தாம் வென்று ஆட்சிக்கு வந்ததுமே அதை உடனடியாகச் செயல்படுத்தினார். 2008-ல் ஒரு ரூபாய்க்கே ஒரு கிலோ என்றாக்கினார்.
2011-ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, அரிசியை முற்றிலும் இலவசமாக்கினார்; மன்னிக்கவும் விலையில்லாமலாக்கினார். இதற்கும் மற்ற மக்கள் நலத் திட்டங்களுக்கும் பட்ஜெட்டில் நிதியொதுக்குவதற்கே ஆட்சியாளர்களுக்கு நாக்குத் தள்ளிவிடுகிறது. இதன்காரணமாகவே, தவறென்று தெரிந்தும் ‘டாஸ்மாக்’ கை மூட முடியாமல் தவியாய்த் தவிக்கிறார்கள். இந்த விஷயத்தில், நீங்களும் புத்திசாலிதான். சட்டம் – ஒழுங்கையும் பெண்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தப் போவதாகச் சொல்லியிருக்கும் நீங்கள், ‘டாஸ்மாக்’ பற்றி வாயை இறுக்கமாக மூடிக்கொண்ட உங்கள் சாமர்த்தியத்தைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
இருப்பினும், உங்கள் வாக்குறுதிகளான வீட்டுக்கும் பைக்குக்கும் எங்கிருந்து பட்ஜெட் போடுவீர்கள்? வீட்டுக்கொருவருக்கு வேலை கொடுக்க என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்? இதற்கெல்லாம் ‘டாஸ்மாக்’ கடைகளை அதிகப்படுத்தினாலும் போதாதே! கரூரில் நடந்த பெருந்துயரின்போது, உங்களை அட்டைபோல் ஒட்டிக் கொண்டிருக்கும் உங்கள் தானைத் தளபதிகள் இருவரும் உங்களோடு இருந்தார்களா? தாங்கள் தப்பித்தால் போதுமென ஓடியல்லவா ஒளிந்து கொண்டார்கள். கைதாகப் போவதில்லை என்று உறுதியாகத் தெரிந்த பிறகுதானே வெளியில் எட்டிப் பார்த்தார்கள்! இப்படி, மண்குதிரைகளை நம்பியா ஆற்றில் இறங்கப் போகிறீர்கள்?
முத்தாய்ப்பாக உங்களுக்கு ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள ஆசைப் படுகிறோம். உண்மையில், உங்களுக்கு வெளியுலகைக் காட்டும் ஜன்னலாகவும் உங்களையே உங்களுக்குக் காட்டும் கண்ணாடியாகவும் இருப்பவர்கள் பத்திரிகையாளர்களும் ஊடகக்காரர்களும்தான். அவர்களை நீங்கள் என்றைக்குச் சந்திக்க ஆரம்பிக்கிறீர்களோ, அன்றைக்குத்தான் உங்களுக்கான அரசியல் பாதையின் தரிசனம் கிட்டும். இல்லையேல்…வெரி வெரி ஸாரி விஜய் ஜி!
செ. இளங்கோவன்


