சொந்த ஊரில் ஐடி வேலை: சோஹோவின் மெகா ஆஃபர்!

சொந்த ஊரில் ஐடி வேலை: சோஹோவின் மெகா ஆஃபர்!

மென்பொருள் உலகில் ஒரு தனி சாம்ராஜ்யத்தையே கட்டி ஆண்டுக் கொண்டிருக்கும் ‘சோஹோ’ (Zoho) நிறுவனம், தமிழக இளைஞர்களுக்கு ஒரு அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. “எங்களிடம் வேலை சேர பட்டம் (Degree) அவசியமில்லை, புத்திசாலித்தனமான கோடிங் தெரிந்தால் போதும்” எனச் சொல்லும் ஸ்ரீதர் வேம்புவின் படையில் இணைய இதுவே மிகச்சிறந்த தருணம்.

சொந்த ஊரில் வேலை… உலகத் தரத்தில் மென்பொருள்!

வழக்கமாக ஐடி வேலை என்றாலே சென்னை ஓஎம்ஆர் (OMR) டிராஃபிக்கில் சிக்க வேண்டும் என்பதுதான் பலரின் எண்ணம். ஆனால், சோஹோவின் பாணியே தனி. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மென்பொருள் பொறியாளர் (Software Developer) பணியிடங்கள் சென்னைக்கு மட்டுமல்லாமல், தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களுக்கும் பரவலாக்கப்பட்டுள்ளது:

  • மதுரை

  • கோவை

  • சேலம்

  • திருநெல்வேலி

  • தென்காசி

கிராமப்புறச் சூழலில் இருந்தபடியே உலகத் தரத்திலான மென்பொருள்களை உருவாக்கும் அரிய வாய்ப்பு இது. அம்மா கைப்பட சமைத்த உணவைச் சாப்பிட்டுக்கொண்டே, சொந்த ஊரில் செட்டில் ஆக நினைப்பவர்களுக்கு இது ‘ஜாக்பாட்’.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

  • பணி: சாஃப்ட்வேர் டெவலப்பர் (Software Developer).

  • அனுபவம்: இது முற்றிலும் திறமைக்கான களம். 0 முதல் 5 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ள எவர் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.

  • கல்வித் தகுதி: பி.இ, பி.டெக், எம்.சி.ஏ எனப் பெரிய பட்டங்கள் உங்களிடம் இல்லாவிட்டாலும் கவலையில்லை. “என்னிடம் சர்டிபிகேட் இல்லை, ஆனால் கோடிங்கில் (Coding) நான் கில்லாடி” என்று சொல்பவர்களையும் சோஹோ சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறது.

தேர்வு முறை: மூளைக்கு மட்டுமே வேலை!

சோஹோவின் நேர்காணல் என்பது உங்கள் மதிப்பெண் பட்டியலை மேய்வது அல்ல, உங்கள் லாஜிக்கல் சிந்தனையைச் சோதிப்பது.

  1. ஆன்லைன் தேர்வு: ஆப்டிட்யூட் மற்றும் சி-புரோகிராமிங் (C-Programming) அடிப்படை கேள்விகள்.

  2. புரோகிராமிங் ரவுண்ட்: லூப்ஸ் (Loops), அரே (Array) போன்றவற்றை வைத்துச் சிறிய புரோகிராம்களை உருவாக்க வேண்டும்.

  3. அட்வான்ஸ்டு ரவுண்ட்: இதுதான் ‘கேம் சேஞ்சர்’. ரயில்வே டிக்கெட் புக்கிங் அல்லது ஸ்நேக் கேம் (Snake Game) போன்ற முழுமையான சிஸ்டத்தை வடிவமைக்கச் சொல்வார்கள்.

  4. இறுதிச் சுற்று: டெக்னிக்கல் மற்றும் எச்.ஆர் (HR) நேர்காணல்.

வெற்றி பெற டிப்ஸ்!

சோஹோவில் நுழைய ‘சி’ (C) மற்றும் ‘ஜாவா’ (Java) மொழிகளில் லாஜிக் ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும். மனப்பாடம் செய்து ஒப்பிக்க நினைக்காதீர்கள்; அது இங்கு எடுபடாது. ‘கால் டாக்ஸி புக்கிங்’, ‘பார்க்கிங் லாட் சிஸ்டம்’ போன்ற ரியல் டைம் புராஜெக்ட்களை இப்போதே எழுதிப் பயிற்சி எடுங்கள்.

விண்ணப்பிப்பது எப்படி?

ஆர்வமுள்ள இளைஞர்கள் careers.zohocorp.com என்ற இணையதளத்தில் ‘Software Developer’ பிரிவில் உடனடியாக விண்ணப்பிக்கலாம். உங்கள் ரெஸ்யூம் (Resume)-ஐ ஒருமுறை மெருகேற்றிக் கொள்ளுங்கள் பாஸ்!

நெல்லை, மதுரை, கோவை எனத் தமிழகத்தின் மூலைமுடுக்கில் இருக்கும் திறமைசாலிகள் இந்த வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்!

தனுஜா

Related Posts