ஆளுநர் பதவி தேவையே இல்லை என்ற முடிவுக்கு வர வேண்டிய காலகட்டம்!
வயதான தாத்தாக்கள் செக்யூரிட்டியாக ஏ.டி.எம். களில், அபார்ட்மென்ட்களில் பணியாற்றுவதைப் பார்த்திருப்போம். அவர்களால் திருடர்களை எதிர்த்துச் சண்டையிட முடியுமா எனக் கேட்டால் முடியாது தான். ஆனாலும், ஓர் ஆள் கணக்கிற்கு அங்கே இருப்பதுதான் அவர்களின் பணி. அவர்களால் இயன்ற அளவுக்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். சந்தேகப்படும்படி எவரேனும் இருந்தால் அலர்ட் செய்வார்கள். ஏதேனும் அசம்பாவிதம் என்றால் காவல்துறைக்குத் தகவல் கொடுப்பார்கள். ஆக, குறைந்த ஊதியத்தில் காவல் பணிக்கு ஒருவரை நியமித்ததுபோல் இருக்கும், அந்தப் பெரியவருக்கும் வருமானம் வந்ததாக இருக்கும்.

கிட்டத்தட்ட ஆளுநர் பதவி என்பதும் அதேபோலத் தான். ஒன்றிய அரசின் சார்பாக ஒப்புக்கு நியமிக்கப்பட்டவர் தான் ஆளுநர். ஆளுங்கட்சியைச் சேர்ந்த ரிட்டயர்டு ஆட்களுக்கு ஒரு சொகுசான அரசாங்கப் பணிதான் இது. மாநில அரசின் செயல்பாடுகள் குறித்து ரிப்போர்ட்டுகளை அனுப்பிக் கொண்டிருக்க வேண்டியது தான் அவர்களின் பணி. ஒன்றிய அரசோ, சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற அமைப்புகளைத் தங்கள் ஏவலாள்களாகப் பயன்படுத்துவதைப்போல், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களையும் இவ்வாறு பயன்படுத்தப் பார்க்கிறது.
நாம் மன்னராட்சிக் காலத்திலிருந்து மாறி, அந்நியரிடம் அடிமைப்பட்டிருந்த காலத்திலிருந்தும் மாறி, நமக்கு நாமே ஆட்சி செய்யும் ஜனநாயக முறைக்கு மாறி விட்டோம். இங்கே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர், முதலமைச்சர் போன்ற பதவிகளுக்குத் தான் அதிகாரங்கள் அதிகம். ஜனாதிபதி, கவர்னர் போன்ற பதவிகள் டம்மியான பதவிகள் தான். டம்மியாக இருப்பது தான் ஜனநாயகத்துக்கும் நல்லது. மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களை மீறி, அதிகாரிகளும் கவர்னர்களும் அதிகாரம் செலுத்தத் தொடங்கினால் அது ராணுவ ஆட்சிக்கு ஒப்பானது.
செஸ் ஆட்டத்தில் ஒவ்வொரு காய்களுக்கும் நகர்வதில் ஓர் வரம்பு இருக்கும். அந்த வரம்பிலிருந்து விளையாடுவது தான் அந்த ஆட்டத்தின் சிறப்பே. அதேபோல் ஆளுநர் பதவிக்கென்று ஓர் வரம்பு இருக்கிறது. அதை மீறி, ஒன்றிய அரசின் ஏவலாள் போல எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குக் குடைச்சல் கொடுப்பது, சட்ட மன்றத்தில் நிறைவேற்றிய மசோதாக்களைக் கிடப்பில் போடுவது, அந்தந்த அரசின் கொள்கைகளுக்கு மாறாகப் பொது வெளியில் பேசுவது என எதிர் அரசாங்கம் நடத்துவதும், அதை வேடிக்கை பார்ப்பதும் ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. அப்படியானால் கவர்னர் பதவிக்கு மாநில அரசுகள் எதற்குச் செலவழிக்க வேண்டும்? ஒன்றிய அரசிடமே சம்பளம் வாங்கிக் கொள்ளலாமே?
ஆளுநர் பதவி தேவையே இல்லை என்ற முடிவுக்கு வர வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். பாராளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவுக்கு ஜனாதிபதியையே அழைக்காமல் அசிங்கப்படுத்தும் ஒன்றிய அரசு, ஆளுநரை வைத்துக்கொண்டு ஆட்டம் போட நினைப்பது நகை முரண். மற்ற மாநிலங்களில் இப்படி சில்லறைத்தனமான செயல்களில் இறங்குவதை விட்டுவிட்டு, இன்றுவரை கலவரம், உயிர்ப்பலி என்று தொடரும் மணிப்பூர் மாநிலத்தைக் கவனிக்கட்டும்… முதலில் அந்த மாநிலத்துக்குள் தைரியமாக மவுனச்சாமி நுழையட்டும்! அதுதான் இப்போதைக்கு இவர்கள் செய்ய வேண்டிய தலையாய பணி!


