சனாதனத்தில் உடன்கட்டை வழக்கமில்லையா?

சனாதனத்தில் உடன்கட்டை  வழக்கமில்லையா?

‘உடன்கட்டை வழக்கம் சனாதன தர்மத்தில் கிடையாது. அந்நியர் படையெடுப்பின் போது அவர்களிடம் இருந்து தங்களை பெண்கள் காத்துக் கொள்ளத் துவங்கிய விஷயம்தான் உடன்கட்டை வழக்கம்,’ என்று அண்ணாமலை அவர்கள் சமீபத்தில் பேசி இருக்கிறார். இந்தத் தகவலை அவர் எங்கிருந்து எடுத்தார் என்று தெரியவில்லை. ஒருவேளை பத்மாவத் படம் பார்த்து விட்டு அதில் சித்தரிக்கப்பட்டதுதான் உண்மை வரலாறு என்று நம்பி இருப்பார் என்று கணிக்கிறேன்.

உடன்கட்டை வழக்கம் சுமார் பொயுமு 5ம் நூற்றாண்டில் துவங்கி இருந்திருக்கலாம் என்று கணிக்கிறார்கள். குப்தர்கள் காலத்துக்கு கொஞ்சம் முன்னால் இதன் துவக்கம் இருந்திருக்கலாம். வேதங்களிலேயே உடன்கட்டை பற்றிய குறிப்புகள் உள்ளன. ‘உடல் முழுவதும் வாசனை திரவியங்களை அப்பிக் கொண்டு கணவனின் இறந்த உடலுடன் படுத்துக் கொள்; அழாதே, வருந்தாதே’ என்று மனைவிக்கு உத்தரவிடும் வரிகள் ரிக் வேதத்தில் வருகின்றன.[1] ஆனால் அந்தப்பெண் உடன்கட்டைதான் ஏறினாள் என்று தெளிவாக சொல்லவில்லை; எனவே ஆய்வாளர்கள் ஆளுக்கு ஆள் இதில் மாறுபடுகிறார்கள்.

ஆனால் நான்காம் வேதமான அதர்வ வேதத்தில் தெளிவாகவே சொல்லப்பட்டிருக்கிறது. ‘இந்தப் பெண் தன் (இறந்த) கணவனின் உலகைத் தேர்ந்தெடுக்கிறாள். அய்யோ. அவனது உயிரற்ற உடலின் அருகில் படுத்திருக்கிறாளே! பண்டைய வழக்கத்தைத் பாராமரிப்பதில் என்ன ஆர்வம்? அவளுக்கு நலம் உண்டாகட்டும்,’ [2] என்று வருந்துகிறது. எனினும் அடுத்த வரியில், அப்படிப் போகாதே கண்ணே, எழுந்திரு, என்று அவளை கெஞ்சிக் கேட்கிறது, எனினும் இந்த வரிகள் உடன்கட்டை வழக்கம் வேத காலத்திலேயே இருந்ததை சுட்டிக் காட்டுகிறது. அது பண்டைய பாரம்பரியம் என்றும் குறிக்கிறது.

சனாதனத்தை தூக்கிப் பிடித்துப் போற்றிய மகாபாரதத்திலும் உடன்கட்டை வருகிறது. மாத்ர குல அரசனின் மகள் மாத்ரி கணவனுடன் உடன்கட்டை ஏறியது குறித்த குறிப்புகள் உள்ளன. ‘எருது போன்ற உறுதி கொண்டவனின் சிதையில் அவன் மனைவி, மாத்ர அரசனின் மகள், ஏறி அமர்ந்தாள், என்று வைசம்பாயனர் குறிப்பிட்டார்.’ [3]. என்கிறது. அதே மகாபாராதத்தின் இன்னொரு கதையில் பாண்டுவின் மாமா சுரன் இறந்தவுடன் அவனது நான்கு மனைவிகளையும் சிதையில் ஏற்றினார்கள் என்று வருகிறது.[4]. 

அக்னி புராணத்தில் கணவனுடன் உடன்கட்டை ஏறும் மனைவி நேரடியாக சொர்க்க பதவி பெறுகிறாள் என்கிறது. [5]. கணவனுடன் உடன்கட்டை ஏறும் மனைவி அந்தக் கணவனின் உடலில் எத்தனை முடிகள் உள்ளனவோ அத்தனை ஆண்டுகள் சொர்க்கத்தில் வசிப்பாள், என்று கருட புராணம் உறுதி அளிக்கிறது.[6] 

சிவ புராணத்திலும் ஒரு பிராமணப் பெண் தன் கணவனின் சிதையில் ஏறிய சம்பவத்தை குறிப்பிட்டுப் பேசப்படுகிறது.[7]. தக்ஷ ஸ்மிருதி என்பது இந்து மதத்தின் முதல் சட்ட நூலாக கருதப்படுகிறது. இதில் கணவனுடன் உடன்கட்டை ஏறும் மனைவிக்கு முடிவில்லாத சொர்க்கம் பரிசாகக் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.[8] . முகலாயர்களுக்கும் இந்தக் கொடூர வழக்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சொல்லப் போனால், உடன்கட்டை வழக்கம் குறித்து அக்பர் பெரிதும் வருந்தி இருந்திருக்கிறார். அதனை முழுமையாக நிறுத்த இயலாமல் போகவே, பெண்ணின் சம்மதம் இல்லாமல் அவளை வலுக்கட்டாயமாக சிதையில் ஏற்றக்கூடாது என்று அரசாணை பிறப்பித்திருக்கிறார். [9]

பண்டைய இந்தியா குறித்த பெருமையான கதைகள்தான் இந்துத்துவர்களுக்கு புகட்டப்படுகின்றன. ராமாயண காலத்தில் பிளேன் விட்டுக் கொண்டிருந்தோம். மகாபாரத காலத்தில் ஜெனெடிக் இன்ஜினியரிங் இருந்தது, முஸ்லிம்கள் வந்த பின்னால் எல்லாமே போச்சு, போன்ற புருடாக்களை மட்டுமே உண்மை வரலாறாக நம்பிக்கொண்டு இந்துத்துவர்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி வாழ்ந்தால் அண்ணாமலை அவர்களைப் போலத்தான் பேசத் தோன்றும். சாதியை ஆங்கிலேயர்கள் கொண்டு வந்தார்கள் என்று ஆர்என் ரவி பேசுகிறார். சதியை முகலாயர்கள் கொண்டு வந்தார்கள் என்று அண்ணாமலை பேசுகிறார்.

‘இந்தியா வரலாறு சரியாக எழுதப்படவில்லை, அதனை திருத்தி எழுத வேண்டும்,’ என்று அமித் ஷா முன்னர் ஒரு முறை பேசிய பொழுது இவர்கள் போல எழுதுவதைத்தான் குறிப்பிட்டிருக்கிறார் போல.

– ஸ்ரீதர் சுப்ரமணியம்

தரவுகள்:
=========
1. ரிக் வேதம், 10:18.7
2. அதர்வ வேதம், 18:3.1
3. மகாபாரதம், ஆதி பர்வம், 1:125, 126
4. மகாபாரதம், மௌசல பர்வம், 16:17
5. அக்னி புராணம், 222:19-23
6. கருட புராணம், 1:107:29
7. சிவபுராணம், கோடி ருத்ர சம்ஹிதை, 4.10: 23-24
8. தக்ஷ ஸ்மிருதி 4:18,19
9. Annemarie Schimmel, The Empire of the Great Mughals: History, Art and Culture, Reaktion Books, edited by Burzine K. Waghmar, Page 113

Related Posts

error: Content is protected !!