ஐ.பி.எஸ். அதிகாரிகள் 19 பேர் அதிரடி மாற்றம்!
அதிமுக-வின் முன்னாள் ஆதிக்க சக்திகளான சசி, தினகரன் ஆதரவு ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 19 பேர் நேற்று இரவு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர்.சென்னை நகர போலீஸ் கமிஷனராக 5 முறை பதவி வகித்த ஜார்ஜ், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது தேர்தல் கமிஷனால் மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார். அவர் தற்போது தீயணைப்புத்துறை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். அங்கு இருந்த ஏடிஜிபி ரமேஷ் குடவாலா போலீஸ் பயிற்சி கல்லுாரி ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார். பயிற்சி டிஜிபி மகேந்திரன் டான் ஜட் கோ விஜிலன்ஸ் டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார். அதே போல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த சாரங்கன் அமலாக்கப்பிரிவு ஐஜியாகவும், செந்தாமரைக்கண்ணன் டெக்னிக்கல் சர்வீஸ் ஐ.ஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை நகர நுண்ணறிவு பிரிவு கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன், மாநில குற்றப்பிரிவு சிஐடி ஐ.ஜியாகவும், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த ஜோஷி நிர்மல்குமார் உளவு பிரிவு டிஐஜியாகவும், பிரேம் ஆனந்த் சிம்ஹா, சென்னை (வடக்கு) நகர இணைக் கமிஷனராகவும் மாற்றப்பட்டுள்ளனர். காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜெயக்குமார் விழுப்புரம் எஸ்பியாகவும், செல்வகுமார் பூக்கடை துணை கமிஷனராகவும், முத்தரசி நிர்வாகப்பிரிவு உதவி ஐ.ஜி.யாகவும், நெல்லை எஸ்பி விக்ரமன், கியூ பிராஞ்ச் எஸ்பியாகவும், மதுரை நகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் அருண் சக்தி குமார் நெல்லை எஸ்பியாகவும், நிர்வாக பிரிவு உதவி ஐ.ஜி. திருநாவுக்கரசு சென்னை நகர நுண்ணறிவு பிரிவு துணைக் கமிஷனராகவும், ஈரோடு அதிரடி படை எஸ்பி சிபி சக்கரவர்த்தி திருவள்ளூர் எஸ்பியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
உளவு பிரிவு எஸ்.பி. அருளரசு நாமக்கல் எஸ்பியாகவும், சிபிசிஐடி எஸ்பி., ஓம் பிரகாஷ் மீனா ராமநாதபுரம் எஸ்பியாகவும், மதுரை அமலாக்கப்பிரிவு எஸ்.பி. தேஸ்முக் சேகர் சஞ்சய், நாகப்பட்டினம் எஸ்.பியாகவும், அதிரடி படை உதவி எஸ்.பி. அருண் பால கோபாலன் நெல்லை, நான்குநேரி ஏ.எஸ்.பியாகவும் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக அரசின் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி நேற்று வெளியிட்டார்.
சென்னை நகரில் போலீஸ் நுண்ணறிவு பிரிவுக்கு கூடுதல் கமிஷனர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி தான் இத்தனை நாட்களாக பதவி வகித்து வந்தார். தற்போது நுண்ணறிவு பிரிவு கூடுதல் கமிஷனர் பதவி துாக்கப்பட்டு அது துணை கமிஷனர் அந்தஸ்தில் உள்ள அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்த கடந்த 6 வருடங்களாக தாமரைக்கண்ணன், ஜார்ஜ் உள்ளிட்ட அதிகாரிகள் சென்னை நகரில் அதிகாரத்தில் கொடி கட்டி பறந்தனர். இருவரும் சசிகலாவின் தீவிர ஆதரவாளர்களாக இருந்து செயல்பட்டதால் பதவியை தக்க வைத்தனர். ஆனால், தற்போது சசி, தினகரன் ஆகியோர் அதிமுகவிலிருந்து ஓரங்கட்டப்பட்டுவிட்டதாக இபிஎஸ் அணியினர் அறிவித்ததை தொடர்ந்து தற்போது சசி, தினகரனின் ஆதரவு ஐபிஎஸ்கள் துாக்கியடிக்கப்பட்டது தமிழக காவல்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்.கே.நகர் தேர்தலின் போது தேர்தல் கமிஷனால் மாற்றப்பட்ட ஜோசி நிர்மல் குமார், சாரங்கன், ஜெயகுமார், செல்வகுமார் ஆகியோருக்கும், மீண்டும் பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கூவத்துாரில் சசிகலா, எடப்பாடி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ததால் மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த செந்தாமரைக்கண்ணன், முத்தரசி ஆகியோர் டம்மி பதவிக்கு துாக்கியடிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது..


