ஆம்புலன்ஸ் மீது இஸ்ரேல் தாக்குதல்: 15 பேர் பலி!

ஆம்புலன்ஸ் மீது இஸ்ரேல் தாக்குதல்: 15 பேர் பலி!

டந்த மாதம் 7ம் தேதி அன்று ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது மிக கடுமையான தாக்குதலை நடத்தினர். 20 நிமிடங்களில் 7 ஆயிரம் ஏவுகணைகளை ஏவி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். அதோடு இஸ்ரேலுக்கு நுழைந்து அவர்கள் கடும் தாக்குதலை நடத்தினர். பொதுமக்களை துப்பாக்கியால் சுட்டனர்.இதனால் அன்றைய தினம் மட்டும் 1,400 பேர் பலியாகினர். மேலும் 230 பேர் பிணைக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இஸ்ரேலின் கடந்த 75 ஆண்டு கால வரலாற்றில் இது மோசமான தாக்குதலாக பார்க்கப்படுகிறது. இதனால் இஸ்ரேலும் பதிலடி கொடுக்க தொடங்கியது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போர் தொடங்கியதாக கூறி காசா மீது உக்கிரமான வான்வெளி தாக்குதலை தொடங்கினார். இந்த தாக்குதல் 4வது வாரமாக தொடர்ந்து வருகிறது.

தற்போது காசா மற்றும் மேற்குக் கரையில் உள்ள சுமார் 2 புள்ளி 7 மில்லியன் மக்களின் நிவாரணத்திற்காக 1 புள்ளி 2 பில்லியன் டாலர் அவசர உதவி தேவைப்படுவதாக ஐநா அறிவித்துள்ளது. முதலில் 294 மில்லியன் டாலர் தேவைப்படுவதாக கூறியிருந்த நிலையில் தற்போது நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. இந்த புதிய கோரிக்கையானது உணவு, தண்ணீர், சுகாதாரப் பாதுகாப்பு, தங்குமிடம் மற்றும் அவசர முன்னுரிமைகளுக்கான தேவை என குறிப்பிட்டுள்ளது. மேலும் நன்கொடையாளர்கள் தங்கள் பங்களிப்பை உடனடியாக வழங்குமாறும் ஐநா கேட்டுக் கொண்டுள்ள நிலையில் காசாவில் உள்ள அல்–ஷிபா மருத்துவமனையின் முன்பு இருந்த அவசர ஊர்திகள் (ஆம்புலன்ஸ்) மீதும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 60 பேர் காயமடைந்துள்ளனர். அவசர ஊர்திகளில் மோசமான நிலையில் உள்ள நோயாளிகள், ராபா எல்லை வழியாக எகிப்துக்கு அழைத்து செல்லப்படவிருந்ததாகக் காசா அமைச்சகம் தெரிவித்துள்ளது. ”ஒட்டுமொத்த உலகத்துக்கும் நாங்கள் சொல்ல விரும்புகிறோம். இவை மருத்துவ அவசர ஊர்திகள் தான்” என்று காசாவின் சுகாதார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அஷ்ரப் அல்-குத்ரா தெரிவித்துள்ளார். மருத்துவ அவசர ஊர்திகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தைச் சுற்றி ஏராளமான பொதுமக்கள் இருந்ததாகவும் தெரிகிறது.

இஸ்ரேலிய வீரர்கள் போர்ப் பகுதியில் இந்த வாகனங்களை ஹமாஸ் பயன்படுத்தியதைக் கண்டறிந்ததாகவும் அதனாலே தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், ஹமாஸ் தங்களின் வீரர்கள் மற்றும் ஆயுதங்களை இடம் மாற்ற அவசர ஊர்திகளைப் பயன்படுத்துவதாகவும் இந்தத் தாக்குதலில் ஹமாஸ் போராளிகள் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

காசாவின் மிகப் பெரிய மருத்துவமனைகளில் ஒன்றான அல்-ஷிபா மருத்துவமனை கூட்ட நெரிசலைச் சந்தித்து வருகிறது. காசாவின் பெரும்பாலான மருத்துவமனைகள் முடங்கியுள்ள நிலையில் இந்த மருத்துவமனையும் போதிய மருத்துவ வசதி வழங்க இயலாது வகையில் திணறி வருகிறது. இதுவரை பலியான பாலஸ்தீனர்கள் எண்ணிக்கை 9,200. மேலும், காயமுற்றவர்கள் எண்ணிக்கை 23,500.. இந்த நிலையில் தற்காலிக போர் நிறுத்தம் என்கிற பேச்சுக்கே இடமில்லை என இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

error: Content is protected !!