ஆதித்யா-எல்1 விண்கலம் அறிவியல் தரவுகளை சேகரிக்கத் தொடங்கிடுச்சு – இஸ்ரோ அறிவிப்பு.!

ஆதித்யா-எல்1 விண்கலம் அறிவியல் தரவுகளை சேகரிக்கத் தொடங்கிடுச்சு – இஸ்ரோ அறிவிப்பு.!

ம் நாட்டின் சந்திரயான் 3 வெற்றிகரமாக விண்ணில் இருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்த வெற்றியை தொடர்ந்து பல்வேறு நாடுகள் இந்தியாவுடன் சேர்ந்து விண்வெளி தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள முன்வந்துள்ளன. இந்நிலையில் இந்தியாவுக்கு மற்றொரு மைல் கல்லாக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.சி-57 ராக்கெட் மூலம் சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா-எல்1 என்ற விண்கலம் கடந்த 2ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. பூமியில் இருந்து 125 நாட்கள் பயணம் செய்து விண்கலம் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ‘லாக்ராஞ்சியன் புள்ளி-1ஐ சென்றடையும். அங்கிருந்து சூரியனை ஆய்வு செய்யும் பணியில் விண்கலம் ஈடுபடும். அதற்கு முன்னதாக ஆதித்யா எல்-1 விண்கலம் 16 நாட்கள் பூமியைச் சுற்றி வரும் போது 5 முறை சுற்றுப்பாதையின் அளவு உயர்த்தப்படுகிறது.

அந்தவகையில் பூமியின் சுற்றுப்பாதையை உயர்த்துவதற்கான முதல் கட்டப்பணி கடந்த 3ம் தேதி நடந்தது. தொடர்ந்து அடுத்து 2-ம் கட்டமாக கடந்த 4ம் தேதி அதிகாலை 3 மணி அளவில் மீண்டும் சுற்றுப்பாதை உயர்த்தும் பணி நடந்தது. தொடர்ந்து 3-வது கட்டமாக சுற்றுவட்டப்பாதை உயர்த்தும் பணி கடந்த 10ம் தேதியும், 4வது முறையாக சுற்றுவட்ட பாதை உயர்த்தும் பணி 15ம் தேதியும் வெற்றிகரமாக நடந்தது. இந்த நிலையில், ஆதித்யா-எல்1 விண்கலம் அறிவியல் தரவுகளை சேகரிக்கத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

அதாவது இந்த விண்கலத்தில் சூப்ரா தெர்மல் & எனர்ஜிடிக் பார்ட்டிகல் ஸ்பெக்ட்ரோமீட்டர் (STEPS) கருவி பொருத்தப்பட்டிருக்கிறது. பூமியை சுற்றி இருக்கும் அதிவெப்ப மற்றும் ஆற்றல் அயனிகளை அளவிடுவதுதான் இதன் பணியாகும். பூமியை சுற்றி காந்த புலன் இருக்கிறது. இது மிகவும் ஆச்சரியமான ஒரு அம்சமாகும். அங்குள்ள அதிவெப்ப ஆற்றல், அயனிகள் மற்றும் எலக்ட்ரான்களை ஆதித்யா எல் 1 விண்கலம் அளவிட தொடங்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமியில் இருந்து 50 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் STEPS என்ற கருவி செயல்படத் தொடங்கியது என்றும், STEPS கருவியின் சென்சார்கள் அதிவெப்ப மற்றும் ஆற்றல்மிக்க அயனிகள் மற்றும் எலக்ட்ரான்களை அளவிடத் தொடங்கியுள்ளன என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. 6 சென்சார்கள் கொண்ட இந்த ஆய்வு கருவி வெவ்வேறு திசைகளிலும் தனது ஆய்வுகளை மேற்கொள்ளும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.